துரித கோவிட் பரிசோதனைக் கருவி ID NOW இன் பாவனைக்கான அனுமதியைக் கனடிய அரசு வழங்கியது
15 நிமிடங்களில் முடிவு தெரியும்
துரிதமாகக் கோவிட் பரிசோதனைகளைச் செய்து முடிவுகளைத் தரவல்ல ID NOW என்னும் கருவியின் பாவனைக்கான அனுமதியைக் கனடிய அரசு வழங்கியிருக்கிறது.
கநடாவில் மருத்துவ சம்பந்தமான எந்தவிதமான பொருட்களுக்கும் பாவனைக்கான அனுமதியை ஹெல்த் கனடா என்ற மத்திய அரசின் சுகாதார அமைச்சு வழங்க வேண்டும்.
நாடெங்கிலும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.
மருந்தகங்கள், வாக்-இன் மருத்துவ நிலையங்கள் போன்றவற்றில், பயிற்றப்பட்ட சேவையாளர்களால், 15 நிமிடங்களில், ஆய்வுகூடங்களின் தேவைகளின்றியே முடிவுகளைக் கண்டறியவல்ல இக் கருவியை அமெரிக்க நிறுவனமான Abbot Laboratories தயாரிக்கிறது.
அரசாங்கத்தின் அனுமதி கிடைத்த மறு நாளே, கனடிய தேவைகளுக்காக, 7.9 மில்லியன் ID NOW கருவிகளின் கொள்வனவுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது.
மூக்கு அல்லது தொண்டையிலிருந்து பருத்திக் குமிழால் எடுக்கப்படும் மாதிரியை இக் கருவிக்குள் திணித்தால், அம் மாதிரி வைரஸைக் கொண்டிருக்கிறதா என்பதை 15 நிமிடங்களில் தெரிவித்துவிடும்.
தற்போதைய முறையின்படி, பருத்திக் குமிழில் எடுக்கப்படும் மாதிரி ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்பட்டு சில நாட்களின் பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர் இதற்கென அமைக்கப்படிருக்கும் சிறப்பு சேகரிப்பு நிலையங்களுக்கோ அல்லது மருத்துவ நிலையங்களையோ நாட வேண்டும்.
சில ID NOW பரிசோதனைகள் பிழையான முடிவுகளை (false positives) தந்திருந்தன என சில ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதன் பாவனைக்கான தனது அனுமதியை வழங்கியிருக்கிறது. அறிகுறி தென்பட்டு முதல் 5 நாட்களுக்குள் இப் பரிசோதனை செய்யப்படவேண்டுமெனவும் அது வலியுறுத்தியுள்ளது.