தேசிய நல்லிணக்க நாளில் பிரதமர் ட்றூடோ குடும்ப விடுமுறை!

பூர்வகுடிகள், எதிர்க்கட்சிகள் விசனம்


கனடிய பூர்வீக குடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க நாளான செப் 30 அன்று பிரதமர் தனது குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் விடுமுறையைக் கழித்த விடயத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது ‘குளோபல் நியூஸ்’.

அவரது அலுவலகத்தில் பதியப்பட்டுள்ள அறிவிப்பில் அவர் தலைநகர் ஒட்டாவாவில் பிரத்தியேக சந்திப்புகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நேற்று இரவு நடைபெற்ற முதலாவது தேசிய நல்லிணக்க விடுமுறை நாள் தொடர்பான சடங்கொன்றில் கலந்துகொண்ட பின்னர் இன்று நாடெங்கிலுமுள்ள வதிவிடப் பாடசாலைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுடன் பிரதமர் ட்றூடோ பேசுவார்” என அவரது செயற்பாட்டுப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது .

இருப்பினும் விடயம் அம்பலமாகியதும் பிரதமரது அலுவலகம் அப் பதிவை மாற்றி, அவர் விடுமுறையில் இருக்கும் விடயத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதே வேளை, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைவிடங்களில் காணப்பட்ட 215 குழந்தைகளின் குடும்பங்கள் தமது ஞாபகார்த்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி இரண்டு உருக்கமான அழைப்புகளைப் பிரதமருக்கு அனுப்பியிருந்ததாகவும் அவ்வழைப்புக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை எனவும் கெம்லூப்ஸ் செக்வெப்பெம்க் முதல் தேச பூர்வ குலமொன்று கூறியுள்ளது.

பிரதமர் ட்றூடோ பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்குக்கு நேற்று (வியாழன்) சென்றிருந்தாலும், அவர் இன் நிகழ்வில் கலந்துகொள்ளாது ரொஃபீனோ என்னுமிடத்தில் குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்த விடயம் இப்போ அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்த நாளை நாடெங்குமுள்ள பூர்வ குடிகள் வெள்ளைக் குடியேறிகளால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்வைத்து ஒரு துக்க நாளாக நினைவுகொள்கிறார்கள். வதிவிடப் பள்ளிகளில் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இம்மக்களை மிகவும் பாரதூரமாகப் பாதித்திருக்கிறது. இக்கொடுமைகளை அனுபவித்த பல மூத்தோர் இன் நிகழ்வுகளில் பங்குகொண்டு தமது அனுபவங்களைக் கண்ணீருடன் விபரித்துவருகின்றனர். வதிவிடப் பள்ளிகளில் புதைக்கப்பட்டு தற்போது அம்பலமாகும் குழந்தைகளின் துயரமான நினைவுகளை இன் நிகழ்வுகளில் மீட்டிவருகிறார்கள். இப்படி ஒரு நிகழ்வுக்கே பிரதமர் ட்றூடோ அழைக்கப்பட்டிருந்தார்.

வதிவிடப்பள்ளிகளில் துன்புறுத்தலுக்குள்ளாகி மரணமான குழந்தைகளின் எண்ணிக்கை இதுவரை 4,100 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இக்குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடும் வகையில் ட்றூடோ அரசு செப்டம்பர் 30ம் திகதியை தேசீய விடுமுறைநாளாக அறிவித்திருந்தமை பூர்வகுடிகள் உடபடப் பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. இந்நாளில் பல பூர்வ குலங்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைவுகூர்ந்து கனடிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

இதே வேளை, எதிர்கட்சித் தலைவர் எரின் ஓ’ரூல், பிரதமர் இந்நாளை விடுமுறையில் கொண்டாடுவதை விமர்சித்திருக்கிறார். ஒட்டாவலில் உள்ள பூர்வகுடிகளின் சமூகங்களிடை சென்று அவர்களின் நிகழ்வுகளில் ஓ’ரூல் கலந்துகொண்டதாகத் தெரியவருகின்றது.

என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீட் சிங், வான்கூவர் பூர்வகுடி நட்பு மையத்தில் நடைபெற்ற ‘ஒரேஞ் சட்டை நாளில்’ கலந்துகொண்டு இந்நாளை நினைவுகூர்ந்ததாக அறியப்படுகிறது.