Spread the love

சென்னை உயர்நீதிமன்றம் தலையீடு

தூத்துக்குடி, சாந்தாங்குளத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தந்தையும் மகனும் பொலிசாரால் கொல்லப்பட்ட விடயம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த வெள்ளி (ஜூன் 19) அன்று சாந்தாங்குளம் பொலிசாரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட ஜயராஜ் மற்றும் அவரைத் தேடிச் சென்ற அவரது மகன் பென்னிக்ஸ்ஸும் ஜூன் 23 அன்று கோவில்பட்டி அரச மருத்துவமனையில் உயிரிழந்ததாக சாந்தாங்குளம் பொலிஸ் அறிவித்திருந்தது.

இதற்கிடையில், இருவரும் சாந்தாங்குளம் பொலிஸ் நிலையத்தில் பயங்கரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும், இவ் வழக்கின் முக்கியத்துவம் காரணமாக இந்திய அரசியலமைப்பின் கட்டளைகள் 32, 226 ஆகியவற்றைப் பாவித்து, இச்சம்பவத்தின் மீதான விசாரணைகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவு சுயமாக எடுத்துக்கொண்டுள்ளது.நடந்தது என்ன?

கொலைசெய்யப்பட்டவர்களில் ஒருவரான 31 வயதுடைய பென்னிக்ஸ், சாந்தாங்குளம் காமராஜர் சிலைக்கருகே ஒரு கைத்தொலைபேசிக் கடை ஒன்றை வைத்திருந்தார். ஜூன் 19, மாலை 8 மணி போல், பென்னிக்ஸின் நண்பர்கள் சிலர் அவரது கடைக்கு வந்து, பென்னிக்ஸின் தந்தையாரான ஜயராஜை (58 வயது) சாந்தாங்குளம் பொலிசார் விசாரணைக்கென அழைத்துச் செல்வதாகக் கூறியதும் பென்னிக்ஸ் அவரது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். பொலிஸ் நிலையத்தில் பென்னிக்ஸை உள்ளே எடுத்த பொலிசார், நண்பர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு, இருவரும் கோவில்பட்டி அரச மருத்துவமனையில் இறந்துவிட்டதாக நண்பர்களுக்கும் உறவினருக்கும் அறிவிக்கப்பட்டது.

பலரது கண்கண்ட சாட்சியங்களின் மூலம், ஜயராஜ் மரவேலைப்பாடு செய்யும் கடையொன்றை வைத்திருக்கிறார். ஜயராஜிற்கும் பொலிசாருக்கும் முதல்நாள் நடைபெற்ற வாக்குவாதத்தின் காரணமாக வெள்ளி ஜூன் 19 அன்று மாலை சாந்தாங்குளம் பொலிஸ், ஜயராஜை விசாரணைக்கென அழைத்துச் சென்றிருக்கிறது எனத் தெரியவருகிறது.

பொலிஸ் தரப்பின் முதற் தகவல் அறிக்கையின்படி (FIR) , ஜூன் 19, மாலை 9:15 மணிபோல் பொலிஸ் ஹெட் கான்ஸ்டபிள் எஸ்.முருகனும், கான்ஸ்டபிள் முத்துராஜும் பென்னிக்ஸின் கடைத் தெருவில் வலம் வந்தபோது ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் ஆரம்பமாகியும் கடை இன்னும் பூட்டப்பட்டிருக்கவில்லை எனவும், கடைக்கு முன்னால் ஜயராஜ், மகன் பென்னிக்ஸ், மற்றும் சில நண்பர்கள் கடைக்கு முன் நின்றுகொண்டிருந்தார்கள் எனவும், அவர்களைக் கலைந்துபோகும்படி தாம் உத்தரவிட்டபோது மற்றவர்கள் கலைந்துபோக, ஜயராஜும், பெனிக்ஸும் தம்மை அவதூறாகப் பேசிக்கொண்டு, நிலத்தில் விழுந்து புரண்டார்கள் என்றும் அதனால் அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டனவெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, கோவிட்-19 ஊரடங்கு அமுலில் உள்ளது என இருவருக்கும் விளக்க முற்பட்டபோது இருவரும் எங்களைக் கொலைசெய்துவிடுவோம் என மிரட்டினார்கள். இதனால் அவர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டு அன்றிரவு (ஜூன் 19) 10 மணிபோல், நிலையத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் பி. ரகுகணேஷினால் அறிக்கை (FIR) தயாரிக்கப்பட்டது என, அது மேலும் தெரிவிக்கிறது.

