Sri Lanka

தேர்தல் ஆணையத்திலிருந்து பேரா. ரட்ணஜீவன் ஹூலை அகற்றும் முயற்சியா?

மகள் எழிலினி பற்றிக் கதைகளைக் கட்டும் தென்னிலங்கை ஊடகங்கள்

செய்தி அலசல்

கடந்த சில நாட்களாகப் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தென்னிலங்கை இனவாத சக்திகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தற்போது இசக்திகளின் ஊதுகுழல்களாகவிருக்கும் ஊடகங்கள் அவரது மகள் எழிலினியையும் சந்திக்கு இழுத்திருக்கின்றன.

பேராசிரியர் ஹூல் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் ஒருவர். தற்போது எழுந்துள்ள தேர்தல் திகதி நிர்ணயம் தொடர்பான இழுபறிகளில் பேராசிரியர் ஹூல் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிப்பது, அவர் தமிழராக இருப்பது, ராஜபக்ச தரப்பின் தில்லு முல்லுகளுக்கு இணங்கிப் போகாமை என அவரை விமர்சிப்பவர்களுக்கான காரணங்களாகவிருக்கலாம்.

கடந்த இரு நாட்களாக அவரது மகள் எழிலினி பற்றிய செய்திகளைத் தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக மோபின, சிலோன் ருடே ஆகிய பத்திரிகைகள் அவற்றின் 20, 21 ம் திகதிப் பிரசுரங்களில் எழிலினி பற்றியும், தன்னைப் பற்றியும், உண்மைக்குப் புறம்பாக எழுதியுள்ளதாக பேராசிரியர் ஹூல் இன்று (21) கொலொம்பொ ரெலிகிராஃப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.நடந்தது என்ன?

எழிலினி, பேராசிரியர் ஹூலின் இரண்டாவது மகள். இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருப்பவர். கோவிட்-19 நோய்தொற்றுக் காரணமாக, அவர் லண்டனில் முடக்கப்பட்டிருந்தார். இவரைப் போன்று பிரித்தானியாவில் பல மாணவர்கள் சிக்குப்பட்டிருந்தனர். இலங்கை அரசு இவர்களை விசேட விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவந்தது. அரசு ஒழுங்கு செய்தபடி எழிலினி கொழும்பிலுள்ள ஒரு பிரபல ஓட்டலில், அவரது சொந்தச் செலவில், 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டார். இறுதியில் அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, நோயில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதும் வீடு போக அனுமதிக்கப்பட்டார். அவரது ‘விடுதலை’க்கான அனுமதிப் பத்திரம், லெப். ஜெனெரல் டி சில்வாவினாலும், மருத்துவ அதிகாரி டாக்டர் அனில் ஜயசிங்கவினாலும் கையெழுத்திடப்பட்டிருந்தது. மகளை அழைத்துக்கொண்டு பேராசிரியர் ஹூல் அவர்கள் தனது பணிமனைக்குச் சென்றிருக்கிறார். அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகியது.

பேராசிரியர் ஹூலின் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் எழிலினி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் ஏதுமில்லாது தமது அலுவலகத்துள் நுழைந்துவிட்டார் எனக்கூறிப் பயத்தில் முறைப்பாடு செய்தனர். எழிலினி 14 நாட்கள் ஒட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விடயம் ஆணையத் தலைவர் தேசப்பிரியவிற்குத் தெரிந்திருந்தும் அவர் தனது பணியாளர்களுக்கு அதைத் தெரிவித்திருக்கவில்லை. பேராசிரியரும், மகளும் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டுவிட்டது. அலுவலகம் முற்றாக கிருமிநாசினிப் புகை அடிக்கப்பட்டது. தந்தையும் மகளும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர். போகும்போது அவர்களது வாகனம் இராணுவத் தடுப்புக்களில் பரிசோதிக்கப்பட்டது. தான் சென்ற வாகனம் (ஆணையத்தினது) பற்றிய தகவல்களை ஆணையம் தான் இராணுவத்துக்குக் கொடுத்திருக்கவேண்டுமெனப் பேராசிரியர் சந்தேகிக்கிறார்.

பழிவாங்கலா?

