News & AnalysisSri Lanka

துறைமுக நகரம் | பாராளுமன்றத்துக்கே அதிகாரம், உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சிறிய திருத்தங்களுடன் நிறைவேற்ற அரசாங்கம் உறுதி

துறைமுக நகர சட்ட வரைவு தொடர்பாக உச்சநீதிமன்றதில் பல தரப்பினராலும் தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு சபாநாயகரால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படது. இவற்றில் அரசியலமைப்போடு முரண்படும் விடயங்களை அரசாங்கம் விரும்பினால் திருத்தங்களின் மூலம் மாற்றிக்கொள்ளலாம். அல்லது இதே வடிவத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் சட்டமாக்கிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சபாநாயகர் சபையில் இத் தீர்ப்பை அறிவித்ததும், தாம் திருத்தங்களைக் கொண்டுவருவதன்மூலம் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலத்தைச் சட்டமாக்கிக் கொள்வோம் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

எனவே சிறிய் மாற்றங்களுடன் துறைமுக நகரச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  1. அரச நிலங்கள் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கிய கட்டளையின் பிரகாரமே நாட்டிற்குச் சொந்தமான கடற்படுக்கையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. அதனால் அக்கடற்படுக்கை மீது அமைக்கப்பட்ட துறைமுகநகரம் இலங்கையின் இறைமைக்குள் அடங்கும் நிலப்பரப்பு; இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டதிட்டங்களே அங்கு செல்லுபடியாகும்.
  2. சட்டவரைவிலுள்ள பல சரத்துக்கள் அரசியலமைப்போடு முரண்படுபவையாக உள்ளன. திருத்தங்களை முன்வைப்பதன் மூலமோ அல்லது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பானமையுடனும் + பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலமுமே நிறைவேற்றப்படலாம்.
  3. துறைமுக நகரத்துக்குள் இலங்கையர் செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து இலஙகையர்களும் இந் நகரத்துக்குள் சுதந்திரமாகச் சென்றுவரக்கூடியதாக சட்டவரைவில் திருத்தம் செய்யப்படவேண்டும்.
  4. துறைமுக நகரத்துக்கான நிர்வாக அதிகாரம் துறைமுக ஆணையத்திற்கு வழஙகப்பட்டிருப்பதில் விளக்கம் போதாது. இந் நிலையில் இவ்வதிகாரம் அரசியமைப்பின் கட்டளை 12(1) இற்கு முரணானது. இவ்வதிகாரக் கையாள்தலில் கொழும்பு துறைமுக நகர இதர கட்டுப்பாட்டு அதிகார சபைகளோடு ஆலோசித்த பின்னரே ஆணையம் முடிவுகளை எடுக்கவேண்டுமெனச் சட்ட வரைவு திருத்தம் செய்யப்படவேண்டும்.
  5. ஒரு நிறுவனம் துறைமுக நகரத்திலிருந்து வெளியேற விரும்பினால் அதற்காக அது ஒரு வரியொன்றைத் துறைமுக நகர நிர்வாகத்துக்குச் செலுத்த வேண்டும் என்ற சரத்து திருத்தப்பட்டு, இந் நகரத்தில் வணிகம் செய்வதற்கோ விலகுவதற்கோ இலங்கையர் ஒருவருக்கு பூரண சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
  6. தற்போதுள்ள சரத்துகள் 30(1), 33(1) இன் பிரகாரம் ஒருவர் துறைமுக நகரத்துக்குள் போக விரும்பினால் அதற்கான முன்கூட்டிய அனுமதியை துறைமுக ஆணையத்திடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு இலஙகையின் குடிமகன் ஒருவர் இந் நகரத்தில் உள்ள எந்தவொரு வியாபார நிலையங்களிலும், இலஙகை ரூபாயில் பணம் செலுத்தி அதன் சேவைகளைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.
  7. துறைமுக நகரத்தில் பணி புரியும் ஒரு வெளிநாட்டுக்காரரோ அல்லது இலங்கையரோ வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்பது அவசியமற்ற ஒன்று. இத் துறைமுக நகரத்தில் பணியாற்றப் போவது பெரும்பாலும் வெளிநாட்டவர். அவர்கள் இலங்கை அரசுக்கு வருமானவரி செலுத்தாதபோது எப்படி துதுறைமுக நகரம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் போகிறது?
  8. துறைமுக நகரத்தின் பணியாளர்களுக்கான ஊதியம் ரூபாய்களைத் தவிர்ந்த, அங்கு நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு நாணயத்தில் தான் இருக்கவேண்டுமென்று கூறுகிறது. இது மாற்றப்பட வேண்டும்.
  9. துறைமுக ஆணையம் தனது சட்டங்களைத் தானே இஉஅற்றும் அதிகாரம் கொண்டது என்பது நீக்கப்பட வேண்டும். இந்நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
  10. துறைமுக ஆணையாளர்களில் பெரும்பானமையினர் இலஙகையர்களாக இருக்க வேண்டும்.

தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகள், புவனேக அளுவிஹார, பிரியந்தா ஜயவர்த்தன, முருது பெர்ணாண்டோ, ஜனகா டி சில்வா ஆகிய ஐந்து நீதிபதிகளின் குழு உச்ச நீதிமன்றத்தில் இவ் வழக்கை விசாரித்திருந்தது.

இத் தீர்ப்பு நேற்று (18) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தனவினால் அறிவிக்கப்பட்டது.