Columnsமாயமான்

துரும்பரின் அதிர்ஷ்டம்

மாயமான்

துரும்பருக்கு 76 வயது. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் செய்த மனிசன். சில வேளைகளில் மகிந்த ராஜபக்சவின் சாதகமும் துரும்பரது போலவே இருக்குமென நினைக்கிறேன். பெண்ணில் கைவைத்தாலும் அதிர்ஷ்டம், பொன்னில் கைவைத்தாலும் அதிர்ஷ்டம்.

2024 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துரும்பர் மீண்டும் களமிறங்குகிறார். அவரது ஆதரவாளர்களைப் போலவே வழக்குகளும் அவரைப் பின்தொடர்கின்றன. பைடன் தடுமாறி விழ விழ துரும்பர் உயர உயரப் பாய்கிறார். சாதகத்தில் கிரகங்கள் அப்படி.

இன்று (ஜூன் 13) அவரது ஒரு வழக்கு ஃபுளோறிடா மாஜிஸ்திரேட்டினால் எடுக்கப்பட்டது. இது ஒரு கிரிமினல் வழக்கு. மத்திய வழக்குத் தொடுநர் நீண்ட நாட்களாக யூரர்களுடன் பணிபுரிந்து துரும்பரைக் கூண்டிலேற்ற போதுமான காரணங்களுண்டு எனத் தீர்மானித்தபின் (indictment) நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட அல்லது தீர்ப்பு வழங்க ஓரிரு வருடங்கள் எடுக்கலாம். அதற்குள் அவர் தன்னை ஒரு நிரபராதியாகக் காட்டி, அழுது குளறி வாக்காளர்களின் இரக்கத்தைச் சம்பாதித்து தேர்தலில் வெற்றிபெறவும் நிறைய வாய்ப்புகளுண்டு. இதுவரையில் அவர் ஆடிய நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

அவர் எதிர்பார்த்தவாறு அல்லது பாதுகாப்புத்துறை எதிர்பார்த்தவாறு 50,000 ஆர்ப்பாட்டக்காரர் நீதிமன்றச் சூழலை வட்டமிடவில்லை. ஹெலிகொப்டர்கள் மட்டுமே வட்டமிட்டன. துரும்பர் மீது காவி அங்கியோ கைவிலங்குகளோ போடப்படவில்லை. பிணையேதுமின்றி, பயணத்தடை ஏதுமின்றி வழக்கமான அலங்கார ஊர்தியில் ஏற்றி ‘அப்பனே போய்வா’ என அனுப்பப்பட்டார். ‘நானும் ரவுடிதான்’ ஃபாஷனில் ஏதும் நடக்குமென அவர் எதிர்பார்த்திருப்பார். அல்லது கலைஞர் கட்டி இழுக்கப்பட்டதுபோல் அல்லது சரத் ஃபொன்சேகா கையாளப்பட்டதுபோல் சூரன்போர் திருவிழாவாக இருக்குமென அவர் எதிர்பார்த்திருப்பர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் அது அவருக்குப் பெரிய விடயமே அல்ல. வாயொன்றே அவருக்குப் போதும்.