கொலொம்பொ ரெலிகிராஃப் பத்திரிகையில் பேராசிரியர் எழுதிய கட்டுரையின்படி, 20, 21ம் திகதிகளில் மோபிம, சிலோன் ருடே ஆகிய பத்திரிகைச் செய்திகள், எழிலினியும், அவரோடு தொடர்பு கொண்ட அவரது தந்தையார், வாகனச் சாரதி ஆகியோர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகியிருக்கவேண்டுமெனவும் பேராசிரியரைப்பற்றியும் அவரது மகளைப்பற்றியும் உண்மைக்குப் புறம்பானதும் அவதூறைப் பரப்புவதுமான செய்திகளைப் பிரசுரித்திருந்தன. இது குறித்து எழுதப்பட்ட திருத்தக் கட்டுரையை அவை பிரசுரிக்க மறுத்துவிட்டன எனவும், தேர்தல் ஆணையகத் தலைவரும் இவ்விடயத்தில் பலவிடங்களில் தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, திருத்தவோ தவறியிருக்கிறார் எனவும் பேராசிரியர் கூறுகிறார்.

யாழ்ப்பாணத்துக்குச் சென்றதும் பேராசிரியர் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் பல கெடுபிடிகளைச் செய்திருந்தனர் எனவும், எழிலினி, பேராசிரியர், வாகனச் சாரதி ஆகிய மூவரும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு ஆளாகவேண்டுமெனக் கட்டளையிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆனால், எழிலினிக்கு வழங்கிய அத்தாட்சிப் பத்திரத்தில், சுய தனிமைப்படுத்தல் பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை எனப் பேராசிரியர் கூறுகிறார்.தேர்தல் அரசியல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களிலும் சர்வ அதிகாரங்களைக் கொண்டது தேர்தல் ஆணையம். ஜனாதிபதியால் கூட அதற்குக் கட்டளையிடமுடியாதவாறு 19 வது அரசியலமைப்புத் திருத்தம் செய்துவிட்டது.

இத் தேர்தல் ஆணையத்தில் தற்போது இருக்கும் மூன்று ஆணையாளர்களில் பேராசிரியர் ஹூல் மிகவும் கறாரானவர். எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை அப்படியே சொல்லிவிடுபவர். இவர் அங்கு இருப்பதால் தேர்தல் ஆணையம் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நடக்க முடிகிறது. ஆணையாளரும் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய ஒரு இடதுசாரி, முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட, நேர்மையான மனிதர் என ஒரு காலத்தில் புகழப்பட்டவரெனினும், சமீப காலங்களில் ராஜபக்சக்கள் அவரை வளையச் செய்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது. தேர்தல் திகதி நிர்ணயம் மட்டுமல்லாது, தேர்தல் காலத்தில் நடைபெறும் ஒழுங்கீனங்கள் குறித்து ஆணயம் மிகவும் கறாராக நடந்துகொள்வதை ராஜபக்சக்கள் விரும்பவில்லை. எனவே தங்களுக்குச் சாதகமான ஒருவரை ஆணையத்துக்குள் கொண்டுவர அவர்கள் முயற்சிக்கிறார்கள். தன் மகனை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு மஹிந்த தேசப்பிரிய, கோதாபயவின் உதவிகளிப் பெற்றிருந்தார் என்பது அம்பலமாகியதும் அவர் தன் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை வைத்துக்கொண்டு பேராசிரியர் ஹூலை வெளியேற்றுவதே ராஜபக்சக்களுக்கு நன்மையளிக்கும். எனவே எழிலினியின் பேரில் இப்போது அரங்கேறி வருவது பேராசிரியரை ஆணையத்திலிருந்து அகற்றும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

பேராசிரியர் ஹூல்

பேராசிரியர் ஹூல் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்களைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்த ஒருவர் எனக் கூறுவார்கள். தன் மனதில் பட்டதை அஞ்சாமல் சொல்லும் செய்யும் ஒருவர் என அறியப்பட்டவர். பலவித அரசாங்கங்களுடனும் அவர் இணைந்து செயற்படுபவர் என அறியப்பட்டவர். ஆனால் அவர் மீது ஊழற் குற்றச்சாட்டு என்று எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் அவர்மீது வேறுவிதமாகச் சேற்றை வீசுவதன்மூலம் அவரை அகற்றிவிடலாமென ராஜபக்ச தரப்பு எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போல தென்னிலங்கை ஊடகங்கள் பல பத்திரிகை தர்மத்தை ஒதுக்கிவிட்டு, இவ்விடயத்தில் ராஜபக்சக்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன எனவே பார்க்கவேண்டியுள்ளது.

-சிவதாசன்