தேர்தலைப் பின்போடுங்கள் – ரணில்
ஜூலை 13, 2020: கோவிட்-19 இரண்டாவது அலை தலைதூக்குவதைக் காரணம் கட்டி பாராளுமன்றத் தேர்தலைப் பின்போடும்படி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.
“கடைசித் தருணம் மட்டும் பார்த்துக்கொண்டிருக்காது, தேர்தல் ஆணையம் உடனடியாகத் தேர்தலைப் பின் போடவேண்டும். சகல கட்சிகளினதும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரங்களுக்காக பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டிருக்கின்றனர். தேர்தல் இறுதி நேரத்தில் பின்போடப்படுமானால் அவர்கள் மேன் மேலும் தேவையில்லாமல் பணத்தை வாரியிறைப்பார்கள். இது அழகல்ல” என ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசும்போது தெரிவித்தார்.
“அத்தோடு, கோவிட்-19 இன் இரண்டாவது அலையை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பிக்கவேண்டும். இல்லாது போனால் அது பொருளாதாரத்தைக் கொன்று போட்டுவிடும். ஏற்கெனவே விழுந்து காயப்பட்ட ஒருவன், இன்னுமொரு தடவை விழ நேர்ந்தால் அவன் மரணமடைவது வழக்கம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சுகாதார அதிகாரிகளை உடனடியாகச் சந்தித்து தேர்தலைப் பின்போடுவது பற்றி ஆலோசிக்க வேண்டும் என ரணில் தெரிவித்தார்.
கோவிட்-19 இன் இரண்டாவது வருகை பற்றி, நானுட்பட, உலக சுகாதார நிறுவனம், மருத்துவர் சங்கம் ஆகியன எச்சரித்திருந்தும், அமது எச்சரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டு விட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.