Entertainment

‘இட்லி வடை’ : தென்னிந்தியர்களை இழிவுபடுத்தும் சாருக் கான்

சமீபத்தில் அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்ட இந்தி நடிகர்கள் சிலர் மேடையில் RRR படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு நடனமாடினார்கள். மூன்று பிரபல கான்களான சாருக், ஆமிர், சல்மான் ஆகியோர் மேடையில் ஆடிக்கொண்டிருந்தபோது RRR படத்தில் இப்பாட்டுக்கு நடனமாடிய தெலுங்கு நடிகர் ராம் சரணும் சபையில் இருந்தார். அப்போது அவரையும் தமது நடனத்தில் இணைந்து கொள்ளும்படி சாருக் கான் அழைத்தபோது அவரை ‘இட்லி வட’ ராம் சரண் எனத் தமிழில் அழைத்தது தென்னிந்திய சமூக வலைத்தளப் போராளிகளை கலகம் செய்ய வைத்திருக்கிறது.

பொலிவூட் பிரபலங்கள் தென்னிந்தியர்களை இழிவுபடுத்தும் வழக்கம் மிக நீண்டகாலமாக இருந்து வருகிறது. சாருக் கான் இதில் முன்னணியில் இருப்பவர். தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ் நாடு ஆகியவற்றிலிருந்து வருபவர்களை ‘மதராசிகள்’ என அழைப்பது இந்தி திரையுலகத்தில் வழக்கமானது.

2011 இல் வெளியான Ra One படத்தில் சாருக் கான் தமிழராக நடித்தபோதும் தமிழரை இழிவுபடுத்தி நடித்திருந்தார். ஆங்கிலம் பேசத் தெரியாத தமிழராக நடித்த அவர் ‘அய்யோ’, ‘என்ன ராஸ்கலா’ போன்ற பதங்களை அடிக்கடி பாவித்திருந்தார். அது மட்டுமல்லாது நூடிள்ஸ் உணவிற்குள் தயிரைப் போட்டுக்குழைத்துச் சாப்பிடுவார். 2013 இல் அவரது ‘சென்னை எக்ஸ்பிரெஸ்’ படத்தில் தென்னிந்தியர்களைக் கறுப்புத் தோலுள்ளவர்களாகவும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் சாரத்துடன் நடனமாடுபவர்களாகவும் காட்டியிருப்பார்.

இத்தனைக்கும் அவரைப் புகழினுச்சியில் கொண்டு சென்றவர்களில் மணி ரத்னம் ( டில் சே (1998)), கமல் ஹாசன் (ஹேய் ராம் (2000)), பிரியதர்ஷன (பில்லு), சந்தோஷ் சிவன் (அசோகா) ஆகியோர் முக்கியமானவர்கள். 2023 இல் ரூ 600 கோடிகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்த ஜவான் படத்தை இயக்கியவர் தமிழரான அற்லீ.

இந்த அம்பானி சடங்கில் ராம் சரண் அவரது மனைவி உபாசனா மற்றும் அவரது மேக் அப் ஆர்ட்டிஸ்ட் சீபா ஹசான் ஆகியோருடன் கலந்துகொண்டிருந்தார் எனவும் சாருக் கானின் ‘இட்லி வடை’ அழைப்பினால் இவர்கள் மூவரும் மிகவும் எரிச்சலுக்குட்பட்டிருந்ததாகவும் சீபா அவ்விடத்திலிருந்து வெறுப்புடந் வெளியேறிவிட்டதாகவும் தெரிகிறது.

சமூக வலைத் தளங்களில் எதிர்ப்பலை எழுந்தபோதும் சாருக் கான் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. (நன்றி: இந்துஸ்தான் ரைம்ஸ்)