துயர் பகிர்வு: டாக்டர் ராஜன் சிறிஸ்கந்தராஜா (1943-2023)
புகலிடத் தமிழர் சமூகத்தின் மிகப்பெரும் ஆளுமையும் தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளரும் அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்பட்டுவரும் ‘தமிழ்க் குரல்’ (Tamil Voice) தமிழ் செய்தி இதழின் ஸ்தாபக ஆசிரியருமாகிய டாக்டர் ராஜன் சிறிஸ்கந்தராஜா அவர்கள் நவம்பர் 04, 2023 அன்று நியூ யோர்க்கிலுள்ள றைன்பெக் நோர்தேர்ண் டச்செஸ் மருத்துவமனையில் காலமானார்.
இவர் டாக்டர் நளாயினியின் கணவரும், சாயியின் தந்தையாரும், மொலி மக்ராத்தின் மாமனாரும், சியோபான், ஃபியோனா ஆகியோரின் பாட்டனாரும் திரு & திருமதி கதிர்காமத்தம்பி ஆகியோரின் மகனுமாவார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1969 இல் மருத்துவப்பட்டம் பெற்ற அவர் பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு 1977 இல் மகப்பேற்று மருத்துவத்தில் FRCS பட்டத்தைப் பெற்றுக்கொண்டு 1981 இல் அமெரிக்கா சென்று அங்கும் மகப்பேற்று மருத்துவத்துறையில் அங்கீகாரம் பெற்று பவ்கீப்ஸி, நியூ யோர்க்கில் தனது மருத்துவப்பணியைச் செய்துவந்தார்.
தனது பணிகளின் மத்தியிலும் அவர் அமெரிக்க இலங்கைத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைச் செயற்பாடுகளில் முனைப்போடு ஈடுபட்டு வந்தார். தமிழ்ச் சங்கத்தின் செய்தி வெளியீடான ‘தமிழ்க் குரல்’ தகவலறிக்கையை ஸ்தாபித்து அதன் ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அத்தோடு தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தின் ஆசிரியராகவும் 1996 முதல் 2004 வரை பணியாற்றினார். அதுமட்டுமல்லாது நியூ யோர்க்கிலிருந்து வெளியான ‘தமிழ் தேசம்’ என்ற அரை மாத வெளியீட்டின் ஆசிரியர் குழுவில் ஒருவராக 1990 முதல் 1993 வரை பணியாற்றினார். ஈழத்தமிழர் விடயங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதிய அவர் ஏப்ரல் 2001 இல் அமெரிக்க காங்கிரஸின் வெளி விவகாரக் குழுவின் முன்னர் தோன்றி ஈழத் தமிழர் விவகாரங்கள் தொடர்பாக அறிவுரை வழங்கியிருந்தார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் டாக்டர் சிறிஸ்கந்தராஜா அவர்களது பங்கு அளப்பரியது. அவர் இளைஞராக இருந்த போதே 1961 இல் நடைபெற்ற சட்ட மறுப்பு, சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர் 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசாராரின் ஏவலுடன் நடைபெற்ற கலவரத்தின்போது 9 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காயப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு யாழ். மருத்துவமனையில் சிகிச்சயளித்த மருத்துவர்களில் ஒருவராக இருந்தவர்.
அவரது புகழுடல் நவம்பர் 06, 2023 அன்று பி.ப. 4-6 வரை 371 ஹுக்கர் அவெனியூ, பவ்கீப்சி, நி.யோ. 12603 இலுள்ள ரிமோதி பி.டொய்ல் நிலையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறு நாள் (நவம்பர் 07) பவ்கீப்ஸி மயானத்தில் தகனம் செய்யப்படும்.