Worldசிவதாசன்

துரும்பரின் அவமானம்


சிவதாசன்

துரும்பர் தோற்றுப் போனார். அவரை வெல்ல வைத்ததும், தோற்கச் செய்ததும் வெறும் வாக்குகள் அல்ல, அது தேவை கருதிய உலக நியதி.

நான்கு வருடங்களுக்கு முன்னர், ஏப்ரல் 24, 2016 அன்று கனடாவில் இருந்து வெளிவந்த ‘ஈ-குருவி’ பத்திரிகையில் ‘துரும்பரின் அவதாரம்‘ என்றொரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

‘வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்’ என்று லிபிய கடாபியின் மரணத்தைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடிய ஹிலாரி கிளிண்டனுக்கும், பின் லாடனைக் கொல்லவேண்டாமென்று ஒபாமாவைக் கேட்டுக்கொண்ட ஜோ பைடனுக்கும், மனிதர்களாக, நிறைய வித்தியாசமிருக்கிறது. அதனால் தான் அமெரிக்க மக்கள் ஹிலாரியை நிராகரித்து பைடனை அரவணைத்தார்கள்

விலகிப் போய்க்கொண்டிருக்கும் உலக ஒழுங்கைத் திருப்பி அதன் தடங்களில் செலுத்த, முதலில் அதற்குக் காரணமான அமெரிக்க நாட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற தொனியில் அக்கட்டுரை எழுதப்பட்டது. அதை நிறைவேற்றக்கூடிய ஒருவர் துரும்பர் என்பதே எனது கணிப்பு.

உலகமகா ஜனநாயக தேவன் உறையும் பள்ளியறையான வெள்ளைக் கோபுரத்தினுள் புகுந்து மல சலம் கழிக்காத குறையோடு சென்ற காடையர்கள், அமெரிக்கா தலையில் முக்காடைப் போட்டுச் சென்றிருக்கிறார்கள். அதற்காக அரை உலகத்துக்கு அப்பாலுள்ள சீனா, ரஷ்யா போன்ற இன்னோரன்ன கொடுங்கோல் நாடுகளைப் பீடத்தில் தூக்கிவைத்துக் கொண்டாடவேண்டுமென்று நான் கூற வரவில்லை. ‘திருந்த இடமுண்டு’ என்று வாத்தியார் எழுதிய றிப்போர்ட் கார்ட்டையே நான் அமெரிக்காவுக்குக் கொடுக்கிறேன்.

துரும்பர் பாவம். வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணவில்லை. சின்ன வயதிலிருந்து தானும் ஹிட்லர், முசோலினி போன்ற எதேச்சாதிகாரிகள் போல இருக்கவேண்டுமென்ற ஆசையக் கொண்டு வளர்ந்தவர் என, 35 வருடங்களுக்கு முன்னர் அவரது சரிதத்தை எழுதிய ரெட் ஷுவாட்ஸ் என்னும் நூலாளர் கூறுகிறார். அதனால் தான் அவருக்கு வட கொரிய, ரஷ்ய அதிபர்கள் மேல் அளவிலாக் காதல். அதிகாரத்தில் மேல் அவருக்கு அளவிலாக் காதல். தான் வரும்போது தனது பரிவாரம் எழுந்துநின்று மரியாதை செலுத்தவில்லை எனப் பகிரங்கமாகப் புளுங்கிக் கொண்டவர். கடந்த நான்கு வருடங்களில் அவர் நடந்துகொண்ட முறை, வடிவேலுவின் ‘நானும் ரவுடி’ ரகம் தான்.

