Health

தூக்கம் ஏன் அவசியம் – பாகம் 2

தூக்கம் ஏன் அவசியம் -பாகம் 1 இல் மனித உடலிலுள்ள கலங்கள் தமது கழிவுகளை கலங்களுக்கு வெளியே தள்ளிவிடுகின்றன எனவும் இவை நிணநீர்க் கால்வாய்கள் வழியாக குருதிச்சுற்றோட்டத்தின் நாளங்களை அடைந்து அவற்றின் மூலம் அச்சூழலிலிருந்து அகற்றப்படுகின்றன எனவும் பார்த்திருந்தோம். இதே செயற்பாடுதான் மூளையிலும் நடைபெறுகிறது. அதற்கும் தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என இக்கட்டுரையில் பார்ப்போம்.

முதிர்ந்த நிலையில் மனித மூளை சராசரியாக 3 இறாத்தல்கள் எடையுடையது. இதில் 60% கொழுப்பும் மீதி 40% நீர், புரதம், நார்ச்சத்து மற்றும் உப்பு ஆகியவற்றால் ஆனது. உடலின் ஏனைய உறுப்புகளைப் போல இதில் தசை கிடையாது. இத்திண்மத்தை ஊடறுத்து இரத்தக்குழாய்கள், நரம்புகள், நரம்புக் கலங்கள் மற்றும் கிளையல் (glial) கலங்கள் பரவியுள்ளன. மத்திய நரம்புத் தொகுதியின் பிரதான அங்கமாகிய மூளையின் வெளிப்பகுதி நரை பொருள் (grey matter) உட்பகுதி வெண் பொருள் (white matter) எனப்படும். மூளையோடு தொடர்ந்து முள்ளந்தண்டின் நடுவே குதம் வரை செல்லும் நரம்புத் தொகுதியில் வெளியே வெண்பொருளும் உள்ளே நரை பொருளும் இருக்கின்றன. நரம்புக் கலங்களின் (neurons) ‘தலைப் பகுதி’ நரை பொருளுக்குள்ளும் ‘வால் பகுதி’ வெண்பொருளுக்குள்ளும் இருக்கும் வகையில் மூளை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நரம்புக் கலம் ( நன்றி: John Hopkins University)

உடலின் செயற்பாடுகளுக்குத் தேவையான அனைத்து சமிக்ஞைகளையும் மூளை மின்சார வழியாகவும் இரசாயன வழியாகவும் அனுப்புகிறது. ஒவ்வொரு வித்தியாசமான செயற்பாட்டிற்கும் வித்தியாசமான சமிக்ஞைகள் அனுப்பப்படும். அந்தந்தத் தொழில்களுக்குப் பொறுப்பான கலங்கள் தமது ஏற்பிகள் (receptors) மூலம் இத்தகவல்களை அறிந்து அத்தொழில்களை நிறைவேற்றுகின்றன. உதாரணத்திற்கு ஒருவருக்கு ஆபத்து வருகிறதென்று அவர் உணர்ந்தால் அவர் அவ்விடத்திலிருந்து ஓடித் தப்பவேண்டும் அல்லது அவ்வாபத்தை எதிர்கொள்ள வேண்டும் (fight or flight). இந்நிலையில் உடலின் தசைகள் புடைப்பெடுப்பதற்கும் பலமாக இயங்குவதற்கும் அவற்றுக்கு அதிக வலு தேவைப்படும். இவ்வேளை புலன்கள் மூலம் ஆபத்தை உணர்ந்த மூளை உடனடியாக அட்றீனலீன் (adrenaline) என்ற ஹோர்மோனைச் சுரக்கும்படி கட்டளையிடுகிறது. இது ஒரு இரசாயன சமிக்ஞையின் வழி. அட்றீனலீன் சுரப்பிகள் உடனடியாக இந்த ஹோர்மோனைச் சுரந்து குருதிச் சுற்றோட்டம் மூலம் தேவையான கலங்களுக்கு அனுப்பி விடுகிறது. அதே வேளை இக்குருதியை வேகமாக அனுப்புவதற்காக இருதயத்தை வேகமாக இயங்கும்படி இன்னுமொரு சமிக்ஞையையும் மூளை அனுப்பும். கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை உரிய உறுப்புகளுக்கு உடனடியாக அனுப்புவதற்கு மூளை இரசாயன, மின்சார வழிகளைப் பாவிக்கிறது. இச்சமிக்ஞை பரிவர்த்தனையில் ஒரு நரம்புக்கலம் கடத்தியாகவும் (transmitter) அடுத்த நரம்புக்கலம் ஏற்பியாகவும் (receiver) இணைப்புகளை (synaptic connections) மேற்கொள்கின்றன. இந்நரம்புக் கலங்களின் தொழிற்பாடு பற்றி இன்னுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

