தீவுப்பகுதி மின்வழங்கல் திட்டத்தைச் சீன நிறுவனத்திடம் கையளிப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களுக்கு சூழல் நட்பான மின்வழங்கல் திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தைச் சீன நிறுவனமொன்றிற்குக் கையளிக்க இலங்கை தயாராகி வருவதாகவும் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இத் திட்டத்துக்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவதற்கான அனுமதியை ஜனவரி 18, 2021 இல் அமைச்சரவை வழங்கியிருந்தது.
இந்தியாவின் கோடிக்குள் மேற்கொள்ளப்படும் இத் திட்டம் அப் பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுறுத்தலாக இருக்குமெனக் கூறி இந்திய அரசு இவ் விடயம் தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளி, காற்று ஆகிய சக்திகளைக் கொண்டு இம் மூன்று தீவுகளுக்கும், 12 மில்லியன் டாலர் செலவில் மின்வழங்கும் மூன்று தனித்தனி திட்டங்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி செய்கிறது.