World

தென் கொரியா: நாய் இறைச்சி உண்பதைத் தடைசெய்யச் சட்டம்

நாய்களைக் கொலை செய்வதையும் அவற்றின் இறைச்சியை உண்பதையும் தடை செய்யும் சட்டமூலமொன்றைப் பிரேரிக்க தென் கொரிய எதிர்க்கட்சி தயாராகி வருகிறது. பல நூற்றாண்டுகால நாயிறைச்சி உண்ணும் வழக்கம் தற்போது அருகி வந்தாலும் இதுவரை அது சட்டபூர்வமாகத் தடைசெய்யப்படவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியால் முன்னெடுக்கப்படும் இச்சட்டமூலத்துக்கு ஆளும் கட்சியான மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் பலத்த ஆதரவு இருக்கிறதெனவும் அதனால் இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் இலகுவாகச் சட்டமாக்கபடும் சாத்தியம் இருப்பதாகவும் தெரியவருகிறது. நாய்களைக் கொல்வதற்கு எதிராக நீண்டகாலமாக பிரச்சாரம் செய்துவரும் தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி கிம் கியோன்-ஹீ யின் பெயரால் இச்சட்டமூலம் அழைக்கப்படுகிறது. நாய்களைக் கொன்று அவற்றிந் இறைச்சியை உண்பதைத் தடைசெய்யும்படி அவர் சென்ற மாதம் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

தென் கொரியாவில் வருடமொன்றுக்கு 700,000 நாய்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. பல வருடங்களாக இப் பழக்கம் அருகி வருகிறதெனினும் சட்ட ரீதியாக இதுவரை அதற்கு தடையேதுமில்லை. நாய்க் கொலைகளுக்கு எதிராக இதற்கு முன்னரும் பல தடவைகள் சட்டங்கள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தபோதும் நாய்ப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களின் எதிர்ப்பினால் அச்சட்டங்களை நிறைவேற்ற முடியாமற் போயிருந்தது.