மூளையின் இந்த தகவற் பரிவர்த்தனைத் தொழிற்பாடு மிகவும் சிக்கலானது. மேற்குறிப்பிட்ட நரம்புக்கலமொன்று ஒரு நேரத்தில் இதர நரம்புக்கலங்களுடன் 7,000 இணைப்புகளை மேற்கொள்கின்றன. இந்த இணைப்புகள் பலவீனமடையும்போது அறிவாற்றல் தளர்வு (cognitive decline) ஆரம்பித்து முதுமை மறதியாக (alzeimers) வெளிப்படுகிறது. அதே வேளை இந்நரம்புக் கலங்களின் செயற்பாடுகளிற்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு அவை, இதர கலங்களைப் போல, குளுகோஸ் மற்றும் ஒக்சிசனில் தான் தங்கியுள்ளன. மூளைக்குச் செல்லும் குருதியே இவற்றை வழங்குகின்றது. உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் மூளையே மிகச்சிறந்த இரத்த சுற்றோட்டத் தொகுதியைக் கொண்டிருக்கிறது. சமிபாட்டின் போது உருவாக்கப்படும் சக்தி உருவாக்கத்தில் 20% மூளையால் மட்டுமே பாவிக்கப்படுகிறது. அதிக சக்தி தேவைகளைக் கொண்ட மூளையின் நரம்புக் கலங்களுக்கு வழங்கப்படும் குருதி வழங்கலில் குறைபாடு இருந்தால் அவற்றின் தொழிற்பாடு சீராக இருக்காது. அதே வேளை குருதி முழுமையாகத் தடைப்பட்டால் இக்கலங்கள் இறந்துவிடுவது மட்டுமல்லாது புதிய கலங்கள் உற்பத்தியாவதுமில்லை.

மூளையின் விருத்தி 5 படி நிலைகளில் நடைபெறுகிறது. கருத்தரித்து 12-14 வாரங்களில் முளையத்தின் (கரு) நரம்புக்கலங்கள் மணித்தியாலத்திற்கு 15 மில்லியன் என்ற வீதத்தில் பெருகி 18 மாதங்களில் அதன் பெருக்கம் முற்றாக நின்றுவிடுகிறது. இப் பதினெட்டு மாதங்களில் நரம்புக்கலங்கள் செல்லும் 5 படி நிலைகள்:

படி 1: இக்காலகட்டத்தில், தொழில் பாகுபாடின்றி, மூளைக்கலங்கள் விரைவில் பெருக்கமுறுகின்றன

படி 2: மூளையின் அங்கங்கள் எனப் பின்னர் உருவாகப்போகும் இடங்களுக்கு இம்முளையக் கலங்கள் அனுப்பப்பட்டு அங்கு என்னென்ன தேவைகள் உத்தேசிக்கப்பட்டவையோ அந்தந்த தேவைகளைச் செய்யும் வகையில் கலங்கள் உருமாற்றம் பெருகின்றன.

படி 3: ஒரே வேலையைச் செய்யும் கலங்கள் ஒன்றாகக் கூட்டப்பட்டு அவையவைக்குரிய பிரதேசங்களில் அமர்த்தப்படுகின்றன.

படி 4: ஒவ்வொரு பிரதேசங்களிலுமிருக்கும் நரம்புக்கலங்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் இணைப்புகள் உருவாக்கம் பெறுகின்றன.