தனது வரத்தை அழிவுக்காகப் பயன்படுத்துவான் என்று முக்காலமும் உணர்ந்த சிவனுக்குத் தெரிந்திருந்தும், முறையாகத் தவம் செய்த காரணத்தால் அசுரனுக்கும் அவர் வரத்தைக் கொடுத்தார் என்கிறது சைவ மதம். அதுவே நேர்மையான, நீதியான செயற்பாடு. நேர்மையாக நடைபெற்ற ஒரு ஜனநாயகத் தேர்தலின் மூலமே, 2016 இல் துரும்பர் ஜனாதிபதியாகத் தெரிவானார்.65 மில்லியன் அமெரிக்கர்கள் அவரில் ‘எதையோ’ கண்டிருந்தார்கள் என நிபுணர்கள் சொல்லலாம். நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் எதையோ கண்டது துரும்பர் மீதான நல்ல குணங்களையல்ல; மாறாக எதிர்த்தரப்புகளின் மீதான சேறுகளை. அவர்கள் கண்டது Elites என அவர்கள் வர்ணிக்கும், தம்மைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் உலக மகா வணிகர்களின் புரட்டுகளை, எமாற்றுக்களை. கிளின்ரன்களின் மாய வித்தைகளை. நியூ யோர்க், வாஷிங்டன் பொற்கோபுரங்களில் குடிகொண்டிருக்கும் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட குலத்தின் வஞ்சனை பொறுக்காது உருக்கொண்டு ஆடிய இன்னுமொரு குலத்தின் – blue collar – பழிவாங்கல் முயற்சியின் விளைவே துரும்பரின் அவதாரம்.

துரும்பர் ஒரு வியாபாரி. நம்ம ஊரில் சொல்வதுபோல் ஒரு சில்லறை வியாபாரி. வால் ஸ்ட்றீட் வியாபாரிகள் போன்று சின்ன எழுத்துப் பத்திரங்களால் மில்லியன்களில் ஏய்க்கும் மொத்த வியாபாரியல்ல. நாட்கூலிக்காரனுக்குப் பணம் தரமாட்டேன் என ஏமாற்றும் வயிற்றிலடிக்கும் வியாபாரி. அவரிடம் sophistication இல்லை. அதனால்தான் அவர் இந்த blue collar மந்தைகளுக்கு இலகுவாக மேய்ப்பராக முடிந்தது.

வியாபாரிகள் தேடித் திரிவது பலவீனத்தையும், பலவீனர்களையும். துரும்பரின் (‘ blue collar’ whites) ‘குலத்தவர், மற்றும் சில தேங்காய் (உள்ளே வெள்ளை) ‘நிறந்தவர்கள்’ அவரின் அடிமையானார்கள். துரும்பரிடம் அவர்களைக் கொண்டுவந்து சேர்த்தவர் அலெக்ஸ் ஜோன்ஸ் (Info Wars) என்ற ஊடகவியலாளர்.

‘இன்ஃபோ வார்ஸ்’ அலெக்ஸ் ஜோன்ஸ்

வாய் கிழியக் கத்தும், பொய்களையே தினமும் சுவாசிக்கும் (அவரது முன்னாள் மனைவியின் கூற்றுப்படி) அமெரிக்க வெள்ளையின வெறுப்பில் முதலிட்டுப் பணம் குவிக்கும் இந்த அலெக்ஸ் ஜோன்ஸ் நீண்ட காலமாகச் சேர்த்து வைத்திருந்த இந்த blue collar whites குலத்தை அப்படியே மொத்தமாகத் துரும்பர் வாங்கிக் கொண்டார்.

அதேவேளை துரும்பரின் பலவீனத்தை – பணம் சேர்த்தாகிவிட்டது, இனிமேல் பதவியைச் சேர்க்கவேண்டும் என்ற அவரது வெறியை – இனம்கண்டு அவரைத் தனது America First தேசிய ஒழுங்கிற்குள் கொண்டுவந்து ஹிட்லரின் பாசிசத்தை அமெரிக்காவில் கட்டியெழுப்பத் துடித்துக்கொண்டிருக்கும் ஸ்டீவ் பனன் (Breitbart News) என்னும் அரசியல் சாணக்கியர் போன்ற சிலர் அடையாளம் கண்டுவிட்டனர்.இந்த மூன்று பிரகிருதிகளும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு ஒருவரையொருவர் பாவிக்கப் புறப்பட்டனர். அதில் இறுதியாக வெற்றி கண்டவர் துரும்பர். பாரம்பரிய white collar குடியரசு வாக்காளர்களும், அந்நியப்பட்டிருந்த blue collar வாக்காளர்களும் சேர்ந்து 2016 இல் கூட்டாகத் துரும்பரைத் தூக்கி அரச கட்டிலில் வைத்துவிட்டனர். தான் வென்றது தனக்கே ஆச்சரியமாக இருந்தது எனத் துரும்பரே ஊடகங்களுக்கு வாக்குமூலம் கொடுத்திருந்தார். எனவே அவர் எதிர்பர்த்து எடுத்த பதவியல்ல அது.