அதிகார வர்க்க வெள்ளை அமெரிக்கர்களது நீதி விவகாரங்கள் கறுப்பர்களுடையது போலல்ல. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் வெள்ளை நீதிக்கு பெரிதாகவும் கறுப்பு நீதிக்குச் சிறியதாகவும் நீதிவான்களால் பார்க்கப்படும். பெரிய ஓட்டைகளால் அநீதி தப்பி ஓடுவதும் சிறிய் ஓட்டைகளில் நீதி மாட்டுப்படுவதும் சகஜம். இந்தத் தடவை 37 குற்றங்கள். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் வெள்ளை மாளிகையிலிருந்து தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றார் எனவும் அங்கு அவற்றைப் பொறுப்பற்ற முறையில் கையாண்டிருந்தார் எனவும் பல சட்டங்களின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். இவற்றிலிருந்தும் தான் தப்பிவிடுவேன் என அவர் நம்புகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் நியூ யோர்க் மாநிலத்தில் பரத்தை ஒருவருடனான உறவை மறைக்க பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை அம்மாநில வழக்குத் தொடுனர் கொண்டுவந்திருந்தார். அவ்வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உலகின் பல நாடுகளில் போல நீதி தேவதைக்கு கால்களில் விலங்கு, மெதுவாகத்தான் நடக்கமுடியும். இவ்வழக்கு அவரது அரசியல் எதிரிகளால் அவரை அவமானப்படுத்தவென்றே புனையப்பட்டது என அவர் இப்போதும் குளறி வருவது மக்களின் அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. தோற்றுப்போன ஒரு ஜனாதிபதிக்கு ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதியைவிடச் செல்வாக்கு அதிகம் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய நீதி பரிபாலனத்துக்குள் வரும் ஃபுளோறிடா வழக்கு அப்படியானதொன்றல்ல. இதிலுள்ள 37 குற்றங்களில் பெரும்பாலானவை வேவுச் சட்டத்தின் கீழ் (Espionage Act) வருகின்றன. அவருக்கெதிராகப் போதுமான ஆதாரங்களும் இருக்கின்றன.

ஆவணக் காப்பகத்திலிருந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல ஆவணங்களை அவர் தனது வீட்டிற்குக் கொண்டுபோயிருந்தது மட்டுமல்லாது அவற்றை அங்கு பொதுவெளியில் பலரது பார்வைகளிலும் படும்படியாக வைத்திருந்தார் எனவும் இவற்றைப் படம் பிடித்து ஆதாரங்களுடன் இவ்வழக்கு சோடிக்கப்பட்டிருக்கிறதெனவும் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாது ஆவணக் காப்பக அதிகாரிகள் இவ்வாவணங்களைத் திருப்பித் தருமாறு பலவழிகளிலும் முயற்சி செய்திருந்தார்கள் எனவும் அவற்றையெல்லாம் துரும்பர் உதாசீனம் செய்துவிட்டார் எனவும் தற்போதைய குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. இதனால் இந்தத் தடவை அவரால் தப்ப முடியாது; குறைந்தது 20 வருடங்களாவது சிறைக்குச் செல்ல வாய்ப்புண்டு என அவரது கட்சி சட்ட நிபுணர்களே கூறுகிறார்கள். அப்படியிருந்தும் துரும்பரின் அட்டகாசச் சிரிப்பு அடங்கவில்லை. இதற்கு முழுமுதற் காரணம் அமெரிக்க ஊடகங்கள். பொய்களைச் சிருஷ்டிப்பதில் அவை புகழ்பெற்றவை. மத்தியதர, அடித்தட்டு மக்கள் அவற்றின் செய்திகளை நம்ப மறுக்கிறார்கள். தனக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது எனத் துரும்பர் கத்திக் குளறுவது உண்மையென அவர்கள் நம்புகிறார்கள். அவரது நடிப்பு மக்களிடையே எடுபட்டு வருகிறது.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தாலும் அங்கு முன்வைக்கப்படும் ஒவ்வொரு விடயங்களையும் மறுதலித்துக் கேள்வி கேட்டு நாட்களை இழுத்தடிக்க துரும்பர் தரப்புக்கு நிறைய சந்தர்ப்பங்களுண்டு. எனவே 2024 நவம்பர் தேர்தலுக்கு முன்னர் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதற்கான சாத்தியமே இல்லை. எனவே தேர்தலில் அவர் வெற்றி பெறுவார். அப்படித்தான் இன்னுமொரு குடியரசுக் கட்சிக்காரர் ஜனாதிபதியாக வந்தாலும் புதியவர் தனது அதிகாரங்களைப் பாவித்து துரும்பரை மன்னித்துவிடுவதற்கான சாத்தியங்களே உண்டு. துரும்பரின் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தாம் துரும்பரைக் காப்பாற்றுவோம் என விவேக் ராமஸ்வாமி போன்ற வேட்பாளர்கள் இப்போதே கூவத் தொடங்கிவிட்டனர். எனவே துரும்பர் ஜனாதிபதியாக வந்தாலும் அல்லது அவரது கட்சிக்காரர் யாராவது ஜனாதிபதியாக வந்தாலும் அவர் சிறைக்குப் போகாது தப்புவது திண்ணம்.

