துறைமுக நகரச் சட்டத்தின் மூலம் நாடு, 2011 இல் போல கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் – ரணில்
துறைமுக நகரச் சட்டத்தின் மூலம் நாடு, 2011 இல் போல கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் - ரணில்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், 2011 இல் நடைபெற்றதைப் போல நாணய துவைப்பு காரணங்களுக்காக இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
“வெளிப்படைத்தன்மை இல்லாத காரணங்களுக்காக 2011 இல், நாடு சர்வதேச கறுப்புப் பட்டியலில் இடப்பட்டிருந்தது. 2015 இல் எமது அரசு பேரம் பேசி அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியிருந்தது. அப்போது சர்வதேசங்களினால் இடப்பட்ட நிபந்தனைகளை ஏற்று நாம் நடவடிக்கைகளை எடுத்தபடியால் தான் 2018 இல் அப் பட்டியலிலிருந்து எமது நாடு அகற்றப்பட்டது. நாம் திரும்பவும் அப்பட்டியலுக்குள் போய்விடக்கூடாது” என அவர் எச்சரித்தார்.
“இச் சட்டம், வெளிநாட்டு சூதாட்ட நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை அனுமதிக்கிறது. துபாய், சிங்கப்பூர், மொறீசியஸ், ஹொங் கொங், ரோக்யோ என்று எந்த இடத்திலாவது சூதாட்ட நிறுவனங்களை அந்நாடுகளின் மத்திய வங்கிகள் அனுமதிக்கவில்லை. மத்திய வங்கிக்கு நாம் முழு அதிகாரத்தையும் கொடுக்காமையால் அதில் ஒரு பங்கை இந்த ஆணையம் எடுத்திருக்கிறது. சூதாட்ட நிலையங்களை உருவாக்கி 24 மணித்தியாலங்களும் திறந்து வைத்து நேரடியாகவும் இணைய மூலமாகவும் சூதாட்டங்கள் நடத்தப்படுவதற்கு நாம் அனுமதிக்கப் போகிறோம்.
சூதாட்ட நிலையங்களுக்கென நான்கு அனுமதிப் பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் தற்போது இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் உரிமை பாராளுமன்றத்திடமிருந்து எடுக்கப்பட்டு ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. எமது இளைய சமுதாயத்தின் எதிர்காலம் வேண்டுமென்றே சீரழிக்கப்படப் போகிறது. நாம் ஏற்கெனவே ஒரு கஷ்டமான நிலையில் இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைய சட்ட வரைவு குறித்துத் தனது சமூக வலைதளமொன்றின் மூலம், ரணில் விக்கிரமசிங்க மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
- கொழும்பு துறைமுக நகர விவகாரம் | எதிர்பாராத நெருக்கடிக்குள் ராஜபக்ச ஆட்சி?
- PCR பரிசோதனை வலியைக் கொடுத்ததால் தாதியைத் தாக்கிய புத்த பிக்கு!
- கடந்த 11 வருடங்களில் பதியுதீன் வீட்டுப் பணிப்பெண்களில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் – பொலிஸ்
- கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் ஒரு தீவிர சிகிச்சைக்கான கட்டில்கூட இல்லை – பா.உ. சாணக்கியன்