News & AnalysisSri Lanka

தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அங்கீகரித்தால் மட்டுமே ‘சைனோஃபார்ம்’ மருந்து பாவிக்கப்படவேண்டும் – இலங்கை மருத்துவர் சங்கம்

தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அங்கீகாரம் கிடைத்தாலேயொழிய ‘சைனோஃபார்ம்’ தடுப்பு மருந்தை இலங்கை மக்களில் பாவிக்க வேண்டாமென இலங்கை மருத்துவர் சங்கம் சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராய்ச்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

“2015 இல் இலங்கைப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் தரமான, பாதுகாப்பான, செயற்திறனுள்ள மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் முக்கியமான கடமையைச் செய்கிறது. இதன் பிரகாரம், கோவிட்-19 தொற்று விடயத்தில் தடுப்பு மருந்துகள் தொடர்பாகச் சம்ர்ப்பிக்கப்படும் அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து அவற்றின் அவசர பாவனைக்கான விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதற்கென சுயாதீன நிபுணர் குழுவொன்றை இந் நிர்வாகம் நியமித்துள்ளது. நீண்டகால தடுப்பு மருந்து விநியோகம் சீராக நடைபெறுவதற்கு இந் நிர்வாகத்தின் கண்ணியத்தையும், சுயாதீனத்தையும் நிலைநிறுத்திக்கொள்வது அவசியம்” என இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மா குணரத்ன இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘சைனோஃபார்ம்’ தடுப்பு மருந்தைப் பொதுமக்கள் மீது பாவிப்பதற்கான அங்கீகாரம் தேசிய மருந்துக் கட்டுபாட்டு நிர்வாகத்தினாலோ அல்லது உலக சுகாதார நிறுவனத்தாலோ இன்றுவரை வழங்கப்படவில்லை எனத் தமக்குக் கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது என மருத்துவர் சங்கம் கூறுகிறது.

“”சைனோஃபார்ம்” தடுப்பு மருந்தின் பாதுகாப்பு, செயற்திறன், நிர்ப்பீடன ஆற்றல் ஆகியன தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எட்டக்கூடிய அளவுக்கு அம்மருந்து பற்றிய போதுமான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.” என இலங்கை மருத்துவர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதே வேளை, தேசிய மருந்து நிர்வாகத்தின் முடிவை மாற்றி அவசரகாலப் பாவனைக்கான அனுமதியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாட்டில் ஏற்கெனவே வந்திறங்கியுள்ள பாரிய மருந்துப்பொதி இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்ட மருத்துவர் சங்கம், “வெளிநாட்டவர்களில்கூட, அங்கீகரிக்கப்படாத ஒரு மருந்தை எமது சுகாதார சேவைகள் பாவிப்பது மிகவும் ஒழுங்கீனமானது” எனத் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக் கட்டுப்பாடு தொடர்பாக, இலங்கை அரசாங்கம், விஞ்ஞான ரீதியான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுப்பது அவசியம். இவ் விடயத்தில், வெளியார் தலையீடுகளில்லாமல் தேசிய மருந்து நிர்வாகம் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க அனுமதிக்கப்படுவது மிகவும் முக்கியம்” என மருத்துவர் சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.