தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல ரணில் விக்கிரமசிங்க மறுப்பு!
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தேசியப்பட்டியல் மூலம் கிடைத்த ஒரு இடத்திற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க மூத்த தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை விக்கிரமசிங்க மறுத்துள்ளார். அந்த இடத்துக்கு ஒரு இளைய அங்கத்தவரை நியமிக்கும்படி அவர் கேட்டுள்ளார்.
சிறிகோத்தாவில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கட்சியின் மூத்த தலைவர்கள் எழுத்து மூலம் இக்கோரிக்கையை முன்வைத்தபோது “கட்சியை மறுசீரமைப்புச் செய்யவேண்டுமானால் பாராலுமன்றத்தில் அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு இளம் உறுப்பினராக இருக்க வேண்டும். அதே வேளை மற்றையோர் மக்களிடம் சென்று கட்சியை மீளக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்” என அவர் பதிலளித்தார்.
விக்கிரமசிங்கவின் மறுப்பைத் தொடர்ந்து யாரை நியமைப்பது என்பதுபற்றி விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியின் தலைமப் பதவியிலிருந்து டிசம்பர் மாதம் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக விலகுகிறார். ஜனவரி மாதம் புதிய தலைவர் நியமிக்கப்படுவார். றுவான் விஜேவர்த்தன அநேகமாகக் கட்சித் தலைவராக நியமிக்கப்படலாமெனெ எதிர்பார்க்கப்படுகிறது.