ArticlesHealth

தென்னாசியர்களுக்கு இருதய வியாதி அதிகமாகவிருப்பதேன்? | ‘மசாலா’ ஆய்வு

Dr. Namratha Kandula, North Western University

மகேந்திரா அக்ரவால் தனக்கு மாரடைப்பு வருமென்று கற்பனை பண்ணியதுகூட இல்லை. மரக்கறி உணவையே உண்டார். ஒழுங்காகத் தேகாப்பியாசம் செய்தார். உடல் எடையைப் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார். அவரது இரத்த அமுக்கமும் கொலெஸ்ரெறோலும் கூட அளவுகளை மீறவில்லை.

ஜூன் மாதம் 2013ம் ஆண்டு ஒரு நாள் அவருக்கு மூச்சு வாங்கியது. மனைவி மருத்துவமனைக்குப் போகும்படி கேட்டுக்கொண்டாள். அங்கு, அகர்வாலின் இருதய நாடிகள் இரண்டில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படுவது  கண்டுபிடிக்கப்பட்டது. நாடிகளின் தடையேற்பட்ட பகுதிகளை விரிவாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யப் பல விரிவாக்கிகள் (stents) தேவைப்பட்டன. அக்ரவாலுக்கு 63 வயது.

“நான் ஒரு சுறு சுறுப்பான மனிதன். எப்போதுமே ஆரோக்கியமான உணவையே உண்பேன், என் மனைவியின் கட்டுப்பாடு அது” என்கிறார் அக்ரவால். அக்ரவால் வசிப்பது சான் ஹோசே நகரில். எலெக்றாணிக்ஸ் துறையில் முன்னாளில் பணிபுரிந்தவர். “எனக்கு ஏன் இப்படியானது என நான் ஆச்சரியப்படுவதுண்டு” என்கிறார் அவர்.

அவரது நற்குணங்களுக்கு அப்பால் அவரிடம் ஒரு ஆபத்தான காரணி இருந்தது – அது அவருடைய பரம்பரை. அமெரிக்காவில் வயது வந்தவர்கள் மரணிப்பதற்கான முதன்மையான காரணம் இருதய வியாதி. அதிலும் எல்லா இனக்குழுமங்களிலும் தென்னாசியர்களே இருதய வியாதியால் அதிகம் மரணமடைபவர்கள். பெரும்பான்மையினரோடு ஒப்பிடுகையில் இவர்கள் நான்கு மடங்கு அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள். அத்தோடு பெரும்பான்மையினரைவிட பத்து வருடங்கள் முன்னதாகவே இவர்களுக்கு இருதய வியாதி வந்து விடுகிறது. எண்ணிக்கையில் , தென்னாசியர்கள் அமெரிக்காவில் வேகமாக அதிகரித்துவரும் இனக்குழுமம் ஆகும். இவர்கள் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், சிறீலங்கா, பூட்டான், மாலைதீவு போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களாவர்.

“தென்னாசியர்கள் மத்தியில் ஒவ்வொருவருக்கும் நெருக்கமான ஒருவர் இவ் வியாதியால் நோயாளியானவராகவோ அல்லது திடீர் மரணமடைந்தவாரகவோ இருப்பார்கள்” என்கிறார் இருதய நிபுணரும் ஸ்ரான்போட் தென்னாசிய இருதய சீராக்க முன்னெடுப்பு அமைப்பைச் சேர்ந்த  (Stanford South Asian Translational Heart Initiative) டாக்டர் அபா கந்தெல்வால்.

இந்த இனக் குழுமத்தை ஏன் இருதய வியாதி அதிகமாகப் பாதிக்கிறது என்பது பற்றி நிபுணர்கள் இப்போதுதான் அறியத் தொடங்குகிறார்கள். கலிபோர்ணியா பல்கலைக் கழகம் மற்றும் நோர்த் வெஸ்ரேர்ண் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஏழு வருடங்களாக சிக்காகோ மற்றும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிகளைச் சேர்ந்த 900 தென்னாசியர்களை ஆய்வுக்குட்படுத்தினார்கள். ‘மசாலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள (Mediators of Atherosclerosis in South Asians Living in America – MASALA) இந்த ஆய்வின் போது ஏனைய இனக்குழுமங்களைவிடத் தென்னாசியர்கள் குறைந்த உடல் எடையிருந்தும் கூட, உயர் இரத்த அமுக்கம் (high blood pressure) , அதிக அளவு ட்றைகிளிசரைட்டுகள்(triglycerides), அசாதாரண கொலஸ்ரெறோல் (abnormal cholesterol ) அத்துடன் இரண்டாம் வகை நீரழிவு (Type 2 diabetes) ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு தென்னாசிய ஆண்களின் இருதய நாடிகளில் சுண்ணாம்புப் படிவு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. நாடிகளின் உட் சுவர்களில் சுண்ணாம்பு படிவதனால் அவை இறுக்கமாகி மாரடைப்பு (heart attack), பக்க வாதம் (stroke) ஏற்படக் காரணமாகிறது.