பொய்யான செய்திகளையும், கட்டுக் கதைகளையும் உரத்துச் சங்கூதுவதில் அலெக்ஸ் ஜோன்ஸ் மகா கெட்டிக்காரர். ஆங்கிலத்தில் snake oil salesman என இப்படியானவர்களை அழைப்பார்கள். எதையும் விற்றுவிடக்கூடிய வல்லமை இவர்களிடம் இருக்கிறது. துரும்பர் அடிக்கடி பொய் சொல்வதற்கு ஸ்கிறிப்ட் எழுதுவதே அலெக்ஸ் தான். துரும்பருக்கு எது பொய் எது உண்மை என்பது தெரியாது. அவர் கூறும் அத்தனை பொயகளும் (ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்பது உட்பட) அலெக்ஸ் ஜோன்ஸிடமிருந்துதான் புறப்பட்டவை. மெக்சிக்கர்கள் கற்பழிப்பவர்கள் என்பது முதல், ஹிலாரி தான் ISIS ஐ உருவாக்கியவர் என்பதுவரை அவரது தொழிற்சாலை பல செய்திகளைத் தயாரித்துள்ளது. இவற்றில் உண்மை இருக்கிறதோ இல்லையோ தளம்புகின்ற மக்கள் மனங்களை அவை sickகெனப் பிடித்துக்கொண்டன. இதனால் அலெக்ஸ் ஜோன்ஸுக்கு பல மில்லியன் ரசிகர்கள் இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும் உழலும் அதிகம் கல்வி கற்காத blue collar வெள்ளையர்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கிய ஒரு குலத்தின் வழித் தோன்றல்கள். நெடுங்காலமாக மேய்ப்பரைத் தேடிகொண்டிருந்த அவர்களுக்கு துரும்பரை அறிமுகம் செய்துவைத்தது அலெக்ஸ் ஜோன்ஸ் போன்றவர்கள் தான். அலெக்ஸ் ஜோன்ஸின் சங்கும், துரும்பரின் உடுக்கும் ஸ்டீவ் பனனின் இசையமைப்பில் ஒத்திசைத்ததன் விளைவுதான் துரும்பரின் 2016 அவதாரம்.ஸ்டீவ் பனன்

ஸ்டீவ் பனன்

துரும்பரின் நாலாண்டு ஆட்சியில் அவர் சில ஆச்சரியமான உள்நாட்டு / வெளிநாட்டுக் கொள்கைகளைக் கைக்கொண்டிருந்தார். அவையெல்லாம் ஸ்டீவ் பனனின் புத்தகத்தில் இருந்து பெறப்பட்டவை. அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் என்ன வேலை? (ஸ்டீவ் பனனுக்கு யூதர்களைப் பிடிக்காது. பின்னாள் அவரை வெள்ளைமாளிகை ஆலோசகர் பதவியிலிருந்து வெளியேற்றியது துரும்பரின் யூத மருமகன் ஜெரார்ட் குஷ்னர் என்பது இன்னுமொரு கொசுறு). மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நாட்டாண்மைக்குக் காரணம் ஒன்று தமக்குத் தேவையான தடையற்ற எண்ணை ஊற்று; இரண்டு: மத்திய கிழக்குச் சண்டியனான இஸ்ரேலைப் பாதுகாப்பது. இதற்காக ஏன் அமெரிக்க இராணுவம் உயிரைக் கொடுக்கவேண்டுமென்பது ஸ்டீவ் பனனின் வாதம். அதையே தான் துரும்பரும் பிடித்துக் கொண்டார். Make America Great Again என்ற சுலோகத்தின் சூத்திரதாரியே ஸ்டீவ் பனன் தான். உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ளாத ஒரு சாதாரண அமெரிக்கனுக்கு இக் கொள்கை இலகுவாகப் பிடிக்கும். தன் குலம், தன் இனம், தன் சாதி, தன் மொழி என்று பலவடிவங்களின் கலவைதான் தேசியம். இவ் வலுவான formula உலகில் பல சர்வாதிகார ஆட்சிகளுக்கு வழிவகுத்திருக்கிறது. துரும்பர் பிடித்துக்கொண்ட Make America Great Again (MAGA) தேசியமும் இந்த வகையானது தான்.

