EnvironmentIndia

தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் தமிழ்நாடு அரசு

மனித நடமாட்டத் தடையின்போது அநாதரவாக்கப்பட்ட விலங்குகளுக்கு உணவளிக்கும்படி தமிழ்நாடு காவற்துறைப் பணிப்பாளர் மாநிலம் முழுவதுமுள்ள 334 தீயணைப்பு நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் தமிழ்நாடு தீயணைப்பு வாரியம்

லோக் சபை அங்கத்தவரும், விலங்குரிமைகள் செயற்பாட்டாளருமான மேனகா காந்தி, மாநில ரீதியாக கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உணவளிக்க விரும்புவோருக்கு உரிய அனுமதிப் பத்திரங்களை வழங்கவேண்டுமென ருவீட் செய்திருந்தார். இதையடுத்து தீயணைப்பு சேவைகளுக்குப் பொறுப்பான, தமிழ்நாடு காவற்துறைப் பணிப்பாளர் சைலேந்திர பாபு, தனது திணைக்களப் பணியாளர்களுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

கடந்த வியாழனிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள 334 தீயணைப்பு நிலையங்களிலும், அலுவலகங்களுக்கு வெளியே உணவளிக்கும் பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அவசரகால நிலையில் பணியாளர் தமது வீடுகளிலிருந்து உணபு கொண்டுவராமல், நிலையங்களிலேயே சமைத்து உண்பதனால், அதைக் கொஞ்சம் விரிவுபடுத்தி விலங்குகளுக்கும் சேர்த்து உணவைத் தயாரிக்கிறார்கள். கூடவே பிஸ்கட்டுகளை வாங்கியும் விலங்குகளுக்குத் தீனியாகக் கொடுக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.



தமது திணைக்களப் பணியாளர் பொதுவாகவே விலங்குகளை நேசிப்பவர்கள். தீயணைப்பு மட்டுமல்ல, விலங்குகளை மீட்பதும் அவர்களது கடமைகளில் ஒன்று. அதனால் விலங்குககளைப் பராமரிப்பது அவர்களது வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. கடந்த வருடம் மட்டும், மந்தைகள், நாய்கள், பூனைகள் உட்பட, 26,000 விலங்குகளைத் தமிழ்நாடு தீயணைப்பு வாரியப் பணியாளர் மீட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழனன்று, தமிழ்நாடு அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் கே.கோபால், மாநில கலெக்டர்களுக்கும், சென்னை மாநகர ஆணையாளருக்கும் அனுப்பிய சுற்று நிருபத்தில், கைவிடப்பட்ட விலங்குகளுக்குத் திடீரென ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டினால், பெருமளவு விலங்குகள் இறந்துபோக நேரிடலாமெனவும், விலங்குகளை நேசிப்பவர்களையும், வளர்ப்பு பிராணிகளை விற்கும் வியாபாரிகளையும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க அனுமதி வழங்கும்படி கேட்டிருந்தார்.

நடமாட்டத்தடையின் போது தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் பரோபகார மக்களைக் காவற்துறை அனுமதிக்கிறதில்லை என அவர்கள் செய்த முறையீட்டுக்கு மதிப்பளித்து முதன்மைச் செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

சாதாரண காலங்களில் இத் தெரு விலங்குகள், உணவகங்களில் வீசப்படும் மீதமான உணவுகளை உண்பது வழக்கம்.

கரிசனையோடு இவ் விலங்குகளுக்கு உண்வளிக்க விரும்புபவர்களுக்கு உரிய அனுமதிகளை வழங்குமாறு தனது சுற்றுநிருபத்தின் மூலம் முதன்மைச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.