BooksIndia

தெரிந்ததும் தெரியாததும் | இந்தியாவின் உளவு நெறியும் றோவின் ஆரம்பமும்

உலக வரலாறு / வங்காள தேசம்

1971 இல் வங்காளதேசத்தின் விடுதலை இரண்டு வெவ்வேறு தேசங்களை உலக வரைபடத்தில் குறித்துக் கொண்டது. வங்காள தேசத்தின் பிறப்பும், அது கருக்கொண்டது முதல் அதன் பிரசவம் வரை அருகேயிருந்து கவனித்த மருத்துவச்சி, இந்திய உளவுப் பிரிவான றோவின் (Research and Analysis Wing (RAW)), பிறப்பும் வளர்ப்பும் வரலாற்றில் உரிய கவனத்தைப் பெற்றிருக்கவில்லை என்கிறது ‘The War That Made R&AW’ என்ற நூல்.

 

The War That Made R&AW’ by Anusha Nandakumar and Sandeep Saket / Westland Publications and Golden Pen-Writers First.

அனுஷா நந்தகுமார், சண்டீப் சாகெட் ஆகியவர்களினால் எழுதப்பட்ட இந்நூல், 1971 இல் நடைபெற்ற ‘ஒப்பெறேஷன் ஈகிள்’ என்று பெயரிடப்பட்ட வங்கப் போரின்போது, றோ மற்றும் திபெத்திய எஸ்.எஃப்.எஃப். படையின் ஈடுபாடுகள் குறித்த அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத பல தகவல்களை முதல் தடவையாக வெளிக் கொணர்கிறது. உலகப் புகழ் பெற்ற இன்றய றோவின் பிதாமகரான ஆர்.என். காவ் எப்படி இந்த இந்திய உளவு நிறுவனத்தை உலக உளவுநிறுவனங்களின் வரைபடத்தில் பிரகாசமாகக் குறித்துக்கொண்டார் என்பது பற்றி விளக்குகிறது இந் நூல். நூலின் சில பகுதிகளின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.

*****

டெல்ஹியிலுள்ள தனது அலுவலகத்தில் ஆர்.என்.ராவ், விசேட முன்னரங்குப் படைத் (Special Frontier Force (SFF)) தளபதி பிரிகேடியர் சுஜன் சிங் ஊபனுடன் திட்டங்களைத் தயாரிக்கிறார். SFF இப்போது RAWவின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. றோவின் பணிப்பாளராக இருந்தார் காவ். காவ் திட்டமிட்டபடி துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் பொறுப்பு ஊபனிடம் கொடுக்கப்படுகிறது.

“ஊபன், அவர்களைச் சீண்டு, நாசவேலைகளைச் செய், நிர்மூலமாக்கு. அவர்களது மண்டைகளுக்குள் நமது விருப்பங்களைத் திணி. எதையெல்லாம் அழித்துத் துடைக்க முடியுமோ அதைச் செய். சிட்டாகொங் மலைப் பாதைகளை மீண்டும் கைப்பற்று” என்பது காவின் கட்டளையாகவிருந்தது.

ஊபன் தனது நடவடிக்கைகளில் இறங்கினார். ‘ஒப்பெறேஷன் ஈகிள்’ சிட்டகாங் மலைகளில் தரையிறங்கியது. றோவுக்கும் எஸ்.எஃப்.எஃப். இற்கும் மட்டுமே தெரிந்த, மிக மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது. அதைப்பற்றிய எந்தவிதமான உத்தியோகபூர்வ பதிவுகளையும் இதுவரையில் கண்டெடுக்க முடியாது. அந்தளவுக்கு இரகசியமானது அந்த நடவடிக்கை.

1971 போர் நடவடிக்கைகளின்போது ஊபனின் SFF தொடர்ந்து நாசவேலைகளையும், சீண்டுதல்களையும் (sabotage and harassment) மிகவும் உக்கிரத்துடன் செய்து வந்தது. பாகிஸ்தானின் 97 சுதந்திர பிரிகேட் மற்றும் கிராக் 2 கொமாண்டோ படைகளை மலைப் பாதைகளில் முடக்கி வைத்திருப்பதுவே ராவின் திட்டம். பல முக்கிய பாலங்களை அவர்கள் தகர்த்தார்கள். இத் தாக்குதல்களின்போது, 56 பேர் கொல்லப்பட்டும், 190 பேர் காயப்பட்டும் இருந்தார்கள்.