சீனா போன்ற அமெரிக்க / உலக எதிரிகளைத் தமது வணிக நலன்களுக்காகத் தூக்கி வைத்துக் கொண்டாடிய வால் ஸ்ட்றீட் முதலைகளால் வாங்கப்பட்ட குடியரசு / ஜனநாயகக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான் பல அமெரிக்க நிறுவனங்கள் தமது அமெரிக்க தொழிற்சாலைகளைச் சீனாவுக்கும் தென்னாசிய நாடுகளுக்கும் நகர்த்தியிருந்தன. அவற்றையெல்லாம் அமெரிக்காவுக்குத் திருப்பிக் கொண்டுவந்து அமெரிக்கர்களுக்கு வேலை கொடுக்கவேண்டுமெனத் துரும்பர் விளாசித்தள்ளியதும் ஸ்டீவ் பனனின் கொள்கைதான். கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பக்கூறி மக்களை மயக்குவதில் துரும்பர் மகா கெட்டிக்காரர். அவற்றை விட அவரிடம் அசலாக வேறெதுவுமில்லை. அவரது வாக்கு வங்கி அதை வாங்கி முறையாகச் சேமித்துக்கொண்டது. 2016 ஐ விட 2019 தேர்தலில் அவரால் அதிக வாக்குகளைப் (சுமார் 75 மில்லியன்) பெற முடிந்திருக்கிறது என்பது அவரை நம்பிய மக்களை அவர் ஏமாற்றவில்லை என்பதையே காட்டுகிறது.

ஸ்டீவ் பனனின் வெளியேற்றத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகைக்குள் துரும்பரின் நண்பர்கள் என்ற வகையில் இரண்டு வகையான நரிகள் புகுந்துகொண்டன. துரும்பரின் கூட்டுக் குடும்பத்தோடு வெள்ளை மாளிகைக்குள் முகாமடித்துக் கொண்டவர்கள்: ஒன்று, துரும்பர் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அலையும், முன்னாள் நியூ யோர்க் மேயரும், துரும்பரின் சட்ட ஆலோசகருமான, ரூடி கில்யானி போன்றோர். இரண்டு: துரும்பரைப் பகைத்தால் தாம் திரும்பவும் வெற்றிபெற முடியாது என உணர்ந்த மிட்ச் மக்கொண்ணெல், ரெட் குறூஸ் போன்ற பாரம்பரிய குடியரசுக்கட்சி முதலைகள். அரச மாளிகை மீதான படையெடுப்பை உசுப்பேத்தி விட்டதில் இவர்கள் எல்லோருக்கும் பெரிய பங்குண்டு.படையெடுப்பு

வெள்ளை மாளிகை மீதான துரும்பர் படைகளின் படையெடுப்புக்குத் துரும்பர்தான் காரணம் என்பதில் ஐயமில்லை. அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை உணர்வதற்கான விவேகம் அவரிடம் இருக்கவில்லை. அதே வேளை பாரம்பரிய குடியரசுக்கட்சி இன்னும் அசையாமல் அவர் பக்கம் நின்றதும் அவர் எடுக்கும் முடிவுகளை நியாயப்படுத்துவதாக அவரை எண்ண வைத்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய சில குடியரசுக் கட்சியினர் தமது மனப்புழுக்கங்களை வெளியில் சொல்ல அஞ்சினர். அடுத்த தடவை தாம் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமென்பதே அவர்களது நோக்கம். துரும்பர் தனக்குப் பின்னால் 75 மில்லியன் வாக்காளர்களை வைத்திருக்கிறார். அடுத்த தடவையும் அவர் ஆட்சிக்கு வரலாம். இந்த அச்சம் காரணமாக அவர்கள் துரும்பரைத் தூக்கியெறியத் தயாராகவிருக்கவில்லை.

