தேமதுரப் பொங்கல் உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்..

தேமதுரப் பொங்கல் உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்..

Spread the love
தேமதுரப் பொங்கல் உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்.. 1
தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடும் கனடிய பிரதமர் ட்ரூடோ

ஜனவரி மாதத்தை Tamil Heritage Month என கனடா அரசு ஏற்று கொண்டிருக்கும் நிலையில்  தமிழ் மரபுரிமை மாதமும், தைப்பொங்கல் விழாவும்  கனடாவில் குண்டுச்சட்டியில் குதிரை ஓடும் நிகழ்வுகளாகத்தான் இன்னும் இருக்கின்றன. ஆம். இதை நிறுவ, முஸ்லிம் நாடாக தன்னை வைத்திருக்கும் மலேசியாவிலிருந்து பகிரப்பட்டதொரு சிந்தனையைத் தூண்டும்  கொண்டாட்ட செய்தியொன்றை சொல்லவேண்டும் போலிருக்கிறது. 


சமீபத்தில் மலேசிய பாடசாலைகளில் “பொங்கல் திருநாள் கொண்டாட்டம்” நடந்திருக்கிறது.  மலாய் மொழி பேசும் முஸ்லிம்களும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்ட நிகழ்ச்சியால் ஏற்பட்ட சமயம்சார் சர்ச்சையால் “பாடசாலைகளில் பொங்கல் கொண்டாட்டம் தேவையா?” என்ற கேள்விகள் அங்கு எழுந்து அடங்கியிருக்கின்றன. “பொங்கல் திருநாள் கொண்டாட்டம் இந்து சமயத்தவரது கொண்டாட்டம். இது போன்ற கொண்டாட்டங்களை பல இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்தப்படக்கூடாது ” என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்று  கூறிவிட  – முஸ்லிம்  அடிப்படைவாதிகளுக்கு இனிப்பான பொங்கல் கிடைத்து – விடயம்  சர்ச்சையாகிக் கொண்டது. 
மலேசிய இந்து சங்கத் தலைவர் “பொங்கல் என்பது பெரும்பாலும் இந்துக்களால் கொண்டாடப்படுவது உண்மைதான் , அதில் ஓர் அங்கமாக சூரியனை வணங்கும் நிகழ்வும் உள்ளது. இதை சமயம் சார்ந்த பண்டிகை என்று கூறிவிட இயலாது. இது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த பண்டிகையாகவே கருதப்பட வேண்டும்” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.  

சர்ச்சையை ஓய  வைப்பதுபோல “மலேசிய மாமன்னர் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ‌ஷா மற்றும் இளவரசி அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் சமூக ஊடகங்களிலும் அரச மாளிகையின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்திலும் மலேசிய இந்திய சமூகத்தினருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மகாதீர், துணைப் பிரதமர் வான் அஸிஸா இஸ்மாயில், பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் அஸ்மி அலி ஆகியோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.” என சிங்கப்பூர் செய்தித்தாள் தமிழ் முரசில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சி நிலையில், சைவமும் தமிழும் வெகுகாலமாகவே இணைந்திருந்த காரணத்தால்    தைப்பொங்கல் ஒரு சமயம்சார் நிகழ்வாக கருதப்பட்டாலும், ‘பொங்கல் திருநாள்’   தமிழ் மரபுசார் நிகழ்வேயாகும்.  அது இனம் கடந்தது. முஸ்லிம் நாடான மலேசியா அதை உறுதிப்படுத்துகிறது. அதை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் முஸ்லிம் நாடான மலேசியா வாழ் தமிழ் மக்கள்! பெரும் சாதனை இது.  தமிழர் திருநாளாம் பொங்கலை உலகளாவிய நிலையில் தமிழரின் அடையாள நாளாக உருவாக்கும் கனவை நனவாக்கும் பயணத்திற்கு இதுபோன்ற செயல்பாடுகள் தேவை. 