இந்தியாவில் றோவும், இந்திய இராணுவமும் தமது திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்த வேளை, கராச்சியில் (மேற்குப் பாகிஸ்தான்) ஜனாதிபதி யாஹ்யா கான் தன் பொழுதுகளை இனிமையாகக் கழித்துக்கொண்டிருந்தார். யப்பானில் அப்போது பயணம் செய்துகொண்டிருந்த பிரபல பாகிஸ்தான பாடகி நூர் ஜெஹான் தொலைதூரத் தொலிபேசி வழியாகப் பாட அவர் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. நூர் ஜெஹான் அழகிய பாடல்களைப் பாடும்போதெல்லாம் அவரை யஹ்யா கான் இடைமறித்து புகழ்மாலை சொரிந்தவாறு இருந்தார். கிழக்குப் பாகிஸ்தானில் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும்கூட அவர் தனது இராணுவத்தினரை வழிநடத்தாமல் மதுவுடனும் மாதுக்களுடனும் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

இப் போரின்போது, யஹ்யா கானைப் போலவே அவரது இராணுவத்தினரும் தமது புஜபல பராக்கிரமம் பற்றி அதீத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தான் விமானப் படை மீது அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டபோது “இதற்கெல்லாம் விளக்கமளிக்க முயற்சிக்க வேண்டாம். வெற்றி மட்டும்தான் பெரிய விளக்கம். எனது பறவைகள் இப்போது ஆக்ராவின் (தாஜ் மஹால் இருக்குமிடம்) மீது பறந்து அதைத் துவம்சம் செய்துகொண்டிக்கும். நான் ஒரு நல்ல செய்திக்காகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி பொதுமக்கள் தொடர்பதிகாரியிடம் கூறியதாக அப்போது பேசப்பட்டது.

“ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியாவை விட இராணுவ மேலாதிக்கம் கொண்டவர்கள் என்ற மனப்பான்மை, பிரித்தானிய ஆட்சியினரால் முஸ்லிம் இராணுவத்தின் மனக்களில் விதைக்கப்பட்ட ஒரு விடயம். ஒரு முஸ்லிம் போராளி 10 இந்துக்களுக்குச் சரி என அவர்கள் நம்புகிறார்கள். இராணுவ ஆட்சியினரால் இந் நம்பிக்கை அப்போதிருந்தே ஊட்டப்பட்டு வருகிறது” என்கிறார் சங்கரன் நாயர். காவ் ஓய்வு பெற்றதன் பின்னர் றோவின் பணிப்பாளராக இருந்தவர் நாயர்.

பாகிஸ்தானின் போர்த் தந்திரங்கள் எல்லாம் அந்நாட்டிற்கே அழிவைத் தேடித் தந்திருக்கின்றன. 1971இன் ஆரம்பத்தில் , பாகிஸ்தான் தனது இராணுவத்திலிருந்து வங்காளி இராணுவப் பிரிவுகளைப் பிரித்தெடுத்தது. மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள் விடுதலைப் போராளிகள் பக்கம் சேர்ந்துவிட்டனர். எஞ்சியிருந்த வங்காளி இராணுவத்தை மேற்குப் பாகிஸ்தான் இராணுவ வீரர்களினால் நம்பப்படுமளவுக்கு இருக்கவில்லை. இதனால் களப் போர்கள் பல தோல்வியில் முடிந்தன. பாகிஸ்தான் விமானப்படையின் தரைப்படையினர் பெரும்பாலும் வங்காளிகளாக இருந்தனர்.

பாகிஸ்தான் இராணுவம் மிக மோசமாக அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்தமையும் அதன் தோல்விக்கு ஒரு காரணம். இராணுவத்தின் கட்டமைப்பு, பெரும்பாலும் மையப்படுத்தப்பட்ட ஒன்று. கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்திருப்பதற்காக யஹ்யா கான் செய்த வேலை அது. முப்படைகளின் தளபதியாகவும் நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கும் அதே வேளை ராவல்பிண்டி, பேஷவார், கராச்சி ஆகிய இடங்களில் இருந்த முப்படைகளுடனான தகவல் தொடர்புகள், ஒருங்கிணைப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

இப்படியான பல காரணக்களினால் பாகிஸ்தான் இராணுவத்திடம் ஆரம்பத்திலிருந்த உத்வேகம் தணிந்துபோனது. இந்திய இராணுவம் இதைத் தனது அனுகூலமாகப் பாவித்திருந்தது.

போர் தொடங்கி 3 நாட்களின் பின்னர், டிசம்பர் 6, 1971 அன்று வங்காளதேசம் ஒரு தனிநாடு என்பதை பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்துகிறார். இதற்கான திட்டம் வெகுநாட்களுக்கு முன்னரே தீட்டப்பட்டிருந்தாலும், போர் தொடங்கும்வரை அது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. உலக ஊடகங்களினதும், ஐ.நா. சபையினதும் தயவு தாட்சண்யத்தைப் பெற்ற பின்னரே தனது திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டுமென்பதில் இந்திரா காந்தி மிகவும் கவனமாக இருந்தார்.