Spread the love

தென்னாபிரிக்கா விஞ்ஞானியான கீதா ராம்ஜி கோவிட-19 நோய்க்குப் பலியானார். தென்னாபிரிக்காவின் ஓறம் இன்ஸ்ட்டிடியூட்டில் (Aurum Institute) முதன்மை விஞ்ஞான அதிகாரியாகப் பணிபுரிந்த, நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற அவருக்கு 64 வயதாகும். HIV தடுப்பு சம்பந்தமான அவரது ஆராய்ச்சிக்காக விருதுகளைப் பெற்றிருந்த அவர் சமீபத்தில் வாழ் நாள் சாதனையாளர் விருதும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருந்தார்.

டேர்பன் நகரிலுள்ள மருத்துவமனையொன்றில், செவ்வாயன்று கொரோனாவைரசுக்குப் பலியானதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



“HIV நோய்த் தொற்றுக்கும், ஒருவரது வாழ்க்கை முறை, சந்தர்ப்பங்கள், தென்னாப்பிரிக்கப் பெண்கள் கொண்டுள்ள ஆபத்துக் காரணிகள், ஆகியவற்றுக்குமிடையில் தொடர்புகளுண்டா என்பது பற்றியும், அவ் வியாதியைத் தடுப்பதற்கு மருந்தொன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் பேராசிரியர் கீதா ராம்ஜி ஈடுபட்டிருந்தார்” என உதவி ஜனாதிபதி டேவிட் மாபுஸா இன்று தன இரங்கலறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ராம்ஜி சமீபத்தில் லண்டன் சென்று வந்தியிருந்தார். வரும்போது அவருக்கு நோயறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. அறிகுறிகள் தெரியவந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விஞ்ஞானம், ஆராய்ச்சி, பெண்ணுரிமைகள் விடயத்தில் அவர் அக்கறை கொண்டவராக இருந்தவர். நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் விருதொன்றையும், HIV தடுப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக ‘அதி சிறந்த பெண் விஞ்ஞானி’ (Outstanding Female Scientist award) என்ற விருதையும் பெற்றிருந்தார்.

ஏழு மில்லியன் மக்களுக்கு மேல் தென்னாபிரிக்காவில் HIV/AIDS நோயுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உலகிலேயே அதிகம் HIV/AIDS நோய்த்தொற்றாளர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.

கொரோனாவைரஸ் தொற்று சமீபத்தில் தென்னாபிரிக்காவில் மிக வேகமாகபி பரவிக்கொண்டிருக்கிறது. 1380 பேர் தொற்றுக்குள்ளாகியும், ஐந்து பேர் மரணமாகியும் உள்ளார்கள்.

Print Friendly, PDF & Email
Related:  பார்செலோனா | 2,292 தாவரங்கள் கேட்டு மகிழ்ந்த இசை நிகழ்ச்சி