படி 5: இவ்விணைப்புகளில் தேவையற்றவையெனக் காணப்படுபவை அகற்றப்பட்டு மீதியாயுள்ள 100 ட்றில்லியன் மட்டிலான நரம்புக்கலங்களிடையே சமநிலைப்படுத்தும் (stabilizing) நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கூறப்பட்ட 5 படிநிலைகளும் இதே ஒழுங்கில் நடைபெறவேண்டுமென்பதில்லை. கருத்தரித்து 5 வாரங்களின் பின்னர் இப்படிநிலை மாற்றங்கள் ஒன்றையொன்று மேவி நடைபெறலாம். அதாவது முதலாவது படிநிலை முடிவுற முன்னரே இரண்டாவது ஆரம்பமாகவும் கூடும். 18 மாதங்களின் பின் முதலாவது படி நிலை முடிவுக்கு வந்துவிடும். இதற்குப் பின் புதிய நரம்புக் கலங்கள் சேர்க்கப்படமாட்டா. நரம்புக்கலங்கள் தனித்தனி பிரதேசமாகக் கூட்டப்படுவதும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிடும். ஆனால் தேவையற்ற இணைப்புகளை அகற்றும் வேலை (pruning) மேலும் பலவருடங்களுக்கு நடைபெறும்.

உடலிலுள்ள இதர கலங்கள் உயிர்வாழும் காலம் மிகவும் சிறியது. ஆனால் அவை இறந்ததும் புதிய கலங்கள் அவ்விடங்களை நிரப்பிக்கொள்கின்றன. உதாரணம் எமது தோல். ஆனால் நரம்புக்கலங்கள் நீண்ட காலத்துக்கு வாழக்கூடியவை. சில மனிதரின் ஆயுட்காலம் மட்டும் வாழ்கின்றன. இதன் காரணமாக நரம்புக் கலங்கள் தம்மைத்தாமே பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் பழக்கப்பட்டவை. அதுமட்டுமல்ல தேவைகளைப் பொறுத்து அவை அயலிலுள்ள நரம்புக்கலங்களோடு மேற்கொண்ட இணைப்புகளை மாற்றிக்கொள்ளவும் வல்லன. சில இணைப்புகளை வலுவாக்கவும் சில இணைப்புகளை நலிவாக்கவும் சில இணைப்புகளை முற்றாகத் துண்டித்துவிட்டு புதிய இணைப்புகளை மேற்கொள்ளவும் அவை பழக்கப்பட்டவை. இதே வேளை முதியவர்களின் மூளையில் சில சந்தர்ப்பங்களில் புதிய நரம்புக்கலங்கள் உருவாகுவதும் (neurogenesis) அவதானிக்கப்பட்டுள்ளது. இவை மருந்துகளின் தூண்டுதலினாலும் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மூளை தானாகவே மேற்கொள்ளும் ‘பழுதுபார்ப்பின்’ போதும் உருவாகின்றன எனச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தேவையேற்படின் நரம்புக் கலங்கள் தம்மிடையே அல்லது குழுக்களிடையேயான இணைப்புகளைத் துண்டித்து புதிய இணைப்புகளை மேற்கொள்ளும் வல்லமை கொண்டவை என்பதை மேலே கூறியிருந்தேன். மூளையின் இத்தன்மை மீது சமீபகாலங்களில் அதிக ஒளி பாய்ச்சப்பட்டு வருகிறது. பக்கவாதத்தினால் அங்கவியக்கம் இழந்தவர்கள் தமது இயக்கத்தை மீண்டும் பெற மூளையை மீள்பயிற்சி செய்யும் உத்திகள் வெற்றி பெற்றுவருகின்றன. நரம்புக் கலங்களின் நெகிழ்வுத் தன்மையே இதற்குக் காரணமென விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்னர் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக நரம்புக்கலங்கள் இறந்துபோனதனால் ஒருவர் அங்கச் செயற்பாடுகளை இழந்திருந்தார். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு தொடர்ச்சியான அப்பியாசங்களை வற்புறுத்திச் செய்யவைத்து இறுதியில் அவரது அங்கங்களைச் செயற்பட வைத்தனர். இக்கால கட்டத்தில் அவரது மூளையை FMRI (Functional Magnetic Resonance Imaging) முறையில் பரீட்சித்துப் பார்த்தபோது இவரது அங்கங்களை இயக்கிய மூளையின் பிரதேசத்தில் (mortor cortex) இருந்த நரம்புக்கலங்கள் இரத்தம் கிடைக்காமையால் இறந்துபோக அருகில் பாவனை குறைவாக இருந்த பிரதேசத்தின் நரம்புக்கலங்களின் இணைப்புகளை மாற்றி மூளை தனது தேவைக்கு எடுத்திருந்தது எனவும் இப்புதிய இணைப்புகள் அவரது அங்கங்களின் இயக்கத்தை மீட்டுக்கொடுத்தன எனவும் நிரூபிக்கப்பட்டது.

