Columnsசிவதாசன்

துருக்கி | எர்டோகன் வெற்றி- அமெரிக்காவின் தோல்வி..

சிவதாசன்

நேற்று நடந்து முடிந்த துருக்கியின் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 52.14 % வாக்குகளைப் பெற்று முன்னாள் ஜனாதிபதி எர்டோகன் மீண்டும் வெற்றிபெற்றுள்ளாரென அறிவிக்கப்படிருக்கிறது. இதன் மூலம் அவர் மூன்றாம் தவணையாகத் தொடர்ச்சியாக துருக்கியின் ஜனாதிபதியாக வருகிறார். கடந்த தேர்தல்களைப் போலல்லாது இந்தத் தடவை இது அமெரிக்க அதிகாரம், செல்வாக்கு மீதான களப்பரீட்சையாகப் பார்க்கப்பட்டது. அந்த வகையில் இத் தேர்தல் வெற்றி அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட கரி.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் யூக்கிரெய்ன் போரும் அதைத் தொடர்ந்து விரைவாக மாறிவரும் உலக ஒழுங்கும் துருக்கியை ஒரு சங்கடமான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளன. நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஒரே ஒரு இஸ்லாமிய நாடு துருக்கி. நேட்டோ சாசனத்தின் கட்டளை 5 இன் பிரகாரம் ஒரு நேட்டோ அங்கத்தவ நாடு தாக்குதலுக்கு உள்ளாகுமானால் அது நேட்டோவின் அனைத்து (32) நாடுகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவே பார்க்கப்படும் எனக் கூறுகிறது. (கட்டளை -6 இதைப் பின்னர் பலவீனமாக்குகிறது). இப்பாதுகாப்பு அம்சத்துக்காக ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் பல நேட்டோவில் இணைந்துள்ளன. துருக்கி சோவியத் குடியரசின் எல்லையில் இருப்பதால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுக்கு அதைத் தன்னுடன் இணைப்பதில் மிக்க மகிழ்ச்சி. 1952 இலேயே துருக்கி இணைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் ‘ஐரோப்பிய சமூகங்களைக்’ கொண்ட இந்த நேட்டோ குடும்பத்தில் துருக்கி எப்போதுமே உள்வீட்டுப் பிள்ளையாகக் கருதப்பட்ட ஒன்றல்ல. இதனால் 1999 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு பகீரதப் பிரயத்தனம் எடுக்கவேண்டியிருந்தது. எர்டோகன் போன்ற துருக்கிய தேசியவாதிகளுக்கு இந்த வடு எப்போதுமே இருந்துவந்தது.

எர்டோகன் ஜனாதிபதியாக வந்ததும் துருக்கியின் நிலை முன்னேற்றம் கண்டது. அதே வேளை புட்டின் தலைமையிலான ரஷ்யாவின் மீளெழுச்சியும் அதற்கு உதவி செய்தது. சிரியாவில் அமெரிக்காவின் அனுசரணையுடன் குவிக்கப்பட்ட குர்திஷ் படை துருக்கி- அமெரிக்காவிடையேயான உறவில் கீறலை விளைவித்தது. குர்திஷ் போராளிகள் அமைப்பதற்காகப் போராடும் தனிநாட்டின் ஒரு பகுதி துருக்கியிலும் இருக்கிறது. எனவே சிரியாவில் குந்தியிருக்கும் அமெரிக்க சார்பு குர்திஷ் படைகளைத் துவம்சம் செய்ய ரஷ்யாவின் உதவியை துருக்கி நாடியது. இதனைத் தொடர்ந்து புட்டின் – எர்டோகன் உறவு வலுத்தது. இதைவிட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் ரஷ்ய எரிவாயுவின் ஒரு குழாய் துருக்கியினூடே செல்கிறது. எனவே எர்டோகன் தலைமையின் கீழ் துருக்கி ஒரு சமரசம் செய்யும் நாடாகவே இருந்துவந்தது. யூக்கிரெய்னுக்கும் ரஷ்யாவுக்குமிடையே சமாதானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு துருக்கி பலதடவைகள் முயன்றது. ஆனால் இச்சமாதானத்துக்கு போர் விரும்பிகள் இணக்கம் காட்டவில்லை. எனவே எர்டோகன் படிப்படியாக ரஷ்யா பக்கம் சாரத் தொடங்கினார். இதை விரும்பாத அமெரிக்கா நடந்த தேர்தலில் எட்டோகனுக்கு எதிராகப் போட்டியிட்ட கமால் குவற்டோறொடு என்பவரை ஆதரித்தது. அவரை வெல்ல வைப்பதற்காகப் பகீரத முயற்சியும் எடுத்தது. ஆனால் எர்டோகன் 52.14% வாக்குளைப் பெற்று வெற்றிபெற்றுவிட்டார்.

பைடன் ஆட்சியில் அமெரிக்கா சந்தித்துவரும் பல தோல்விகளுடன் இதுவும் சேருகின்றது. சிரியாவை அரபுக் கழகம் மீளச் சேர்த்துக்கொண்டது, பரம எதிரிகளான சவூதி அரேபியாவும் ஈரானும் நட்பு பாராட்டுவது, சீனாவைப் போலவே இந்தியாவும் ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுவது, பல ஆபிரிக்க நாடுகள் பகிரங்கமாக அமெரிக்காவைத் தூற்றவாரம்பித்திருப்பது, தென்னாசிய நாடுகள் அமெரிக்க – சீன விவகாரத்தில் நடுநிலைமை பேணுவது என்ப்பல விடயங்களில் அமெரிக்காவின் தோல்விகள் அடுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

இந்த வெற்றியும், அவரை வீழ்த்த முயன்று அமெரிக்கா தோற்றுப் போனமையும் எர்டோகனை மேலும் திமிர் கொள்ள வைக்கும். இப்போதே பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்க எதிர்ப்பை முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டன. நேட்டோ நாடுகளில் பல தீவிர தேசிய / வலதுசாரிப் போக்கை நோக்கி நகர்கின்றன. புட்டினின் ஆட்சியில் ரஷ்யாவும் மத சார்புள்ள பழமைவாதப் போக்கை நோக்கி விரைவாக நடைபோட்டுக்கொண்டு வருகின்றது. இது அமெரிக்காவிலுள்ள ட்றம்ப் தலைமையிலான தேசியவாதிகளையும் மதவாதிகளையும் கவர்ந்துவருகிறது. எனவே மிதவாதம் என்ற போர்வையில் போர்வெறி கொண்டலையும் பைடன் போன்றோரால் உலக ஒழுங்கு மிக விரைவில் மாற்றப்பட வாய்ப்புண்டு. எர்டோகனின் வெற்றி இதையே கட்டியம் கூறுகிறது. (Image:PPO/Reuters)