துயர் பகிர்வு: முல்லைத்திலகன் நடனசபாபதி (1950-2023)
கனடாவின் முதல் தமிழ் சஞ்சிகை ‘தமிழ் எழில்’ ஆசிரியர்
கனடாவின் மூத்த தமிழ்க் குடிவரவாளர்களில் ஒருவரும் 1982-1983 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு மொன்றியல் நகரிலிருந்து வெளிவந்த முதல் கையெழுத்துப் பிரதியான ‘தமிழ் எழில்’ சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியருமான முல்லைத்திலகன் நடனசபாபதி அவர்கள் ஏப்ரல் 10 அன்று ரொறோண்டோவில் காலமானார்.
1960 களிலேயே கனடாவுக்குத் தமிழர் பணி, கல்வி நிமித்தம் புலம்பெயர்ந்திருந்தாலும் 80 பதுகளின் ஆரம்பத்தில் குடியேறிய தமிழர்கள் பெரும்பாலும் போரினால் புலம்பெயர்க்கப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இவர்களில் பலரும் மொன்றியாலைத் தமது வதிவிடமாகக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய, போக்குவரத்து வசதிகளைக்கொண்ட மொன்றியால் நகரம் வசதிகளின்றி வந்திறங்கிய தமிழ் அகதிகளுக்கு அப்போது பேருதவியாக இருந்தது.
சுமார் 60-100 பேர்களுடன், பெரும்பாலும் குடும்பங்களற்றுத் தனிமையில் வாழ்ந்த இச்சிறிய சமூகம் உரிய பணிகள் இல்லாது, தாயக நினைவுகளைச் சுமந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேளையில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டுமென்ற எண்ணத்தில் மாலை வேளைகளிலும், வாரவிடுமுறைகளிலும் கூட்டுக்குடும்பங்களாக வாழும் தமது இல்லங்களில் சந்தித்து அளவளாவித் தமது தனிமையைப் போக்குவதுண்டு. அப்படியானதொரு சூழலில் முல்லைத்திலகன், நந்தகுமார், பொன்னுச்சாமி ஆகியோர் இணைந்து ஆரம்பித்த கையெழுத்துச்சஞ்சிகைதான் ‘தமிழ் எழில்’. இச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர் மறைந்த முல்லைத்திலகன் அவர்கள். இச்சிறு சமூகத்தின் அடுத்த முயற்சியாகவே ‘ஈழத்தமிழர் ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டது.
அமைதியான சுபாவமும், எப்போதும் புன்சிரிப்பையும் தவழவிடும் முல்லைத்திலகனது சுபாவம் நிறைய நண்பர்களைத் தேடிக்கொடுத்தது. கட்டிடக்கலைக் கல்வியில் இளமானிப் பட்டத்தைப் பெற்றிருந்த அவர் தமிழிலும் கவிதைகள், கட்டுரைகளை எழுதிவந்தார். ரொறோண்டோவுக்குக் குடிபெயர்ந்த பின்னர் அவரது சமூக ஈடுபாடுகள் சற்றே தள்ர்ச்சி கண்டிருந்தன என்றாலும் தாயகம் பற்றிய நினைவுகளிலிருந்து அவர் தன்னை அகற்றிக்கொள்ளவில்லை.
சிலகாலமாகச் சுகவீனமுற்றிருந்த அவர் ஏப்ரல் 10 அன்று காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் ஏப்ரல் 12 (5:00-9:00), ஏப்ரல் 13 (12:30-1:30) வரை Chappael Ridge நீத்தோர் கூடத்தில் நடைபெற்று ஏப்ரை 13 அன்று 3:30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
கனடியத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய ஆரம்பப் புள்ளியை இழப்பதில் ‘மறுமொழி’ தீராக் கவலை கொள்கிறது. அவரது குடும்பத்திற்கு எம்மாலியன்ற ஆறுதல்.