நரம்புக் கலங்களின் செயற்பாடு பற்றி இப்போது அறிந்திருப்பீர்கள். இதர கலங்களுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் ‘துடி துடிப்பானவை’ எனவும் அதனால் அவற்றுக்கு அதிகளவு சக்தி தேவைப்படுகிறது எனவும் அறிந்தோம். இவ்வதிகரித்த சக்தி தேவை காரணமாக உணவு எரிப்பு அதிகம் நிகழ்வதால் நரம்புக் கலங்களில் கழிவுகள் அதிகம் சேர்க்கையடைகின்றன. இவற்றை அவை உடனடியாக தமது சுவர்களுக்கு வெளியே தள்ளிவிடுகின்றன. கலங்களைச் சூழவிருக்கும் கலச்சூழ் திரவத்திலிருந்து (interstitial fluid) இக்கழிவுகள் நிணநீர்க் கால்வாய்களில் சேர்க்கப்படுகின்றன. இதே போலவே நாடிகள் கொண்டுவரும் குளுகோஸும் ஒக்சிசனும் இக் கலச்சூழ் திரவத்தில் விடப்பட்டு கலங்களால் உள்ளெடுக்கப்படுகின்றன.

அதிகரிக்கப்பட்ட நரம்புக்கலங்களின் பாவனையின் போது கழிவுகளின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இந்நடைமுறையின்போது கலச்சுவர்களுக்கு வெளியே தள்ளப்படும் கழிவுகள் கலச்சூழ் திரவத்தில் தேக்கமுறுகின்றன. ஆனால் இவை உடனடியாக மூளையிலிருந்து வெளியேற்றப்படுவதில்லை. அதுவரை அவை மூளையின் கலங்களைச் சூழ்ந்து கலங்களுக்கு ஒருவகை அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றன. இவ்வேளையில் தான் களைப்பு, சோர்வு, தலையிடி, கவனக்குறைவு போன்ற உபாதைகள் தோன்றுகின்றன. இக்கழிவுகளை அகற்றுவதற்கு மூளை வித்தியாசமான ஒரு நடைமுறையைப் பாவிக்கிறது.

இரவு நேரத்தில் புலன்களோடு உடலும் ஓய்வெடுத்துக் கொள்வதனால் மூளைக்கு வேலை குறைந்துவிடுகிறது. இதனால் அதன் சக்தித் தேவையும் (metabolic needs) குறைந்துவிடுகிறது. இவ்வோய்வு நேரத்தில் மூளையின் கலங்கள் தமக்கிடையே உருவாக்கும் மின்சாரச் சமிக்ஞைகளைக்கொண்டு ஒத்திசைந்த ( coordinated) பம்ப் (pump) இயக்கத்தின் மூலம் தம்மைச் சுற்றியுள்ள கலச்சூழ் திரவத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றன. கழிவுகளைக் கொண்ட இத் திரவம் மூளையைச் சுற்றி மண்டையோட்டின் கீழுள்ள திரவத்துடன் (Cerebrospinal fluid) சேர்க்கப்பட்டு இறுதியில் நிணநீர்க் கால்வாயை அடைந்து நிணநீர்க் கழலைகளால் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நாளத்தில் இணைகிறது. இம்முறையில் கழிவுகள் வெளியேற்றப்பட்டதும் நரம்புக் கலங்கள் மீதான அழுத்தம் குறைவதுடன் அவை விரிவடைந்து தமது தொழிற்பாட்டைத் திறமையுடன் செய்ய வழிசெய்யப்படுகிறது. இதனால் தான் தூக்கம் கலைந்து எழுகின்றபோது மூளை மிகவும் துரிதமாகவும் கூர்மையாகவும் செயற்படக்கூடியதாக இருக்கிறது. (Photo by bruce mars on Unsplash)