Health

தூக்கம் ஏன் அவசியம்…

வயிற்றுக்கு எது நல்லதோ மூளைக்கும் அது நல்லது என்பார்கள். ஆனாலும் 60 வயதை எட்டியவுடன் பலர் மருத்துவர்களின் ஆலோசனைகளாலோ அல்லது நண்பர் உறவினர்களின் ஆலோசனைகளினாலோ தமது வயிறுகளுக்கு வஞ்சகம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். அது தவறென்று நான் சொல்ல வரவில்லை ஆனால் மூளையையும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் கூற வருகிறேன். இதைத் புரிந்துகொள்வதற்கு மனிதக் கலங்கள் பற்றிக் கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும்

நமது உடற் கலங்கள் மிகவும் அதிசயமானவை. சக்தி உருவாக்கம் அவற்றின் தொழில்களில் முக்கியமான ஒன்று. நாம் எப்படியான உணவை உண்டாலும் அவை தமக்கு வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளையே பின்பற்றுகின்றன. உதாரணத்திற்கு ஒருவர் சாப்பிடும் உணவு சமிபாடடைந்து குளுகோஸ் என்ற நிலைக்கு மாற்றப்பட்டு குருதிச் சுற்றோட்டம் மூலம் உடலெங்கணும் எடுத்துச்செல்லப்பட்டு கலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த குளுகோசைச் சக்தியாக (energy) ஆக மாற்றும் வல்லமை கலங்களுக்கு மட்டுமே உண்டு. அதற்காக நீங்கள் கெடுவில் சாப்பிட்ட அத்தனை உணவையும் அது எரித்து உங்களுக்கு சக்தியைத் தருமென்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது. கலங்கள் உள்ளெடுத்து எரித்தது போக உள்ளெடுக்காத குளுகோஸ் குருதியில் வலம் வரும்போது உங்களுக்கு ‘சர்க்கரை வியாதி’ ஆரம்பித்துவிட்டது என்று மருத்துவர் கூறி மருந்தையும் பரிந்துரைத்து விடுவார்.

மருத்துவரையும் நாம் இதில் பிழை சொல்ல முடியாது. குருதியில் மீதமாக இருக்கும் குளுக்கோஸை உடல் கொழுப்பாக மாற்றி ஆங்காங்கே சொருகி விடுகிறது, பெரும்பாலும் தொந்திகளில். எப்போதாவது நீங்கள் பட்டினி கிடந்து குருதியில் குளூகோஸ் குறைவாக இருப்பின் மூளையின் கட்டளைப்படி, சொருகப்பட்ட கொழுப்பு உடைக்கப்பட்டு கலங்களினால் எரிக்கப்பட்டு சக்தி பெறப்படுகிறது. பட்டினியால் உடல் வற்றிப் போவது இக்காரணத்தினால் தான்.

இதில் முக்கியமாக விளங்கிக்கொள்ளவேண்டிய விடயம் இக் கலங்களின் தொழிற்பாடு பற்றித் தான். கலங்கள் தமக்குத் தேவையான பொருட்களை உள்ளெடுக்க பலவித உத்திகளைப் பாவிக்கின்றன. சில பதார்த்தங்கள் கலங்களின் சுவர்களூடு இலகுவாக உள்ளே போய் வெளியே வரக்கூடியளவுக்கு (passive transport) ‘உள்வீட்டுப் பிள்ளைகளாக’ இருக்கின்றன. அவற்றைக் கண்காணிக்க யாரும் இல்லை. தேவையானால் மட்டுமே கலங்கள் இவற்றுக்கும் அனுமதி வழங்கும். ஆனால் சில பதார்த்தங்களை உள்ளே எடுப்பதற்கு கலங்கள் சில ஏற்பிகள் (receptors) என்னும் சிறப்புப் பாதைகளை வைத்திருக்கின்றன. ஏறத்தாழ பூட்டுத் திறப்புடனான (active transport) இப்பாதையினூடு இப் பதார்த்தங்கள் கட்டுப்பாட்டுடனேயே வழங்கப்படும்.

இப்போது கொலெஸ்ரெறோலைப் பார்ப்போம். நாம் ‘கெட்ட’ கொலெஸ்ரெறோல் (LDL) என அழைக்கும் கொலெஸ்ரெறோல் கலங்களினால் உள்ளெடுக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இது சீராக நடைபெற்றால் இரத்தப் பரிசோதனையில் LDl கட்டுப்பாடாக இருக்கிறது எனக்கூறி மருத்துவர் உங்களைக் கலைத்துவிடுவார். மாறாக கெட்ட கொலெஸ்ரெறோல் கலங்களினால் எரிக்கப்படும் வீதம் குறையத் தொடங்க குருதியில் அது மீதமாகி நீங்கள் மருந்தெடுக்கும் நிலைக்கு வந்துவிடுவீர்கள். சர்க்கரைக்கும் இதே செயற்பாடுதான்.

இப்போ கெட்ட கொலெஸ்ரெறோலைக் குறைக்க மருத்துவர் ஸ்ரற்றின் (Statin) என்னும் மருந்து வகைகளைப் பரிந்துரைக்கிறார். இம்மருந்துகள் செய்யும் வேலை என்னவென்றால் கெட்ட கொலெஸ்ரெறோலை உள்ளே அனுமதிப்பதைக் கட்டுப்படுத்தும் ஏற்பிகள் (GPCR) களின் செயற்திறமையைக் குறைத்து கெட்ட கொலெஸ்ரெறோலைத் திருட்டுத்தனமாக கலங்களுக்குள் தள்ளி எரித்துவிடுவது தான். பென்சிலின் மற்றும் நீரிழிவுக் குளிசைகளின் வேலையும் இதேபோன்ற திருட்டுத் தனமான செயற்பாடுகள் தான். கலச்சுவரிலுள்ள ஏற்பிகளூடு குளுக்கோஸ் உள்ளெடுக்கப்பட்டு எரிக்கப்பட்டதும் குருதியில் ‘சர்க்கரை’ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது.