ஆனால் Tamil Heritage Month என கனடா அரசு ஏற்று கொண்டிருக்கும் இம்மாதம் முழுவதும் பலகலாச்சார நாடான கனடாவில் வாழும் நாம் என்ன செய்கிறோம்? வெள்ளைப்பனி மலையில் நின்றுகொண்டு  தமிழருக்கான ஒரு நிகழ்ச்சியாக ஜனவரி முழுவதும் வாரத்துக்கு வாரம் ‘ஹெரிடேஜ் மந்த்’ கொண்டாடப்படுகிறது! பாராட்டப்பட வேண்டியதுதான்.. பிள்ளைகளை வைத்து பரதநாட்டியங்களை நடன ஆசிரியர்கள் அரங்கேற்ற உதவிடுகிறோம் என்பதும் வாஸ்தவமே. நிகழ்ச்சி முடிந்ததும் பொங்கல் சாப்பிட்டு, அடுத்த ஜனவரியை எதிர்பார்த்து.. அட.. இதெல்லாம் போதுமா??? பொங்கல் விழாவை ஒரு மரபு சார்பு விழாக முன்வைத்து, அதன்மூலம் இவ்விழாவை மற்றைய சமூகத்தினரிடம் கொண்டு செல்கிறோமா?
பொங்கல்விழா குண்டுச்சட்டியில் குதிரை ஓடும் தமிழ் நிகழ்வாகத்தான் தமிழ்க் கனடியர்களிடையே இன்னும் இருக்கிறது.

 ‘தேர்தல் போட்டி’ அரசியலில் ஆர்வம் கொண்ட தமிழ் அரசியலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை தம்மைப் பிரபலப்படுத்துவதற்காக தமது வாக்காளருக்கும், ஆதரவாளருக்குமான ஒரு தமிழ்க் கொண்டாட்டமாக  ஆக்கி வருகிறார்கள். அமைப்புக்களும் பொங்கல் விழாவை நடத்துகின்றன. அதையொட்டி இதுபோன்ற பொங்கல் நிகழ்வுகளில் மாமிச உணவு பகிரலாமா என ஒரு பகுதி Para-militaryஆகி இந்துத்துவா போர்க்கொடி தூக்குகிறது.  இசுக்காபரோ’வின் ஒரு பகுதி “பொறுத்ததுபோதும் பொங்கி எழு; தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளே நம் பொங்கல் திருநாள்’   என ‘பொங்கலை வைத்து  சித்திரைப் புத்தாண்டோடு கொழுவுகிறது.

இந்தக் கோஷ்டியளெல்லாம் பொங்கலையும் மறந்து மரபுத் திங்களையும் மறந்து.. எது அடிப்படையோ அதையும் மறந்து.. உச்சக்கட்டக் காமடியாக “நாங்கதான் மரபுத்திங்களை கொண்டுவந்தனாங்கள். தமிழ் மக்களை, முனிசிபாலிற்றியை, சட்ட மன்றத்தை, பாராளுமன்றத்தை ஒத்துக் கொள்ள வைத்தனாங்கள்…” என அணி பிரிந்து ஜனவரி முழுவதும் Cold war ஒன்றும் இங்குள்ள அமைப்புக்களிடையே நடக்கின்றது . “யார் ஒத்துக் கொண்டாலென்ன.. பெற்ற பிள்ளையை ஒழுங்கா வளர்க்க நினைக்கவேண்டுமல்லவா..” என்றுதான் அவர்களைப்பார்த்து ஒரு சமூகப் பிரஜையாக சொல்லத் தோன்றுகிறது. யார் ‘குத்தினால்’ என்ன? பெற்றிருக்கும் அரிசியை வைத்து இனி நாம் பொங்கவேண்டாமா??

என்னைக்கேட்டால் மலேசியாவில் நடப்பதுபோல இங்கிருக்கும் வேற்று இனத்தினரையும், மதத்தினரையும் பொங்கலைக் கொண்டாடவைக்கும் முயற்சிகளில்தான் இனி தமிழ்க்கனடியர்கள் நாம் ஈடுபட வேண்டும். அதற்கான திட்டமிடலை தமிழ் அமைப்புக்கள் செய்யவேண்டும். இதை கல்விக்கூடங்களில் இருந்து ஆரம்பிப்பதுதான் சாலச்சிறந்தது. ‘அல்வா’ தந்துகொண்டிருக்கும் கவுன்சிலர்களுக்கும், M.P.மாருக்கும் M.P.P.மாருக்கும் பொங்கல் கொடுப்பதை நிறுத்திவிட்டு கல்விச் சபை உறுப்பினர்கள் களத்தில் இறங்கட்டும்.

தேமதுரப் பொங்கல் உலகெங்கும் பரவும் வகை செய்வோம்.

Print Friendly, PDF & Email