LIFEObituary

துயர் பகிர்வு: கே.எஸ்.சிவகுமாரன்

[மறைந்த எழுத்தாளர், விமர்சகர், ஒலிபரப்பாளர் கே.எஸ்.சிவகுமாரன் பற்றி சரவணன் கோமதி நடராசா முகநூலில் எழுதிய பதிவை இங்கு த்ருகிறோம்]

கே.எஸ்.சிவகுமாரன் அவர்களும் நம்மிடம் இருந்து நீங்கிவிட்டார். இனி வாழ்தல் சாத்தியமில்லை என்பதை அவரே முடிவுக்கு வந்து ஒரு சில ஆண்டுகள் ஆகின்றன. உயிர்வாழ்தலின் மீதான அவநம்பிக்கையை தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அறிவித்தும் வந்தார். நேரடி வெளித் தொடர்புகளை அவர் அறுத்துக்கொண்டபோதும் முகநூலில் அவ்வப்போது தோன்றி சில நிலைத்தகவல்களை இட்டுச் சென்றார்.

உலகை விட்டு நீங்கியபின் இந்த சமூகத்தில் அவரின் இடம் என்ன என்பது பற்றி அதிகம் இறுதிக் காலங்களில் சிந்தித்துக்கொண்டிருந்த ஒருவராக இருந்தார் என்பதை அவரின் அணுகுமுறைகளில் இருந்து நம்மால் உணர முடிந்தது.

சுமார் முப்பது ஆண்டுகாலமாக அவரை அறிவேன். 90களில் நாம் கொழும்பில் கூடும் பெரும்பாலான இலக்கிய கூட்டங்களில் அவரும் ஆஜராகி இருப்பார். சரிநிகரில் சில தடவைகள் எழுதி இருக்கிறார். தமிழ்ச் சூழலில் ஆங்கில ஊடகங்களிலும் கொடிகட்டிப்பறந்த, நன்றாக அறியப்பட்ட மூவரைத் தான் நான் அதிகம் அறிவேன். ஒருவர் தராக்கி என்கிற டி.சிவராம், அடுத்தவர் டி.பி.எஸ்.ஜெயராஜ், அடுத்தவர் கே.எஸ்.சிவகுமாரன்.

சிவராம் கொல்லப்பட்டுவிட்டார். டி.பி.எஸ். தொடர்ந்து இயங்கி வருகிறார். இவர்களில் அரசியல் எழுத்துகளைத் தவிர்த்து ஆங்கிலத்தில் தமிழ்ச் சமூக கலை இலக்கிய போக்கை தொடர்ந்து எழுதி பரப்பி வந்தவர் கே.எஸ்.சிவகுமாரன். ஆங்கிலம் அறிந்த சிங்கள சமூகத்துக்கு; தமிழ்ச் சமூக இலக்கிய பண்பாட்டுப் போக்கை அறிந்து கொள்வதற்கு கே.எஸ்.சிவகுமாரன் தான் ஒரு reference ஆக இருந்து வந்தார் என்பதைக் கவனிக்க வேண்டும். தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல பல தமிழ் எழுத்தாளர்களை ஆங்கில வாசிப்பு சமூகத்துக்கு அறிமுகம் செய்ததிலும் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

எப்போதும்

இனிமையாக உரையாடுபவர். அவரின் ஆற்றல், அனுபவம் குறித்து ஒரு போதும் தலைக்கனம் இல்லாதவர். எங்கும் மிகவும் தன்னடக்கத்தை வெளிப்படுத்துவது அவரின் அடிப்படை குணமாக இருந்தது.

97இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாவது தடவை தமிழ் மொழியிலும் ஊடகக் கற்கையை ஆரம்பித்தார்கள். அந்த முதல் அணியில் கற்கச் சென்றவர்கள் அனைவரும் அப்போது ஊடகங்களில் இருந்த மேல் மட்ட ஊடகவியலாளர்களாக இருந்தார்கள்.

