Sri Lanka

தேசிய அரசாங்கம் அமைக்க கூட்டமைப்பு ஆதரவு தரும் – சம்பந்தன்

எதிர்கொண்டுவரும் மோசமான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்பதற்கென சர்வ கட்சி தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துவரும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமென அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துல்ளார்.

தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க சர்வ கட்சி அரசாங்கமே ஒரே தீர்வு எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புவதாகவும் ஆனால் அவ்வரசாங்கமொன்றில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதா இல்லையா என்பதைக் கூட்டமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் எனத் தெரிகிறது.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க தேசிய அரசாங்கம் அமைக்க உதவிசெய்யும்படி கோரி சென்ற வாரம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், இவ்வழைப்புகள் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்லாமல் கட்சிகளுக்கே விடப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கட்சி ரீதியாக டலஸ் அழகப்பெருமாவுக்கே தாம் வாக்களிக்கப்போவதாக கூட்டமைப்பு அறிவித்திருந்தும் அக் கட்சியின் 10 உறுப்பினர்களில் நால்வர் விக்கிரமசிங்கவுக்கே வாக்களித்திருந்ததாகப் பின்னர் செய்திகள் கசிந்திருந்தன. இப்படியான விடயங்களில் கட்சிகளை அணுகாது அவற்றின் அங்கத்தவர்களைத் தனியே அணுகி அவர்களைப் பிரித்தெடுக்கும் உத்தியை ரணில் விக்கிரமசிங்க பலதடவைகள் கையாண்டவர்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்படாத பட்சத்தில் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்களை நடத்தவேண்டிய நிலை ஏற்படலாம். தேர்தல்கள் நடத்தப்பட்டால் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோற்கடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பெரும்பாலான உறுப்பினர்கள் தமது கட்சிகளின் ஆலோசனைகளையும் தாண்டி அரசாங்கத்துக்கே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஆதஹ்ரிப்பதைத் தவிர கட்சித் தலைவர்களுக்கு வேறு வழிகளில்லை எனவே நம்பப்படுகிறது.