தென்னாசியாவில் முதலாவது புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செயற்கை விவேகத் தொழில்நுட்பம் இலங்கையில்!
விழித்திரையை ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிக்கிறது

மனிதரில் உள்ளக உறுப்புகளில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களை கண்களை ஸ்கான் செய்வதன் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தென்னாசியாவில் முதன் முதலாக இலங்கையில் செயற்பட ஆரம்பித்திருக்கிறது. 97% துல்லியமாக நோயைக் கண்டுபிடிக்கும் இத் தொழில்நுட்பம் சமீபத்தில் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்திவரும் செயற்கை விவேகத்தின் மூலம் தொழிற்படுகிறது.
ஒஃப்ராஸ்கான் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகளில் இருவர் தமிழர்களாவர்.
ஒரு நோயாளியின் கருவிழியின் புகைப்படத்தை ஆராய்ந்து அந்நோயாளியின் நுரையீரல், விந்தகம், மார்பகம், கருப்பை, நாரி போன்ற உள்ளுறுப்புகளில் மறைந்திருக்கும் புற்றுநோய்களை 97% துல்லியமாகக் கண்டுபிடிக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது. நோயாளிகளுக்கு அதிக செலவில்லாது இலகுவாகவும் விரைவாகவும் நோயைக் கண்டுபிடிக்கும் தன்மை வாய்ந்தது இத் தொழில்நுட்பம். ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்துடன் இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள இத்தொழில்நுட்பத்தின் மூலம் உடனுக்குடன் பரிசோதனையின் பெறுபேறுகளை அறியக்கூடியதாகவிருக்கும்.
உலகெங்கும் புற்று நோய்களின் அதிகரிப்பு வேகம் கண்டு வருதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு போன்ற நிறுவனங்கள் புற்றுநோயின் ஆரம்பத்திலேயே அதைக் கண்டறியக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து ஒன்கோரெக் நோர்டிக் நிறுவனம் இத்தொழில்நுட்பத்திற்கான மென்பொருளைத் தயாரித்திருந்தது.
இத் தொழில்நுட்பம் இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல ஏனைய புற்றுநோய்களைக் கண்டுபிடிக்கும் கருவிகளைப் போலல்லாது இது உடலுறுப்புக்களுக்கு வெளியே வைத்து தனது பரீட்சைகளைச் செய்கிறது. இதனால் நோயாளிகள் எவ்வித உபாதைகளுக்கும் உட்படுத்தப்படுவதில்லை” என ஒஃப்ராஸ்கான் பணிப்பாளர் ஜீவன் ஞானம் தெரிவித்துள்ளார்.
பண்டைய காலத்தில் நம் முன்னோரால் பாவிக்கப்பட்ட மரபார்ந்த சிகிச்சை முறைகளைத் தழுவி கருவிழியில் காணப்படும் நிறங்கள், வடிவமைப்புகளை ஆராய்ந்து செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக ஒரு அனுமானத்தை எட்டக்கூடியதாக இருக்கிறது என ஒன்கோரெக் மற்றும் டயாபேர்ள் முதன்மை நிர்வாகி பிரென் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இத் தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் ஒரு நன்மை, ஒரு தடவை ஸ்கான் செய்துகொண்டால் பலவிதமான நோய்களை அனுமானித்தறிய அது போதுமானதாக இருக்கும். தற்போதுள்ள நடைமுறைகளைப் போல திருப்தியான முடிவை எட்டமுடியாவிட்டால் மீண்டும் மீண்டும் ஸ்கான் செய்யவேண்டியதில்லை என்கிறார் சம்பந்தன்.
ஒஃப்ராஸ்கான் நிறுவனம் நான்கு ஐரோப்பிய நாடுகளிலும் சில ஆபிரிக்க நாடுகளிலும் செயற்பட்டு வருகிறது. தென்கிழக்காசியாவில் முதல் தடவையாக அது இலங்கையில் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.