Health

தென்னாபிரிக்கா கொறோணாவைரஸுக்கு எதிராக ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து (அஸ்ட்றாசெனிக்கா) செயலாற்றல் குறைந்தது – ஆய்வு


தென்னாபிரிக்காவில் மாற்றுவடிவெடுத்த கொறோணாவைஸுக்கு (B.1.351), எதிராக எதிர்பார்த்த அளவு செயலாற்றலை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான அஸ்ட்றாசெனிக்கா தடுப்பு மருந்தினால் தர முடியாது என அஸ்ட்றாசெனிக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகமும், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் பிரகாரம், தென்னாபிரிக்க வைரஸுக்கு எதிராக அஸ்ட்றாசெனிக்கா தடுப்பு மருந்தின் செயற்திறன் மிகவும் பாரதூரமாகக் குறைக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதென அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

கொறோணாவைரஸ் ஆரம்பித்த நாளிலிருந்து அது பலவகையான மாறுதல்களுக்கு உட்பட்டிருந்தும், மிகவும் ஆபத்தானவையென மூன்று ரகங்கள் அறியப்பட்டுள்ளன. அவை, பிரித்தானிய, தென்னாபிரிக்க, பிரேசீலிய வகைகளாகும். ஒப்பீட்டளவில் இவை விரைவாகப் பரவலடைகின்றன.

“இதுவரை கிடைத்த முதலாம், இரண்டாம் கட்டப் பரிசோதனைகளின் பெறுபேறுகளின்படி, தென்னாபிரிக்க B.1.351 ரக வைரஸ் தாக்குதலுக்கு அஸ்ட்றாசெனிக்கா தகுந்த பாதுகாப்பை வழங்க முடியவில்லை. 2,000 பேரில் பரிசோதிக்கப்பட்ட இம் மருந்தினால் எவரும் பாரதூரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோ அல்லது மரணமடைந்ததோ கிடையாது என அஸ்ட்றாசெனிக்கா தெரிவித்துள்ளது.