சிலருக்கு கல்சியக் குறைபாடு இருக்கிறதென மருத்துவர் கூறுவார். குறிப்பாக 60 வயது தாண்டிய முதிய பெண்கள் இந்நிலைக்கு ஆளாகிறார்கள். மகப்பேறு, மாதவிடாய் போன்ற இயற்கைச் செயற்பாடுகளால் அவர்களில் கல்சியம் இழப்பு அதிகமாக இருக்கிறது. இப்படியானவர்களுக்கு கல்சியம் சப்பிளிமெண்ட்ஸ் என்று குளிசைகளை மருத்துவர்களும் டெலிவிசன்களும் பரிந்துரைக்கின்றன(ர்). உடனே நீங்கள் அருகிலுள்ள மருந்தகத்தை நாடி குளிசையை அள்ளிப்போட ஆரம்பிக்கிறீர்கள். ஆனால், அக் கல்சியத்தை உங்கள் கலங்கள் உள்ளெடுக்க வேண்டிய கட்டாயமில்லை. அவற்றை உள்ளெடுக்க கலங்களிலுள்ள ஏற்பிகள் அனுமதிக்க வேண்டும். வைட்டமின் D எடுக்கும்போது (லஞ்சம்?) இந்த ஏற்பிகள் இலகுவாக கல்சியத்தை உள்ளெடுக்கின்றன. இவை சில உதாரணங்கள் மட்டுமே. எனவே நாங்கள் சாப்பிடும், அருந்தும் உணவுகளும் பானங்களும் எமது உடலுக்குள் சுவற வேண்டுமென்பது கட்டாயமில்லை. அவற்றைத் தீர்மானிப்பது வைட்டமின்கள், உலோகங்கள், அமிலம், காரம் போன்ற பலதும் பத்தும். காரணம் கலங்களுக்கிடையேயான தகவல் பரிவர்த்தனையும் நரம்புமண்டலத்தின் மூலமான தகவற் பரிவர்த்தனையும் இயல்பாகத் தொழிற்படும்போது தான் கலங்களுக்குக் கிடைக்கும் கட்டளைகள் இலகுவாக அவற்றைச் சென்றடையும். இதற்கு பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், துத்தநாகம், கல்சியம் போன்ற பல மூலகங்கள் சமநிலையில் இருப்பது அவசியம்.

இதே வேளை கலங்களின் இன்னுமொரு அதிசயமான தொழிற்பாடு பற்றி நீங்கள் அறிந்திருப்பது நல்லது. ஒவ்வொரு கலமும் இரட்டைச் சவ்வினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் உள்ளே புகவிடாது தம்மைக் காப்பாற்றுவதற்காகத் தான். அவை உள்ளே புகுவதன் நோக்கம், வேறென்ன, தமது இனத்தைப் பெருக்குவதற்காகத்தான். கலங்களின் கருவுக்குள் இருக்கும் DNA யை தமது சொந்த வேலைகளைச் செய்துகொள்ளும் வகையில் மாற்றி இதைச் சாதிக்கின்றன. இதே வேளை உடலின் சகல செயற்பாட்டுக் கட்டளைகளின் ஒரிஜினல் கொப்பிகள் அனைத்தும் DNA யில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறை தலைமுறையாகக் கொப்பி பண்ணி இக்கட்டளைகள் ஒவ்வொரு கலத்துக்கும் கொடுக்கப்படுகின்றன. இக்கட்டளைகளைப் பிரதி எடுத்து கலங்களின் தொழிற்சாலைகளுக்கு (ryborsomes) கொடுக்கப்படும் கொப்பிக்குப் பெயர் தான் mRNA. பெரும்பாலான வைரஸ்களிடம் இனப்பெருக்கத்திற்கான கட்டளைக்கொப்பி இல்லாமையால் மனிதக் கலங்களிலிருந்து அவற்றைத் திருடித் தமது பேரின்பத்தை அடைகின்றன. நமது முதலாம் எதிரி கோவிட்டின் நிலைமையும் இப்படித்தான் இருந்தது. அது மனிதக் கலங்களுக்குள் நுழைவதற்கு தேவையான ஏற்பியை நண்பன் என்று வேடம் போட்டு ஏமாற்றி உள்ளே நுழைந்தது வரலாறு. புரதங்களே இவ்வைரஸ்களின் மாற்று ஆடைகளாக இருக்கின்றன.

இதே வேளை கலங்கள் தமது எரி உலைப் பணிகளின்போது சேமமாகும் கழிவுப் பொருட்களை எங்காவது வெளியில் கொட்ட வேண்டும். இங்கு சேர்க்கப்படும் கழிவுகளை (excretion) அவை தமது சுவர்களுக்கு அருகே தள்ளிக்கொண்டுவந்து வெளியேற்றிய பின்னர் இச்சுவர்கள் மூடிக்கொள்கின்றன. கலங்களைச் சூழ்ந்திருக்கும் கழிநீர்ப் பதார்த்தம் அவற்றை குருதிக்குள் சேர்த்துவிடுகிறது. நாளங்களின் மூலம் இவற்றைக் குருதி கொண்டுபோய் ஈரல், தோல், சிறூநீரகம், நுரையீரல் போன்ற கழிவு dump களில் கொட்டி விடுகிறது. மூளைக் கலங்களில் இப்படியான கழிவுகள் அகற்றப்படுவது நமது ஆழந்த நித்திரையின் போது தான். அதன் கதையே தனி….(தொடரும்) (Image Credit: Nagwa)