சரிநிகரில் இருந்து நானும், சிவகுமாரும், ஷகீபும் அந்த அணியில் இருந்தோம். எங்களுக்கு விரிவுரையாளர்களாக பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் நுஹ்மான், வீரகேசரி பிரதம ஆசிரியர் சிவநேசச் செல்வன், தினகரன் பிரதம ஆசிரியர் சிவகுருநாதன் போன்றோரோடு கே.எஸ்.சிவகுமாரனும் பணியாற்றினார்கள்.

கே.எஸ்.சிவகுமாரன் முதற் தடவை அந்த வகுப்புக்கு வந்தபோது அவர் வெட்கப்பட்டும், குறுகிக் கொண்டும் வந்தது இன்னும் நினைவில் நிற்கிறது. அங்கே மாணவர்களாக இருந்தவர்கள் அனைவரும் அவரின் நண்பர்கள், சக துறையைச் சேர்ந்தவர்கள். அவர் மதிக்கிற எழுத்தாளர்களாகவும் இருந்தவர்கள். அவர் முன்னால் வந்து உங்களுக்கு நான் என்ன சொல்லிக் கொடுக்கப் போறேன். என்று தான் ஆரம்பித்தார். அவர் ஒரு விரிவுரையாளர் என்கிற வகையில் அவருக்கு உரிய மரியாதையை கொடுத்து அனைவரும் அவரின் கூச்ச சுபாவம் போக ஒத்துழைத்தார்கள். ஏனென்றால் கே.எஸ். சிவகுமாரன் என்பவர் எங்கள் எல்லோராலும் மதிக்கப்படுகிற மூத்த எழுத்தாளர்.

நான்காண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் எனது “1915 கண்டி கலவரம்”, “அறிந்தவர்களும் அறியாதவையும்” நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்து வாழ்த்து தெரிவித்துச் சென்றது தான் நான் அவரை இறுதியாக சந்தித்தது.

விரைவில் வெளிவரவுள்ள எனது அடுத்த நூலான இலங்கையின் பதிப்புப் பண்பாட்டு மரபு பற்றிய நூலுக்கு அவரிடம் அணிந்துரை பெற விரும்பி இருந்தேன். எனது நூல்களுக்கு நான் விரும்புகிற; அதே வேளை என்னையும், எனது எழுத்துக்களையும் அறிந்த எழுத்தாளர்களிடம் வரிசையாக அணிந்துரை பெறுவதே எனது நோக்கமாக இருந்தது. அந்த வரிசையில் அவருக்கும் இதன் மூலம் மரியாதையை செலுத்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதற்காகவே சில மாதங்களுக்கு முன்னர் அவரிடம் இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தேன். அவரை இழப்பதற்குள் இதனை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தது.

அவரை நான் அண்ணா என்று விழித்தேன். அவர் என்னை மகனே என்று விழித்திருந்தார். அவரிடம் அணிந்துரை பற்றி கேட்ட வேளை அவர் ஆஸ்பத்திரியில் இருந்தபடி பதில் அளித்திருந்தார். வீடு சென்றபின் செய்கிறேன் என்று பதில் அளித்திருந்தார். ஆனால் அதற்கு அவரின் உடல் ஒத்துழைக்கும் வரை காத்திருந்தேன். ஆனால் அதற்குள் அவரை இழந்துவிட்டோம்.

ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியத்தை தொடர்ந்தும் கொண்டு சென்றுகொண்டிருந்த அவரின் இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. இலக்கிய உலகில் அவரின் பெயர் நிலைத்திருக்கக் கூடிய அளவுக்கு அவரின் இலக்கியப் பணிகள் உள்ளன. ஈடு செய்ய முடியாது இழப்பு.

அவருக்கு எமது இதய அஞ்சலி. மரியாதை மிக்க பிரியாவிடை.