Spread the love

தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் புகழ் பெற்ற கணித ஆசிரியரும், முன்னாள் யாழ் மாவட்டத் தேசிய வீடமைப்பு அதிகாரசபை முகாமையாளருமான திரு. த.பூ.முருகையா அவர்கள் மார்ச் 10, 2020 அன்று, கலிபோர்ணியாவில் காலமானார். இறக்கும்போது அவருக்கு 85 வயது.

தன் வாழ்நாளில் பெரும்பாகத்தைத் தன் கல்விப்பணிக்கு அரப்பணித்த ஆசிரியர் முருகையா கணிதத்தில் மிகவும் விற்பன்னராகத் திகழ்ந்தார். அவரது மாணாக்கர்கள் இன்று உலகம் பூராவும் விஞ்ஞானிகளாகவும், கல்விமான்களாகவும், பொறியியலாளர்களாகவும் இன்னோரன்ன பல்துறை விற்பன்னர்களாகவும் சிதறிக் கிடக்கின்றார்கள் என்பதே அவரது வாழ்நாள் சாதனையைப் பறைசாற்றும் ஒன்று.

இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இலங்கை வந்திருந்தபோது
இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இலங்கை வந்திருந்தபோது

அவரது இளமைக் காலத்தில், இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது சகல பாடங்களிலும் அவர் காட்டிய ஆர்வமும், பெற்ற சித்திகளும், கணிதத்தின்பால் அவருக்கிருந்த ஈர்ப்பும், அப்போது அப் பல்கலைக் கழகத்தின் மதிக்கப்பட்ட காலஞ்சென்ற பேராசிரியர்களான C.J. எலியேசர், P. கனகசபாபதி ஆகியோரது கவனத்தை ஈர்த்தது. அவர்களின் ஆலோசனைக்கும், வற்புறுத்தலுக்குமிணங்கி ஆசிரியர், கணிதத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துச் சித்தி பெற்றார்.

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் அவர் ஆசிரியப்பணியைச் செய்ததன் பயனாக அவரது புகழ் இலங்கை முழுவதும் பரவியிருந்தது. Once a teacher, always a teacher, என்பதற்கிணங்க அவர் தன் வாழ்நாள் முழுவதும் கற்பித்துக்கொண்டே இருந்தார்.

கணிதம் மட்டுமல்ல வாழ்வியலும் அவரது பாடம் தான். கணிதத்தை நேசித்தது போலவே அவர் மனிதத்தையும் நேசித்தவர். அவரது பொதுவுடமை சார்ந்த சிந்தனைகள், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற விசால மனப்பான்மையை வளர்க்கும் கோட்பாடு சார்ந்தவையாய் இருந்தன. ஒன்று பட்ட ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் வாழ்வை அமைத்துக்கொள்ளலே யதார்த்தமானது என்ற கொள்கையில் உறுதியோடிருந்தாலும், தமிழன் என்கிற உணர்வு அவரை விட்டு நகர்ந்துவிடவில்லை. தமிழன் எவனுக்கும் இரண்டாம் தரமானவனில்லை என அடிக்கடி அவர் சொல்லிக்கொள்வார்.

இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயை வரவேற்றுப் பேசும் ஆசிரியர் முருகையா
இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயை வரவேற்றுப் பேசும் ஆசிரியர் முருகையா

அவரது அரசியல் சித்தாந்தங்களுடன் அப்போது உடன்பட்ட திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகச் சிறிது காலம் அவர் பணியாற்றினார். அக்காலத்தில் இலங்கைக்கு வந்திருந்த, இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் நான்காவது பிரதமருமான மொரார்ஜி தேசாய் அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.

அவர் யாழ் மாவட்ட வீடமைப்பு திணைக்களத்தின் முகாமையாளராக பல வருடங்கள் பணியாற்றியவர். பலரது தலைகளின் மேல் கூரையமைத்துக் கொடுத்த அவருக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கவில்லை என்பதிலிருந்து அவரது தூய்மையான மனிதத் தொண்டு ஏன் இன்றுவரை போற்றப்படுகிறது என்பது தெரியும். மானிடத்துக்கான அவரது பணிகளுக்கு அவருக்கு உடந்தையாக இருந்த அவரது துணைவியார் மறைந்த ராஜலக்ஸ்மிதேவிக்கும் நாமெல்லோரும் கடமைப்பட்டவர்களே.

தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் த.பூ.முருகையா காலமானார் 1
யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு வரவேற்பு

மஹாஜன கல்லூரியின் பொற்காலப் பிரகாசத்தில் அவருக்குப் பெரிய பங்குண்டு என்பதை அவரது மாணாக்கர்கள் கூறுவார்கள்.

Related:  வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் | குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இலங்கையிலுள்ள தூதுவர் சமூகம்!

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவமான இனமாகத் தமிழரும் வாழவேண்டுமென்று அன்று அவர் எழுப்பிய குரல் இன்றைய அரசியல்வாதிகளால் எதிரொலிக்கப்படுகிறதென்றால் அவரது தீர்க்கதரிசனம் மீது எவரும் ஐயப்படத் தேவையில்லை.

அவரது எண்ணமும் விருப்பமும் ஈடேறுவதைப் பார்க்க அவர் இல்லையாயினும் அவரது கல்வியால் வெளிச்சம் பெற்ற அவரது மண், ஒரு நாள் அதைப் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு, ‘மறுமொழி’ சார்பில் அஞ்சலி!

Print Friendly, PDF & Email
தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் த.பூ.முருகையா காலமானார்

தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் த.பூ.முருகையா காலமானார்