தேசிய மக்கள் சக்தி அரசுக்கு முன்னோக்கிய தமிழ் பேசும் மக்கள் அரங்கு அறிக்கை கையளிப்பு
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து ஆட்சியமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி , பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள்மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு முன்னோக்கியதமிழ் பேசும் மக்கள் அரங்கு என்னும் அமைப்பு அக்டோபர் 16, 2024 அன்று அறிக்கை ஒன்றைக் கையளித்திருக்கிறது. இவ்வறிக்கையின் உள்ளடக்கம் கீழே:
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைத்த வெற்றியானது , இலங்கை அரசியல் வாரலாற்றில் மிக முக்கியமானது என்பதை பலரும் உணர்ந்திருக்கின்றனர். இந்த வெற்றியை பாதுகாத்து பலப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும். நவம்பர் 14இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் , தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை பெறுவதன் மூலமாகத்தான் நீண்டகால அடிப்படையில் புதியஅரசியலமைப்பு உருவாக்கம் தொடக்கம் அனைத்து மக்களுக்கும் சமத்துவ நிலையை உறுதிப்படுத்தும் , பொருளாதார வளர்ச்சியுடன் எல்லோரும் சந்தோசமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடியதாக நமது நாட்டினை மாற்றமுடியும்.
மக்களின் ஆதரவுடன் சாத்தியமான இந்த முதல் தொடக்கத்திற்கு தலைமை தாங்கிய தேசிய மக்கள் சக்தி, ஜேவிபி, அதன் தலைவர் தோழர் அனுரகுமார திசநாயக்க, மற்றும் அனைத்து
அரசியல் குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை, ஊழல்களற்ற ஒரு வளமிக்க நாட்டினை கட்டியெழுப்பும் தங்களின் இந்த முக்கியமான பணியில், தேசிய
ஒருமைப்பாட்டை கருத்திற்கொண்டு, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் நாம், உங்களுக்கு எம்மாலான பங்களிப்புகளை வழங்க முன்வந்துள்ளோம். நாட்டில் வாழ்கின்ற மற்றும் நாட்டை நேசிக்கின்ற மக்களின் உணர்வுகள், மற்றும் எதிர்பார்ப்புகள் எவைகள் என அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்தான் நாட்டினை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியும். அது புலம்பெயர்ந்து கனடாவிலிருந்து பேசுகின்ற ஒருவரின் குரலாக இருக்கட்டும் அல்லது அது யாழ்பாணத்திலிருந்து பேசுகின்ற கந்தசாமியின் குரலாகவோ, மலையகத்திலிருந்து பேசுகின்ற சிவகாமியின் குரலாகவோ, மருதமுனையிலிருந்து பேசுகின்ற அப்துல்லாவின் குரலாகவோ, அல்லது மஹியங்கனையிலிருந்து பேசுகின்ற அப்புஹாமியின் குரலாகவோ இருக்கட்டும். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் கருத்துக்கள் கேட்கப்படவேண்டும். அவர்களின் கருத்துக்களிலுள்ள நியாயங்கள் உள்வாங்கப்பட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படும்போது, எதிர்பார்க்கின்ற மறுமலர்ச்சி வெகுவிரைவில் ஏற்பட்டு நாம் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் நமது நாடு முன்னேறிவிடும்.
