துரும்பர் லீலை: தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
மாயமான்
அமெரிக்க அரக்கு மாளிகையில் சிலகால்ம் குடியிருந்த நமது லீலா விநோதன் துரும்பரை உள்ளே தள்ளி அழகு பார்க்க பைடன் கோஷ்டி தயாராகி விட்டது. இதற்கு முன்னர் வந்துபோன பல அரக்கு மாளிகை வாசிகள் செய்யாத லீலைகள் ஒன்றையும் துரும்பர் செய்யவில்லை ஆனால் அவர் தான் முதலாவதாகக் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு நிற்பவர்.
ஜோன்.எஃப். கென்னெடி, பில் கிளின்ரன் போன்றோரும் லீலா விநோதர்கள் தான். அவர்கள் மாளிகைக்குள் வைத்தே அலுவல் பார்த்தவர்கள். ஆனால் துரும்பர் 2006 இல் ஒரு பரத்தையுடன் உறவுகொண்ட செய்தி வெளியில் வராமல் அமுக்குவதற்குபணம்கொடுத்தது கிரிமினல் குற்றம் என சர்வ வல்லமை பொருந்திய மான்ஹட்டன் டிஸ்ட்றிக்ட் அட்டோர்ணி வழக்குத் தொடுத்த வழக்கில் ஜூரர்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர். ஏப்ரல் 4ம் திகதி நியூயோர்க் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும். தற்போது ஃபுளோறிடாவில் வசித்துவரும் துரும்பர் 3ம் திகதி இங்கு வரவிருக்கிறார். நாடகத்தின் நீதிமன்றக் காட்சி எப்படி இருக்கப்போகிறது? ‘கனம் கோர்ட்டார் அவர்கள்’ என்ன சொல்லப்போகிறார்கள்?
கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கென வழமையாகச் செய்யப்படும் சடங்குகள் துரும்பருக்கும் செய்யப்படுமெனக் கூறப்படுகிறது. கைநாட்டு எடுத்தல், முகம், காது பக்கங்களில் இருந்து புகைப்படம் எடுத்தல் (mug shots) ஆகிய சம்பிரதாயங்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒறேஞ் சூட், கைவிலங்கு பர்றித் தெரியாது. பாவம் எங்க, எப்பிடி இருந்த மனிசன். ரணிலைத் தற்காலிகமாகவேனும் அமெரிக்க ஜனாதிபதியாக்கினால் அந்தாள் இப்படியெல்லாம் நடக்க விடாது. டிஸ்ட்றிக் அட்டோர்ணியைத் தூக்கி உள்ளே போட்டுவிடும்.
இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்பது எல்லோருக்கும் தெரியும். பைடன் ஒரு கெட்டாரக் கெட்ட மனிசன். நல்ல மொழியில் சொல்வதானால் ‘நஞ்சன்’ என்றும் சொல்லலாம். 2024 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் துரும்பர் நிற்பது உறுதியாகிவிட்டது. அவரது போட்டியாளர் டெஸ் சான்ரிஸுடன் ஒப்பிடும்போது சிங்கன் முன்னணியில் நிற்பதும் பைடனுக்குக் கடுப்பு.
துரும்பருக்கென்று ஒரு வாக்கு மந்தை இருக்கிறது. ‘றெட் நெக்’ என்று சொல்லப்படும் வெள்ளைப் பாமரர்களும், தேவாலயங்களில் குடியிருக்கும் வெள்ளைகளும், வெள்ளை முதல்வாத தீவிர வலதுசாரிகளும் இம் மந்தையில் அடங்குவர். ஸ்டீவ் பனன் போன்ற விற்பன்னர்கள் இவர்களை மேய்க்கிறார்கள். ‘Buy America’ என ஒபாமா ஆரம்பித்து வைத்த ‘அமெரிக்க முதல்வாதத்தை’ துரும்பர் போன்றோர் “America First’ என்று மாற்றிச்சொல்லி ஆட்சியைக் கைப்பற்றினார்கள். எனவே மந்தைகள் இரண்டு கொட்டில்களுக்கும் மாறி மாறிப் படுத்தெழும்புபவை தான். ஆனால் துரும்பர் பக்கத்தை அமெரிக்கர்கள் விரும்புவதற்குக் காரணம் ‘மற்ற நாடுகளின் பிரச்சினைகளுக்காக அமெரிக்கர்கள் ஏன் சாகவேண்டும்’ என்ற கோஷத்துக்காக. யூக்கிரெய்ன் போரில் அமெரிக்கர்கள் இறக்கவில்லையாயினும் அமெரிக்கர்களின் பணம் எரிந்து கருகிக்கொண்டிருக்கிறது. இதை விரும்பாத அமெரிக்கச் சனம் வேறு வழியில்லாத காரணத்தால் துரும்பருக்கே வாக்களிக்கும் என எதிர்பார்க்கலாம்.
