• Post category:HEALTH
  • Post published:December 28, 2020
Spread the love

தேகாப்பியாசம், உடலின் நோய்த்தடுப்பு ஆற்றலில் பங்குகொள்ளும் சில கலங்களை வலுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய்களிலிருந்து உடலைக் காத்துக்கொள்கிறது எனப் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

எலிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வெற்றியளித்துள்ள நடைமுறை மனிதரிலும் பலனளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2106 இல் ஆரம்பிக்கப்பட்ட பெருமளவிலான இப் பரிசோதனைகளிலுருந்து, சுறுசுறுப்பான வாழ்வியலைக் கொண்டவர்கள் 13 வகையான புற்றுநோய்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியுமென இவ்வாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

இதே போல, மெரிக்க விளையாட்டு மருத்துவக் கல்லூரியினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஒழுங்கான தேகாப்பியாசம் செய்பவர்களில் 69% மானோருக்கு புற்றுநோய் சம்பவிப்பது குறைவாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை, புற்றுநோய்க்குச் சிகிச்சை பெறுபவர்கள் ஒழுங்காக அப்பியாசம் செய்தால் அவர்களது வாழ்காலம் நீடிக்கப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

விலங்குப் பரிசோதனைகளில் கண்டவாறு, தேகாப்பியாசம் உடலில் ஏற்படும் அழற்சியைக் (inflammation) குறைக்கிறது எனவும் இதனால் புற்றுநோய்க் கலங்களின் தாக்கம் குறைவடைகிறதென்றும் அறியப்படுகிறது.



புற்றுநோய்க் கலங்களை அழித்தல்

புற்றுநோய்க் கலங்களைக் கண்டறிந்து தாக்கியழிப்பதில் உடலின் வெண் கலங்களின் பங்கு பெரியது என சுவீடனிலுள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த சமீபத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான புறுநோய்க் கலங்களை, வித்தியாசமான வெண்கலங்கள் தாக்கியழிக்கின்றன என அவர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஆனால் தேகாப்பியாசம் எப்படி இச்செயற்பாடுகளைத் தூண்டுகின்றது எனபதற்கான காரணத்தை அவர்களால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை.

தற்போது சுவீடனிலுள்ள சில விஞ்ஞானிகள் செய்த இன்னுமொரு ஆராய்ச்சியில் எலிகளின் உடலில் வித்தியாசமான பல புற்றுநோய்க் கலங்களைச் செலுத்திவிட்டு அவ்வெலிகளில் சிலவற்றை ஓடச் செய்தும், சிலவற்றை அசையா நிலையில் வைத்திருந்தும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

சில வாரங்களின் பின்னர் அவதானித்தபோது, அப்பியாசம் செய்த எலிகளில் புற்றுநோயின் வளர்ச்சி எதுவும் காணப்படவில்லை. இதற்கு காரணம் எலிகளின் உடலில் உற்பத்தியாகும் நோயெதிர்ப்பு ஆற்றலுக்குக் காரணமான T-Cells, அப்பியாசம் செய்த எலிகளில் வலுவாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகித்த விஞ்ஞானிகள் இதி நிரூபிப்பதற்காக அதே எலிகளில் T-Cells உற்பத்தியாவதைத் தடுக்கும் ஒரு மருந்தையும் உட்செலுத்தித் தொடர்ந்தும் அவற்றை ஓட வைத்தனர்.

மீண்டும் சில வாரங்களின் பின்னர் அவற்றைப் பரிசோதித்தபோது அப்பியாசம் செய்த எலிகளில் புற்றுநோய்த் திரட்சிகள் தோன்றியிருந்ததை அவர்கள் அவதானித்தனர்.

இதை மேலும் நிரூபிக்க, அப்பியாசம் செய்த எலிகளிலிருந்தும், அப்பியாசம் செய்யாமலிருந்த எலிகளிலிருந்தும் அகற்றப்பட்ட T-Cells களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட, புற்றுநோய்க் கலங்களை உட்செலுத்திய எலிகளில் செலுத்தினர். இதன் பின் அவதானித்தபோது, அப்பியாசம் செய்த எலிகளிலிருந்து அகற்றப்பட்ட T-Cells ஐப் பெற்ற எலிகளில் புற்றுநோய் வளர்ச்சியடையாமலும், அப்பியாசம் செய்யாத எலிகளில் இருந்து அகற்றப்பட்ட T-cells ஐச் செலுத்திய எலிகளில் புற்றுநோய் வளர்ச்சிகண்டிருந்ததையும் விஞ்ஞானிகள் அவதானித்தனர்.