Related:  இந்திய வம்சாவளியினரே அமெரிக்காவின் சராசரி பணக்காரர்கள்

ஆனால் இருவரும் ஒன்றாகப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுவரப்படவில்லை எனவும், தந்தை முதலில் கைதுசெய்யப்பட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பெனிக்ஸை, பொலிசார் உடனேயே உள்ளே போக அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் தாமதிக்க வைத்ததன் பின்னர் அவர் உள்ளே அழைக்கப்பட்டார். பென்னிக்ஸின் நண்பர்களை உள்ளே செல்வதற்கு பொலிஸ் அனுமதிக்கவில்லை. ஜூன் மாதம் 20ம் திகதி, சனிக்கிழமையே அவர்களால் பெனிக்சைச் சந்திக்க முடிந்தது.‘நியூ இண்டியன் எக்ஸ்பிரெஸ்’ இன் தகவலின்படி, பெனிக்ஸும் ஜயராஜும் பொலிஸ்நிலையத்துக்கு உள்ளே இருந்தபோது உள்ளே உரத்த குரலில் சத்தங்கள் கேட்டதெனவும் அதில் “பொலிசாரை எதிர்த்துப் பேச முயற்சிக்காதே” என பொலிசார் ஒருவர் உரத்த குரலில் பேசியதைக் கேட்டதாக வெளியில் நின்ற பென்னிக்ஸின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாது அன்று (ஜூன் 19) இரவு 11:30 மணிபோல்தான் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் பொலிஸ்நிலையத்துக்கு வந்தார் எனவும் அதன் பிறகுதான் உள்ளே தாக்குதல்கள் ஆரம்பித்தன எனவும், வெளியில் நின்ற பொலிஸ் தொண்டர்களும் இத் தாக்குதலில் இணைந்துகொண்டார்கள் எனவும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர் எனவும் ஆகக்குறைந்தது ஐந்து சாரங்களாவது (sarongs) முழுமையாக இரத்தம் தோய்ந்த நிலையில் மாற்றப்பட்டன எனவும் தெரியவருகிறது.

பொலிஸ் அறிக்கையின்படி, ஜூன் 20 அன்று தாம் பென்னிக்ஸையும், ஜயராஜையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல்நிலையைப் பரிசோதித்ததாகவும், பின்னர் சாந்தாங்குளம் மாஜிஸ்திரேட் டி.சரவணனிடம் பாரப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சட்டத்தின் பிரகாரம் இருவரது ஆரோக்கியத்தையும் பரிசோதிக்காது அவர்கள் மீது தடுப்புக்காவலுக்கான உத்தரவை எப்படி மாஜிஸ்திரேட்டினால் வழங்கியிருக்க முடியும்? அதன் பிறகு ஏன் அவர்கள் 100 கி.மீ. அப்பாலுள்ள கோவில்பட்டி சப்-ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்கள்? எனப் பல கேள்விகள் தற்போது கேட்கப்பட்டு வருகின்றன.

ஜூன் 22, திங்களன்று கோவில்பட்டி அரச மருத்துவமனையில் நெஞ்சு வலி என்று கூறிய நிலையில் பென்னிக்ஸ் மரணமானார். மறுநாள் அதிகாலை (ஜூன் 23), தந்தை ஜயராஜும் அதே மருத்துவமனையில் இறந்துபோனார்.மக்கள் ஆர்ப்பாட்டம்

பென்னிக்ஸ், ஜயராஜின் மரணங்கள் பற்றிய செய்தி பரவத் தொடங்கியதும், சாந்தாங்குளம் கடைகளின் சொந்தக்காரர்களும், பொதுமக்களும் பொலிசாரின் நடத்தைகளைக் கண்டித்து, கடையடைப்பு மற்றும் அஹிம்சைவழிப் போராட்டங்களை மேற்கொண்டனர். புதனன்று தமிழ்நாடு மாநிலரீதியாக கடையடைப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இருவர் மீதும் அதீத வன்முறையெதுவும் பாவிக்கப்பட்டதென பொலிஸ் தரப்பால் இதுவரை ஒப்புக்கொள்ளப்படாவிட்டாலும், தூத்துக்குடி பொலிஸ் திணைக்களம், சாந்தாங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகிய இரண்டு சப் இன்ஸ்பெக்டர்களைப் பதவி நீக்கியும், இன்ஸ்பெக்டர் சிறிதருக்கு இடம் மாற்ற உத்தரவும் வழங்கி உள்ளது. கான்ஸ்டபிள்கள் முருகன், முத்துராஜ் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related:  நாயிறைச்சியைத் தடை செய்தது நாகலாந்து அரசு!

உயர்நீதிமன்றம் தலையீடு

அத்தோடு பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக, சென்ன்னை உயர்நீதிமன்றம் இச் சம்பவத்தின் மீது சுயமாக ஈடுபட்டு, தூத்துக்குடி பொலிஸ் சுப்பிரண்டனை இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளது. அத்தோடு இறந்தவர்கள் மீது பிரத்தியேக மரணவிசாரணை நடத்தப்பட்டு அந்நடவடிக்கை முழுவதும் காணொளியில் பதிவுசெய்யப்படவேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைப் பதிவுகள், மரணவிசாரணை அறிக்கை, பொலிஸ்நிலையத்தின் காமிராப்பதிவுகள் அனைத்தும் சமர்ப்பிக்கப்படவேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email