“உலக சனத்தொகையில் 20 முதல் 25 வீதமானோர் தென்னாசியர்கள். அவர்களிடையே இது மிகப் பாரதூரமானதொரு மருத்துவப் பிரச்சினை” என்கிறார் கலிபோர்ணிய பல்கலைக்கழகம் – சான் பிரான்சிஸ்கோ வைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியரும் ‘மசாலா’ ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் ஆல்கா கணயா. மும்பாயில் பிறந்து கலிபோர்ணியாவில் வளர்ந்த டாக்டர் கனயாவின் பல நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் இளமையிலேயே இருதய வியாதியால் மரணமானதும் அவர் இவ்வாராய்ச்சியில் ஈடுபட முக்கியமான காரணம்.
நவம்பர் மாதத்தில் அமெரிக்க இருதயக் கழகமும் வேறு பல மருத்துவ அமைப்புக்களும் இணைந்து புதிய கொலஸ்ரெறோல் வழிகாட்டியொன்றை  அறிமுகம் செய்துள்ளார்கள். முதல் தடவையாக, நோயாளிகளின் இனக்குழும பூர்வீகங்களை மனதில் கொண்டு அவர்களுக்கு  இருதய வியாதி ஏற்படுவதற்கான ஆபத்து இருக்கிறதா, அதற்கான மருத்துவத் தேர்வுகள் என்ன என்பது மற்றி மருத்துவர்கள் ஆலோசிக்க வேண்டுமென இவ்வமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. ‘மசாலா’ ஆய்வின் முடிவுகளைக் கருத்திற்கொண்டு, தென்னாசியர்களை இருதய வியாதியால் பாதிக்கப்படுவதில்  ‘அதிக ஆபத்துக்குரியவர்கள்’ , ‘ முக்கிய ரகத்தினர்’ என்று வகைப்படுத்தி அவர்களுக்கு கொல்ஸ்ரெறோல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டுமென்று இவ்வழிகாட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘மசாலா’ ஆய்வின் போது, சீ.ரீ. ஸ்கான் (CT scans) பரிசோதனைகளின் மூலம்,  தென்னாசியர்களின் உடல்கள் தேவையற்ற இடங்களில் தேவைக்குமதிகமான கொழுப்பைச் சேமித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக கல்லீரல் (liver), வயிற்றுப்பகுதி (abdomen), தசைகள் (muscles) ஆகிய உறுப்புகளே அவை. இவ்வுறுப்புகளில் சேமிக்கப்படும் கொழுப்பு தோலுக்குக் கீழ் சேமிக்கப்படும் கொழுப்பை விட உடலுக்கு அதிக தீங்கை விளைவிக்கின்றன. உடற் திண்மச் சுட்டி (body mass index BMI) 25 திற்குக் குறைவாகவுள்ள எந்த ஆசியர்களும் – சீனர், பிலிப்பீனர், ஜப்பானியர் உட்பட- இப்படியான ஆபத்தான கொழுப்பு வகையைக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையர்களோடு ஒப்பிடும் போது இவர்களின் உடற் பருமன் குறைவாக இருப்பினும் இவர்களுக்கு இரண்டாம் ரக நீரிழிவு நோய் அதிகமாகவிருக்கிறது. அதுவே இருதய வியாதிக்கும் பக்கவாதத்துக்கும் காரணமாக ஆகிவிடுகிறது.
“சாதாரண அமெரிக்கர்களுக்கென (வெள்ளையர்கள்) உருவாக்கப்பட்ட உடற் திண்மச் சுட்டியைப் பாவித்து அது 25க்கு மேற்பட்டதென்றவுடன் மருத்துவர்கள் தென்னாசிய நோயாளிகளை மேலே பரிசோதிக்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு இருதய வியாதிக்கான அத்தனை அறிகுறிகளும் இருந்திருக்க வாய்ப்புண்டு” என்கிறார் டாக்டர் கனயா.
‘மசாலா’ ஆய்வில் பங்குபற்றிய பெரும்பாலானவர்கள் முதற் பரம்பரை தென்னாசியர்கள். அவர்களுடைய கலாச்சாரப் பழக்க வழக்கங்களும் வியாதிகளின் தாக்கத்துக்குக் காரணிகளாக அமையலாம். இத் தென்னாசிய குடிவரவாளர்களில் இருதய வியாதியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு வகையினர். ஒன்று: தமது தென்னாசிய மத, கலாச்சார, உணவு முறைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், மற்றது: மேற்குலக வாழ்க்கை முறையை இறுக்கமாகக் கைக்கொள்ளுபவர்கள். இருதய வியாதியால் அதிகம் பாதிப்புக்குள்ளாக ஆகாதவர்கள் இந்த இரண்டு கலாச்சார முறைகளிலும் நல்லவை சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துபவர்கள்.

‘மசாலா’ ஆய்வில் பங்குபற்றியவர்களில் 40 வீதமானோர் மரக்கறி உணவை உண்பவர்கள். அவர்களில்  பொரித்த உணவுகளையும், இனிப்பூட்டிய பதார்த்தங்களையும், அதிக கொழுப்புள்ள பண்ணை (high-fat dairy products) உணவுகளையும் உண்பவர்களே மிக மோசமான அளவில் இருதய வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பழங்கள், மரக்கறி வகைகள், விதைகள், பருப்பு மற்றும் முழுத் தானிய வகைகள், மீன் வகை, கோழி இறைச்சி ஆகியற்றை உண்பவர்கள் குறைந்த அளவிலேயே இருதய வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

கட்டுரை மூலம்: The New York Times | By Anahad O’Connor

தமிழில்: சிவதாசன்