ArticlesLIFEசிவதாசன்

துரத்தப்படும் பொய் | சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வரை…

ரம்யாவும் வளர்ப்புத் தாயாரும்

“என்னைப் பெற்ற தாய் எனக்குச் சூட்டிய பெயர் மட்டுமே என் தாயுடனான உறவின் ஒரே ஒரு அத்தாட்சி என நினைத்திருந்தேன். அதுவும் கூடப் பொய்யாக இருக்கலாம் எனப் படுகிறது. என் பாதங்களின் கீழ் நிலம் பாதாளமாகிவிட்டது போன்ற உணர்வு. எனது மொத்த அடையாளமே தொலைந்து விட்டது எனக்குப் பேரதிச்சி” ரம்யா மனமுடைந்து பேசினார்.

ரம்யா போல் பலர் பொய்யான பத்திரங்களோடு தத்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். 1970கள் முதல் 1990கள் வரையில் சுவிட்சர்லாந்தில் தத்தெடுக்கப்பட்ட 750 இலங்கையர்களில் 70 வீதமானோர் பெரும்பாலும் பொய்யான தகவல்களோடு தான் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

இக் காலகட்டத்தில் சிறீலங்காவிலிருந்து 11,000 குழந்தைகள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா நாடுகளின் பிரஜைகளால் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவ மனையிலுள்ள சில ஊழல் அதிகாரிகளே இதற்குக் காரணம். சில குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விட்டன என்றோ அல்லது குழந்தைகளுக்கு விசேட மருத்துவம் தேவை எனத் தாய்மாருக்குப் பொய் சொல்லியோ அதிகாரிகள் குழந்தைகளைப் பிறப்பிலேயே பிரித்து விடுகின்றனர் என இது பற்றிய ஆய்வொன்றைச் செய்த டச்சு ஊடகமொன்று கூறுகிறது.

ரம்யாவின் சகோதரி ஜெரால்டினுடைய தத்தெடுப்பைச் செய்து கொடுத்த ஹொனெக்கெர் என்பவர் இப்போது உயிரோடு இல்லை. இத் தத்தெடுப்பு வியாபாரத்தினால் ஒரு வருடத்தில் அவர் 97,000 டாலர்கள் வரை சம்பாதித்திருக்கிறார். இவரால் 1981 இல் தத்தெடுக்க வழி செய்யப்பட்ட சேறா ரமணி இனெச்சன் என்பவரது பத்திரங்கள் பொய்யானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஜெனீவாவில் தாதியாகப் பணி புரியும் ரமணி தன் பெற்ற தாயைக் கண்டுபிடிப்பதற்காக சிறீலங்காவிற்கு மூன்று தடவைகள் சென்று வந்திருக்கிறார். ஒருவரில் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. எதுவும் சரிவரவில்லை.

டச்சு ஊடக ஆய்வினைத் தொடர்ந்து இப் பெண்கள் ‘மீண்டும் வேர்களுக்கு’  என்ற குழுமம்மொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். தத்தெடுக்கப்பட்டவர்களது பெற்ற தாய்மாரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உதவிகளைச் செய்வதும், இவ் விடயத்தில் உண்மைகளைத் தேடுவதில் சுவிஸ் அரசாங்கத்தை நெருக்குவாரப் படுத்துவதும் இக் குழுமத்தின் நோக்கமாகும்.

ரம்யாவின் தத்தெடுப்பு சம்பந்தமான விடயங்களை சிறீலங்காவில் கையாண்டவர் டோண் டா சில்வா என்ற பெண். இவர் தான் ரம்யாவின் வளர்ப்புப் பெற்றோருக்கு ரம்யாவை அறிமுகப்படுத்தியவர். அவர் தன்னை ஒரு பயண முகவர் என விளம்பரம் செய்கிறார். இப்போது அவருக்கு 80 வயது. 2018 இல் ரம்யா சிறீலங்காவிற்குச் சென்ற போது அவரைச் சந்தித்திருந்தார்.

“நான் செய்தது நல்ல விடயமெனவே நான் எண்ணுகிறேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நடந்த விடயங்கள் பற்றி அவருக்குக் கவலை ஒன்றுமேயில்லை. தான் சட்டத்துக்குப் புறம்பாக எதுவுமே செய்யவில்ல என்கிறார். மற்றவர்களைக் குறை கூறுவதில் மட்டும் மிகத் தாராளமாகவிருக்கிறார். விநியோகிஸ்தர்கள் தனக்கு எப்போதுமே குழந்தைகளைக் கொண்டுவந்து தந்து கொண்டிருந்தார்கள் என மிகவும் சாதாரணமாக கூறுகிறார் ட சில்வா” என்றார் ரம்யா.

“சர்வதேச தத்தெடுத்தல் ஒரு வியாபாரம். தேவை இருப்பதனால் தான் வழங்கலும் இருக்கிறது. இது பெற்றோரை இழந்த நான்கு வயதுக் குழந்தைக்கு வளர்ப்புப் பெற்றோரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் விடயமல்ல. பிறந்தவுடன் தாயிடமிருந்து குழந்தையைப் பறிக்கின்ற விடயம். மரபணுப் பரிசோதனை தான் பிரிந்தவர்கள இணைக்க வல்ல ஒரே வழி. 30 வருடங்களின் முன்னர் தத்தெடுக்கப்பட்ட தம் குழந்தைகளைச் சந்திக்க வேண்டுமென அவர்களின் தாய்மார்களும் அங்கலாய்க்கிறார்கள். தங்கள் குழந்தைகள் சுகமாக இருக்கிறார்களா என்பதை அறிய அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும் தானே”. இது ரம்யாவின் ஆதங்கம்.

ரம்யா பெற்றோருடன்

தனது வளர்ப்புப் பெற்றோர் மீது பாசத்தைக் கொண்டிருந்தாலும் ரம்யா தன் சிறீலங்கா அடையாளத்தையே விரும்புகிறார். அவரது வளர்ப்புப் பெற்றோர் அவரது விருப்பங்களைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். தான் ஒரு சுவிஸ் பிரஜை என்பதை உணர்ந்திருந்தாலும் சிறீலங்காவிற்குச் சென்று வந்ததின் பின்னர் அவரது உணர்வில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

நான் ஏனைய சிறீலங்கர்களைப் போலவே இருக்கிறேன். சாப்பாடு என்னுடம்பிற்கு ஒத்துப் போகிறது. மக்களும் சுவாத்தியமும் என்னை வரவேற்கின்றன. நான் அங்கு வாழ்வதற்காகவே உருவாக்கப்பட்டவள். என்னை அங்கிருந்து பிரித்தது தவறு” என்கிறார் ரம்யா.

மூலம்: www.dw.com

தமிழில்: சிவதாசன்