தேசபந்து தென்னக்கூனைப் பதவி நீக்க பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!
தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கூனை நிரந்தரமாகப் பதவி நீக்கும் செய்யும் முயற்சியை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதிகாரிகள் அகற்றல் நடைமுறைச் சட்டம் இல. 5/2002 இன் பிரகாரம் இப்பதஹ்வி நீக்கத்தை நடைமுறைப்படுத்தவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சட்டத்தின் பிரகாரம் ஒரு பொலிஸ் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமானால் அதற்கான தீர்மானமொன்று பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு குறைந்தது 75 உறுப்பினர்களது ஆதரவை அது பெற்றிருக்க வேண்டும். தென்னக்கூன் விடயத்தில் இத் தீர்மானத்திற்கு ஆதரவாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட, 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். தென்னக்கூன் மீது 27 ஊழல் குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்குச் சமர்ப்பித்திருந்தனர்.
ஏப்ரல் 8-9 களில் இத் தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் இதன் பின்னான வாக்கெடுப்பைத் தொடர்ந்து தென்னக்கூன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கப் பணியாளராக இருந்துகொண்டு வேறு பல நிறுவனங்களிடமிருந்தும் சம்பளம் பெற்றமை, அவரது வீட்டில் வைத்து சட்ட விரோத சாராயம் வடித்தமை போன்ற பல குர்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படுமெனவும் எவரும் சட்டத்துக்கு மேலானவர்களில்லை; இவ்விசாரணைகளில் அரசு எந்த வகையிலும் தலையிடமாட்டாது எனவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