எனவே ‘படியெடுப்பை’ அவர்கள் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எவரும் இதற்கெதிராக உரத்துக் குரலெழுப்பவில்லை. துரும்பரின் மீள்வரவைத் தடுப்பதற்காக அவர் மூக்குடையட்டும் என அவர்கள் இப் படையெடுப்பை ரசித்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளை மாளிகை situation room இலிருந்து துரும்பரின் உள்வட்டம் இப்படையெடுப்பை வேறு வழியில் ரசித்துக்கொண்டிருந்தது. துரும்பரின் பின்னால் இப்படியொரு ‘வீரப்படை’ இருக்கிறதே என அவர்கள் அக மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். துரும்பரின் இரண்டாவது வருகையையோ அல்லது அவரது மகள் / மகனின் முதலாவது வருகையையோ இது தீவிரமாகப் பாதிக்கும் என்பதை அறியும் விவேகம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை.ஜனநாயகம்

நீதி என்றவுடன் உலகில் இருக்கும் ஒரே ஒரு சின்னம் நியூ யோர்க்கிலிருக்கும் விடுதலை மாதாவின் (Statue of Liberty) சிலை தான். விருப்பமோ விருப்பமில்லையோ உலகில் ஜனநாயத்தைக் காபந்துகொண்டுவரும் ஒரே நாடும் அமெரிக்கா தான். அவ்வப்போது அது உலகில் சில அசுரர்களையும், சில தேவர்களையும் உருவாக்கியிருக்கிறது. உலக ஒழுங்கு பிறழும்போது அதை நிமிர்த்தும் ஆயுதமாக இன்றுவரை இருந்துவரும் ஒரே வல்லரசும் அது தான். அதன் தலைநகரப் படையெடுப்பு நிகழ்வும் தேவை கருதி நடைபெற்ற ஒன்றுதான். ஒரு வகையான correction process. அசுரர்களான யப்பானையும், ஜேர்மனியையும் அழித்தபின்னர் அதை மீளக் கட்டியெழுப்பி அவற்றைத் தன்னோடு அரவணைத்து வைத்திருப்பதுவும் அதுதான். திறமைக்கான மதிப்பைத் தரும் உலகின் ஒரே நாடு அமெரிக்கா என்பதில் சந்தேகமில்லை.

எரிக்கப்பட்ட அந்த தலைநகரை மீண்டும் கட்டியெழுப்பிய கறுப்பினத்தவர் ஒருவரை ஆட்சியிலமர்த்திய மனிதர்கள் இன்னும் அங்கு வாழ்கிறார்கள். அதனால் அமெரிக்கா வாழும்; ஜனநாயகம் வாழும்.

ஜோ பைடன்

ஜோ பைடன், ஹில்லாரி கிளிண்டன் (Photo by Jeff Fusco/Getty Images)

அமெரிக்க ஜனாதிபதிகளில் மிக நல்லவர்கள் என நான் கருதுவது இருவரை. ஒன்று ஜிம்மி கார்ட்டர் மற்றது ஜோ பைடன். பைடன் வாழ்வில் நிறைய துன்பங்களைச் சந்தித்தவர். கைகள் சுத்தமானவர். ‘வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்’ என்று லிபிய கடாபியின் மரணத்தைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடிய ஹிலாரி கிளிண்டனுக்கும், பின் லாடனைக் கொல்லவேண்டாமென்று ஒபாமாவைக் கேட்டுக்கொண்ட ஜோ பைடனுக்கும், மனிதர்களாக, நிறைய வித்தியாசமிருக்கிறது. அதனால் தான் அமெரிக்க மக்கள் ஹிலாரியை நிராகரித்து பைடனை அரவணைத்தார்கள். துரும்பரைத் தண்டிப்பதில் அவருக்கு அவசரமில்லை; தேவையுமில்லை. பழிவாங்கும் மனம் அவருடையதல்ல. மாறாகத் துரும்பரைப் பழிவாங்குவதில் முன்னுக்கு நிற்பவர்கள் குடியரசுக் கட்சியினர். தமது மீள்வரவுக்காகத் துரும்பரைப் பலிக்கடாவாக்குவது அவர்கள் நோக்கம்.

துரும்பர் என்ற அசுரன் உருவாக்கப்பட்டது பைடன் என்ற தேவனின் வரவுக்காக. இருவருமே கடவுளின் குழந்தைகள் தான். அது அவர் செய்யும் balancing act.

பைடனின் நிர்வாகத்தில் அமெரிக்கா மட்டுமல்ல உலகமும் நலம் பெறும்.