News & AnalysisSri Lanka

துறைமுக நகரம் ஒரு ‘தனி நாடு’ போன்றது – லக்ஸ்மன் கிரியெல்ல

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் துறைமுக நகரம் அரசாங்கத்தின் நிதியதிகாரத்துக்கு அப்பாற்பட்ட சமஷ்டி அதிகாரங்களுடன் கூடிய ஒரு தனி நாடு போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது என சமாகி ஜன பலவேகய கட்சி பா.உ. லக்ஸ்மன் கிரியெல்ல ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 25 சட்டங்களும் துறைமுக நகரத்துக்கு எதிராகப் பாவிக்க முடியாதவை” என அவர் சுட்டிக் காட்டினார்.

பொது நிதியைக் கையாளும் மத்திய வங்கி, நிதிச் சபை, நிதியமைச்சு ஆகிய எந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் துறைமுக நகரப் பணிப்பாளர் சபையில் இடம்பெறவில்லை. அரசாங்கத்தின் பெயரில் செயலாற்றவென துறைமுக ஆணையத்துக்கு அதிகாரம் முற்றாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிதி நிறுவனங்களுக்கும், நிதியமைச்சருக்கும் இந் நகர நிதிக் கையாள்தலில் எந்தவித அதிகாரமுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் இது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தில் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு உண்மை தெரிவிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

சீனா துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக நகரத்தின் தற்போதைய விஸ்தீரணம் 665 ஏக்கர்களாகும். இதில் ஏறத்தாள 280 ஏக்கர்களை சீனா தன் வசம் வைத்துக்கொண்டு மீதியில் 225 ஏக்கர்களைப் பொது நிலமாக, இலங்கையின் பராமரிப்பிற்குக் கொடுத்திருக்கிறது. எஞ்சிய 160 ஏக்கர்களை இலங்கை அரசாஙகம் விற்றுப் பணமாக்கலாம்.

இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரத்தின் முதலாம் கட்டம் ஏறத்தாள நிறிவேறும் நிலையிலுள்ளது. இதில் 75% வர்த்தக வலையமாகவும் 25% குடியிருப்பு வலையமாகவும் இருக்கும். இரண்டாம் கட்ட நிர்மாணம் முழுவதும் பிரத்தியேக மக்கள் குடியிருப்பு வலயமாக இருக்கும். இரண்டாவது வலயத்தை நிர்மாணிக்க தற்போது இலங்கை அரசிடம் பணம் இல்லை என்பதால் வர்த்தக வலயம் தொழிற்படத் தொடங்கியதும் அதை விற்கும்போது அதிக பணத்தைச் சம்பாதிக்கலாமென அரசு நம்புகிறது.

இந் நகரத்தில் இயங்கும் நிதி நிறுவனங்களில் இலங்கையர்கள் அதிக பட்சம் $15,000 டொலர்கள் தொகையையும், வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் எல்லையற்ற அளவு பணத்தையும் வைத்திருக்க அனுமதியுண்டு. இவற்றிற்கு வரி எதுவும் அறவிடப்படமாட்டாது. அத்தோடு இத் துறைமுக நகரத்தில் பணி புரிபவர்கள் மீது இலங்கையின் சட்டங்கள் செல்லுபடியாகாது. அவர்கள் பெறும் சம்பளத்திற்கு வரி கட்டத் தேவையில்லை. இவற்றை விட் மேலும் தகவல்கள் வெளிவரவிருக்கின்றன என அறியப்படுகிறது.

இங்கு வதியும் சீனர்கள் பணி புரியவும் இலங்கை அரசின் சட்ட திட்டங்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டதிருக்கவும் அவர்களது குடிமனைகளை இந் நகரத்தில் அமைத்துக்கொள்ளவும் சீனா திட்டமிட்டுச் செயற்படுகிறது என்ற சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது.

இதே வேளை, துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் நிலையமாக மாறிவிடக்கூடாது என அமெரிக்க தூதுவர் அலெனா ரெப்லிட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவை மீறி இலங்கை அரசு இந் நகரத்தை பிராந்திய நலன்களை மீறிப் பாவிக்குமானால் இந் நகரத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள் மேற்குநாடுகளால் கறுப்புப்பட்டியலில் இடப்படலாம். இதனால் இந்நகரத்தில் மேலும் சீன ஆதிக்கம் வளர்வதற்கே அது வழி வகுக்கும்.

இந் நகரம் ஏறத்தாள வேர்ஜின் ஐலண்ட்ச், பஹாமாஸ் போன்று பெரும் தனவந்தர்கள் தமது பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் நாடுகள் போன்றதொரு நிதி நிர்வாகத்தைக் கொண்ட பிரதேசமாக உருவாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுக நகரத்தைப் போலவே இதன் நிர்மாணம், நிர்வாகம், உரிமம் ஆகியவற்றில் வெளிப்படைத் தனமை இருக்கவில்லை. தற்போது அவை சிறிது சிறிதாக வெளிவருகின்றன.