இதன் மூலம் அப்பியாசம் புற்றுநோயைத் தாக்கியழிக்கும் T-Cells இன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.



அப்பியாசம் எப்படி T-Cells ஐ வலுவாக்குகிறது?

புற்றுநோய்க் கலங்களை வலுவாக்குவதில் தேகாப்பியாசம் எப்படி உதவி செய்கிறது என்பதை ஆராய விஞ்ஞானிகள் இன்னுமொரு பரிசோதனையைச் செய்தனர்.

இதற்கு அவர்கள் ஆய்வுகூட எலிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழுவைக் களைத்து விழும் வரை ஓடவைத்தனர். மற்ற குழுவை அசையாமல் வைத்திருந்தனர். பின்னர் இரண்டு குழு எலிகளிலிருந்தும் தனித் தனியாக அவற்றின் இரத்தத்தை எடுத்து ஆய்வு கூடத்தில், இதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட கருவி மூலம் அவ்விரத்தத்திலுள்ள மூலக்கூறுகளை எண்ணினர்.

அதன் பெறுபேறுகள் அவர்களது ஆச்சரியத்தை மேலும் அதிகரித்தது. அப்பியாசம் செய்த எலிகளில் அப்பியாசத்தின்போது தசைகளினால் உற்பத்தியாக்க்கப்படும் லக்ரேற் (lactate) என்னும் பதார்த்தம் அதிகமாகவிருந்தது அவதானிக்கப்பட்டது. இந்த லக்ரேற் தான் T-Cells இன் செயற்பாட்டை ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகம் இப்போது அவர்களுக்கு வந்துவிட்டது.

அடுத்ததாக அவர்கள் செய்தது ஆய்வு கூடத்தில் பாத்திரமொன்றில் (dish), எலியிலிருந்து அகற்றப்பட்ட T-Cells ஐ எடுத்து அதற்கு லக்ரேற்றைக் கலந்து அவதானித்தனர். இக் கலங்கள் (T-Cells) புற்றுநோய்க் கலங்களைக் கண்டதும் அதிக வீரியத்துடன் செயற்பட்டதையும் அதே வேளை லக்ரேற் கலக்காத T-Cells உக்கிரமாகச் செயற்படவில்லை எனவும் அவர்கள் கண்டறிந்தனர்.



இப் பரிசோதனைகள் எல்லாம் எலிகளில் செய்யப்பட்ட படியால் தேகாப்பியாசம் மனிதரிலும் இதே விளைவுகளை ஏற்படுத்துமா எனபது நிரூபிக்கப்படவேண்டியுள்ளது என்பதை இவ்விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், மனிதரிலும், அப்பியாசத்தின் பிறகு உடலில் லக்ரேற் முதல் பலவிதமான பதார்த்தங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை ஒப்பிட்டுப் பார்க்க அவர்கள் அப்பியாசம் செய்த மனிதர்களின் இரத்தத்தை ஆராய்ந்து அப் பதார்த்தங்களின் மூலக்கூற்று கட்டமைப்பை அவதானித்தனர்.

ஆனால் விஞ்ஞானிகளால் முடிவு செய்யப்பட முடியாத ஒரு விடயம், எல்லாவிதமான அப்பியாசங்களும் T-Cells இல் ஒரே விதமான விளைவுகளைக் கொடுக்குமா அல்லது விதம் விதமான அப்பியாசங்கள் விதம் விதமான விளைவுகளைக் கொடுக்குமா என்பது. இதை உறுதி செய்ய அவர்கள் மேலும் பல ஆய்வுகளைத் தொடரவுள்ளனர் என அவர்கள் அறிவித்தனர் (நியூ யோர்க் ரைம்ஸ்)

Print Friendly, PDF & Email