இத்தகைய பணியும் செயற்பாடும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் வரைக்குமான பணியாக இருக்கக்கூடாது. தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் மூலம் இவைகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படவேண்டும். இதனை அடைவதற்கு நாட்டிலுள்ள சமூக முன்னேற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் அரசுடன் கைகோர்த்து செயற்படுவது அவசியமாகும். இம்முயற்சியில் அரசிற்கும் மக்களுக்குமிடையில் ஒரு இணைப்புப்பாலமாக நாங்கள் செயற்பட விரும்புகிறோம். சிங்கள மக்களின் உரிமைகள் மதிக்கப்படும் அதேவேளை தமிழ், முஸ்லிம் ,மலையக மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வாதார அடிப்படைகள் மதிக்கப்பட வேண்டுமென்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பழைய அரசியல் அணுகு முறைமைகளிருந்து வேறுபட்ட அணுகுமுறைகள் முன்வைக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். அதற்கு சிங்கள மக்களுடனும், இலங்கையின் ஆட்சித் தலைமைகளுடன் சினேகபூர்வமானதும், ஆரோக்கியமானதுமான உரையாடல்கள் அவசியம் என நாங்கள் நம்புகிறோம். இதன் முதற்கட்டமாக, நாம் கடந்த மூன்று வாரங்களாக இலங்கையில் வாழும் சிறுபான்மையினர், புகலிடம் மற்றும் உள்ளூரில் வசிக்கும் கல்வியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினருடனும் நடாத்திய கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்ட கருத்துக்களை இவ்வறிக்கை மூலம் தங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறான மக்களின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக தங்களுக்கு கையளிக்க எண்ணியுள்ளோம். நீண்டகால நோக்கில் புதியதொரு இலங்கையை உருவாக்கும் , இத்தகைய
தொடர்ச்சியான அரசியல் வழிமுறையில் இத்தகையதொரு பங்களிப்பு முக்கியமென்பதால் இந்தப்பணியினை தொடர்ந்து முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். இந்த முயற்சிக்கு எமக்கு
துணையாக இருந்துவரும், தேசிய மக்கள் சக்தியின் மலையக தேசியக்குழு உறுப்பினரும், கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம்
அவர்களுக்கும் தோழமையுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவதானங்கள் – மாற்றங்கள்
புதிய அரச அதிபர் தெரிவினால் நாடு முழுவதும் பின்வரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கலந்துரையாடல்கள் மூலம் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது
● நாடு முழுவதும் பல்வேறு தளங்களிலும் மறுமலர்ச்சியை நோக்கிய நிலை ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
● மக்கள் மகிழ்ச்சியிலும் நம்பிக்கையிலும் உள்ளனர்.
● ஊழலற்ற , பொது நிதியை கொள்ளையிடுகின்ற போக்குக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
● தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற, தட்டிக் கேட்கின்ற உணர்வும், வெளிப்படுகைகளும் பல்வேறு மட்டங்களில் தொடங்கி உள்ளன.
● இன, சமூக, மற்றும் பிரதேசங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் எதிர் நிலைத்தன்மைகள் என்பன மெல்ல கரையத் தொடங்கியுள்ளன.
● தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத நம்பிக்கை கீற்று தென்படத் தொடங்கி உள்ளது. ( சந்தேகங்கள் , நியாயமான சில விமர்சனங்கள்
உள்ளன, அவை படிப்படியாக சீர் செய்யப்படல் வேண்டும்.)
● தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் மத்தியிலுள்ள பல்வேறு மட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியை நோக்கிய ஆதரவுத்தளம் அதிகரித்து வருகிறது.
● புகலிட நாடுகளில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் , தேசிய மக்கள் சக்தியின் அரசியல் முன்னெடுப்பினை, மாற்றத்தினை முக்கியமாக கருதுகின்றனர். இதனை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல ஆர்வமாக உள்ளனர்.
● அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் , சமூக மாற்றங்களுக்கும் , தீர்வுகளுக்கும் பங்களிப்பதற்கான ஆர்வத்தினையும், ஆலோசனைகளையும் புகலிடத்தில்
வாழ்வோர் வழங்க முன் வந்துள்ளனர்.
● இனவாதத்திற்கும், சமூக சமத்துவமற்ற நிலைக்கும் எதிரான வெளிப்பாடுகள் உணர்வுத்தளங்களிலும் , நாளாந்த செயற்பாடுகளிலும் வெளிப்படத் தொடங்கி உள்ளது.