துரும்பர் ஒரு இனவாதி என்பதில் சந்தேகமில்லை. அதை அவரது வாய் அடிக்கடி காட்டிக்கொடுத்துவிடும். பைட்ன் இனவாதி இல்லை என்று நிரூபிக்க முடியாமல் அவர் தன்னைச் சோடனை செய்து வைத்திருக்கிறார். வேண்டுமானால் கமலா ஹரிஸ்ஸிடம் கேட்டுப் பாருங்கள். பாவம் அந்த மனிசி. எத்தனை கனவுகளுடன் வந்திருக்கும். பைடன் அவரைக் கிட்டத்தட்ட ஒரு வேலைக்கரி போலத்தான் வைத்திருக்கிறார். தற்போது புட்டினின் சாகசத்தால் ஆபிரிக்கா கட்சி மாறப்போகிறது என்றவுடன் ‘நாமெல்லாம் ஒன்று’ என்ற தோரணையில் அழுதுகொட்டி வருமாறு பைடன் அம்மணியை அனுப்பியிருக்கிறார். அவரது நிதானம் குறைந்துபோய்விட்டது என்ற காரணத்தால் அவரை 2024 தேர்தலில் போட்டியிடவேண்டாமெனக் கட்சி ஆதரவாளர்கள் கேட்ட போதும் மனிசன் விடாப்பிடியாக நிற்கிறது. இதனால் கமலா ஹரிஸுக்கான சந்தர்ப்பம் நழுவப் போகிறது. ‘லிண்டன் ஜோன்சன்’ moment வந்தாலே தவிர கமலாவுக்கு சான்ஸே இல்லை. பைடன் காலத்தில் போர்கள் மட்டும் பொங்கிப் பெருகும்; சமாதானத்துக்குச் சான்சே இல்லை. இதனால் சீனா தலைமையில் புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாகப் போகிறது. அதற்கு ஒரே ஒரு காரணம் ஜனாதிபதி பைடன். எனவே துரும்பரை அரசாசனம் ஏற்ற பல தரப்புகளும் முனைகின்றன. இந்த வழக்கு அதற்கு முத்தாய்ப்பு.
துரும்பரின் லீலா விநோத வழக்கு அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதனால் கொஞ்சக் காலம் அவர் சிறைக்குள் தள்ளப்பட்டால் அது அவருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம். வழக்கு நடைபெறும்போதோ அல்லது சிறைக்குள் இருக்கும்போதோ தேர்தலில் போட்டியிட முடியாதென சட்டம் ஒன்றும் இல்லை. தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என்றவுடனேயே அவரது தற்கொலைப் படைகள் அரக்கு மாளிகையை முற்றுகையிட்டன. சிறைக்குள் தள்ளப்பட்டால் அது கொழுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
பரத்தைக்குப் பணம் கொடுத்த வழக்கின் சட்ட சூட்சுமங்கள் என்ன்வென்பது தெரியாது. கனடாவில் பரத்தைக்குப் (Jane) பணம் கொடுக்கும் ஆண் (John) தான் குற்றவாளி. ஆனால் துரும்பரின் லீலை அப்படியல்ல. அல்லது அப்போது அதில் சம்பந்தப்பட்ட ஸ்ரோமி டானியல்ஸுக்கு என்ன கொடுக்கப்பட்டது என்ன வாங்கப்பட்டது என்பது வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் வாயை மட்டும் மூடுவதற்கென US$ 130,000 கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் துரும்பரின் வழக்கறிஞர் மூலம். வழக்கறிஞர் தன்னைக் காப்பாற்றுவதற்காகக் கட்சி மாறி வாக்குமூலமளித்தமையினால் தான் நிலைமை இந்தளவுக்கு முற்றிப்போயிருக்கிறது என்கிறார்கள். துரும்பர் பக்கம் இதுவரை இருந்த, ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்கள் அனைவரும் பக்கா போக்கிரிகள். இநம் இனத்தைச் சேரும் என்பார்கள். துரும்பர் அடிப்படையில் நேர்மையானவர் இல்லை. சொந்த சகோதரர் மரணப்படுக்கையில் இருக்கும்போதும் உதவிசெய்ய மறுத்த ஒருவர். ஈவிரக்கமற்ற வியாபாரி. எனவே அவரது கூட்டம் எப்படி இருக்குமென்று ஊகிக்கலாம். ஆனாலும் அவரை இதுவரை நல்ல கிரகமொன்று காப்பாற்றி வருகிறது. என்னவோ இந்த வழக்கு அவருக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே படுகிறது. இதை வைத்து அவர் 2024 தேர்தலில் வென்றுவிடுவார்.
அரசியல் பழிவாங்கல்களுக்கு மேற்கு நாடுகள் நமது நாடுகளிடம் பாடம் கற்க வேண்டும். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதியை ஜெயலலிதா மானபங்கப்படுத்தியதும், இலங்கையில் ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகாவை ராஜபக்ச அடியாட்கள் இழுத்தெறிந்து அவமானப்படுத்தியதும் நமக்குப் பழக்கப்பட்டவை. துரும்பர் அந்தளவுக்கு அவதூறு செய்யப்படமாட்டார், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் விசேட பாதுகாப்புக்கு அவர் இன்னும் உரித்தானவர் என்பது கனம் கோர்ட்டார் அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
பி.கு.: நான் ஒரு துரும்பர் ஆதரவாளன் அல்ல. ஆனால் பைடன் வெறுப்பாளி. அவ்வளவுதான். (Photo by Library of Congress on Unsplash)