NewsWorld

தென்னாபிரிக்க தலைநகரில் வெளிநாட்டவர்க்கு எதிராகக் கலவரம்!

வெளிநாட்டவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன!

தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜொஹான்னஸ்பேர்க்கில் வெளிநாட்டுக்காரரின் வர்த்தக நிறுவனங்கள், கட்டிடங்கள் கொள்ளையிடப்பட்டு, எரியூட்டப்படுவதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. காவற்துறையினர் இதுவரையில் 70 பேரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த வாரத்திலும் இது போன்று வெளிநாட்டவருக்கு எதிரான கலவர்ம் இடம்பெற்றிருந்தது.

கலவரத்தின் போது எரிக்கப்பட்ட வாகனம்

வெளிநாட்டுக்காரர்களை வெளியேறும்படி கோரி ஜொஹான்னஸ்பேர்க்கின் மத்திய வணிகப் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என நியூஸ் 24 செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர் வெளிநாட்டுக்காரரின் வர்த்தக நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குவதாகவும், காவற்துறையினர் ரப்பர் குண்டுகளைப் பாவித்து ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுடுவதாகவும் அறியப்படுகிறது.

அலெக்சாந்திரா நகர்ப்பகுதியிலிருந்து பல பங்களாதேச கடை உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு அப்பகுதியை விட்டுப் புறப்படுவதாகத் தெரிகிறது. ஹில்பரோ குடியிருப்புப் பகுதியில் ஒருவர் குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் காவற்துறை கூறுகிறது.

இக் கலவரம் குறித்து நைஜீரியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெஃபெறி ஒனியாமா கடுமையான தொனியில் அறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு எதிரான தென்னாபிரிக்க கலவரம் 2019

“இதயமற்ற கொள்ளையர்களால், பாதுகாப்புத் தரமுடியாத திறமையற்ற காவல்துறையின் மத்தியில், நைஜீரியர்களுக்குச் சொந்தமான கடைகளும் வீடுகளும் எரியூட்டப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் மிகவும் வருத்தம் தருவதாக இருக்கிறது. நாங்கள் சரியான நடவடிக்கைகளை எடுப்போம்” என அவர் தனது டுவிட்டர் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

2015 இல், வெளியாருக்கு எதிரான தாக்குதல்களின்போது நைஜீரியா தனது தூதுவரைத் திருப்பி அழைத்திருந்தது.

தென் ஆபிரிக்க நாடுகளான லெசோத்தோ, மொசாம்பிக், சிம்பாப்வே மற்றும் அயற் கண்டங்களிலுமிருந்தும் வேலை தேடிப் பெரும்பாலான பொருளாதாரக் குடியேறிகள் சமீப காலங்களில் தெஹ்ன்னாபிரிக்காவிற்குச் செல்வது வழக்கமாகி வருகிறது.

ஜொஹான்னஸ்பேர்க்கின் மத்திய வியாபாரப் பகுதியில் ஞாயிறன்று கட்டிடமொன்று எரிந்ததில் மூன்று பேர் மரணமடைந்ததாகவும் அதிலிருந்து கலவரம் உருவாகி கிழக்கு புறநகர்ப்பகுதி, நிர்வாகத் தலைநகரான பிறிரோறியா போன்ற பகுதிகளுக்குப் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மரபாஸ்ராட் பகுதியில் வெளிநாட்டுக்காரருக்குச் சொந்தமான பல பெரும்பாலான வர்த்தக ஸ்தாபனங்கள் எரியூட்டப்பட்டனவென்றும் அறியப்படுகிறது.

சென்ற வாரம் பிறிரோறியாவில் உள்ளூர் டாக்சி சாரதிகளுக்கும் போதை வஸ்து வியாபாரிகளுக்குமிடையில் சண்டை மூண்டதைத் தொடர்ந்து பல வெளிநாட்டுக்காரரின் கட்டிடங்களும் வியாபார நிலையங்களும் எரிக்கப்பட்டன என சோவெற்றா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

திங்களன்று, “வெளிநாட்டுக்காரர்களைத் தென்னாபிரிக்காவிலிருந்து துரத்துங்கள்” என சமூக வலைத் தளங்கள் மூலம் அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

‘சிசோன்கி மக்கள் அமைப்பு’ (Sisonke Peoples Forum) எனப் பெயரிடப்பட்ட அமைப்பினால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் ‘தென்னாபிரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் போதை வஸ்துக்களை விநியோகிக்கிறார்கள், ஊள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புக்களைத் திருடுகிறார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொருளாதாரம் சீரழிந்து வருவதும், 10 மில்லியன் மக்களுக்கு வேலை இல்லாமலிருப்பதும் தான் இப் பிரச்சினைக்குக் காரணம் என தென்னாபிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ‘டெமோக்கிறட்டிக் அல்லையன்ஸ்’ கட்சி தெரிவித்திருக்கிறது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், ஜனநாயக கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுகின்றன என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.