● ஏழைகள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளார்களுடன், பெண்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளும் , நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
● முன்னைய அரசியல் தலைவர்கள் , மேல் தட்டு வர்க்க அதிகார மனோ நிலையைக் கொண்டவர்கள். அவர்களை சாதாரண மக்கள் நெருங்க முடியாது. ஆனால் இன்றைய தலமைகள் இடதுசாரி பாரம்பரியத்தில் ஒடுக்கப்படுகின்ற மக்களிடமிருந்து மிக எளிமையாக வருகின்ற அரசியல் தலைமைகளாகவும் , வெளிப்படையாகவும் இருப்பதால், அவர்களை சந்திக்கலாம். சிரமமில்லாது தங்கள் குறைகளை எத்தி வைக்கலாம் என்கிற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பல்வேறு மட்டத்தில் ஏற்பட்டுளது.
அத்தோடு இக்கலந்துரையாடல்கள் மூலம் பின்வரும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டிய முக்கியப்பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டன.
செய்யப்பட வேண்டியவை
● தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வும் , சமூக சமத்துவ நிலையும், சமனான வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
● வடக்கில் நிலங்கள் விடுவிப்பும், பாதைகள் திறப்பும் நடக்க வேண்டும்.
● காணமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுவிப்பு செயற்படுத்தப்படல் வேண்டும்.
● சமத்துவமான மொழிக் கொள்கை ( அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் , முக்கிய தலைவர்களினதும் உரைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும். நிர்வாக இடங்களில் தமிழ் மொழியும் கடைப்பிடிக்கும் நிலை வர வேண்டும்.) அத்தோடு பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. கவனம் செலுத்த வேண்டியவை
● வடக்கு கிழக்கில், மலையகத்தில் , மற்றும் தென்னிலங்கை தமிழ்பேசும் பிரதேசங்களில் NPP னுடைய அமைப்பை தொடர்பு கொள்வது அல்லது இணைந்து வேலை செய்வது அல்லது அவர்களிடம் போய் பேசுவதில் இருக்கின்ற சிக்கல்களைப் பற்றி பலர் எடுத்துரைத்தார்கள். இவற்றை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
● முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்ரீமாவென் நரசிங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருக்கோணாமலையில் கடற்படை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 11 கொழும்பு தமிழ் மாணவர்கள் தொடர்பட்ட வழக்குடன் அதிகாரிகளுக்கு உதவிய மூத்த அதிகாரியாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார். இச்செய்தி உண்மையெனில் இவ்வாறான நியமனங்களில் எதிர்காலங்களில் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.
● எமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்தோனேசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது மக்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான
முயற்சிகளை மேற்கொள்ளல் (இது தொடர்பான ஒரளவு முழுமையான தகவல்களுடனான அறிக்கை ஒன்றை தயார் செய்து தங்கள் கவனத்திற்கு கையளிக்கவுள்ளோம்.)
நன்றி
முன்னோக்கிய தமிழ் பேசும் மக்கள் அரங்கு – செயற்குழு உறுப்பினர்கள்
- எம். பௌசர் – எழுத்தாளர்- செயற்பாட்டாளர் ( பிரித்தானியா)
- ரத்தினகோபால் ஜெயபூரண பாலா – வைத்தியர் ( பிரித்தானியா)
- சுரேஸ் கணபதி – வணிக முகாமையாளர் – ( பிரித்தானியா)
- பெரியசாமி பாலேந்திரா – கட்டிடக் கலைஞர் – (கனடா )
- பிரதீபன் ஜெயச்சந்திரன் – வணிக முகாமையாளர்- ( பிரித்தானியா)
- சுலைமான் பாறுக் – கணக்காளர்- ( பிரித்தானியா)
- இராமலிங்கம் ராமசாமி – வர்த்தகர் – ( பிரித்தானியா)
- பாட்சா ஹுசைமியா – பேராசிரியர் – (இலங்கை )
- சாமிநாதன் விமல் – பல்கலைகழக விரிவுரையாளர்- (இலங்கை )
- எஸ்.சிவகுருநாதன்-உரைபெயரப்பாளர்/மொழிபெயரப்பாளர் (இலங்கை )