துரும்பர் போன்ற தீவிர வலதுசாரிகளின் மீள்வருகைக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. இது பெண்டூலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்த் திசையில் திரும்பும் தருணம். தீவிர இடதுசாரிகள், முற்போக்காளர்கள், மனித உரிமை காப்பாளர்கள் என ஒரு கூட்டம் தமது செயற்பாடுகளால் பெண்டூலத்தை மறுபக்கம் தள்ளிக்கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். இனி வருவது வலதுசாரிகளின் காலம். இந்த வலதுசாரிகளின் மீளெழுச்சியின் பின்னால் மதங்கள் இணைந்திருக்கின்றன என்கிறார்கள். சமீபத்தில் கனடிய CBC வானொலியின் ஊடகவியலாளர் ஜொனதன் மொண்ட்பெற்றிற் வெளியிட்ட செய்தி இதை உறுதிப்படுத்துகின்றது.

கோவிட் பெருந்தொற்று வீரியத்துடன் வலம் வந்த காலத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன. இதனால் அனைத்து மத ஸ்தாபனங்களும் வருமானத்தால் மிகவும் பாதிப்படைந்தன. பெரும்பாலான ஸ்தாபனங்கள் அரச கட்டளைகளைப் பின்பற்றின என்றாலும் சில பழமைவாத போதகர்கள் இக்கட்டளைகளை மீறியிருந்தனர். இவர்களில் சிலர் மீது வழக்குகள் பதியப்பட்டன. செப்டமபர் 2020 இல் இவர்களில் சிலர் கிறிம்ஸி, ஒன்ராறியோவில் இரகசியமாக ஒன்றுகூடி ஒரு பிரகடனம் செய்தார்கள். ‘நயாகரா பிரகடனம்’ என அழைக்கப்படும் இதன் பிரதான செயற்பாடு மத ஸ்தாபனங்கள் அரசியலில் தீவிரமாக ஊடுருவி மதச்சார்பின்மை, இடதுசாரி, முற்போக்கு போன்ற சித்தாந்தங்களுடன் போட்டியிடும் அரசியல்வாதிகளைத் தோற்கடிக்கவேண்டும் என்பதே. இது கனடாவில் செய்யப்பட்ட பிரகடனமாயினும் உலகளாவிய ரீதியில் வலையமைப்பைக் கொண்டது. துரும்பரின் ஆதரவாளர்களில் சகல இன மக்களும் காணப்படுவதற்கும் ஒன்ராறியோ மாகாண பாடசாலைகளில் ஒருபாற் சேர்க்கை, பால்மாறிகள் உரிமை ஆகியவற்றுக்கு எதிராக பல்லின மக்களும் கூடுவதற்கும் பின்னால் மத ஸ்தாபனங்களின் உந்துதல் இருக்கிறது என்பது ‘ந்யாகரா பிரகடனம்’ செயலில் இறங்கிவிட்டது என்பதையே காட்டுகிறது. இப்பெரிய விசையின் தாக்கத்தால் பெண்டூலம் தனது வலது நோக்கிய பயணத்தை ஆரம்பித்துவிட்டது என்பதையே நாம் அனுமானிக்க முடிகிறது.

‘நயாகரா பிரகடனம்’ உண்மையானால் கனடாவில் அடுத்த பிரதம்ர் பியர் பொலியெவாகவும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி துரும்பராகவும் இருப்பரென உறுதியாயாகக் கூறலாம். அப்போ மஹிந்த ராஜபக்ச? சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்! / அனுதாபங்கள்!