தீவுப்பகுதியில் மேற்கொண்ட மின்னுற்பத்தித் திட்டங்களை சீனா ஒத்திவைத்தது

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாம்



யாழ்ப்பாணத்துக்கு வடக்கேயுள்ள மூன்று தீவுகளில் மேற்கொண்ட ‘சைனோ சோலர் ஹைபிரிட் ரெக்னோலொஜி’ திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக சீன தூதுவராலயம் அறிவித்துள்ளது.

மூன்றாம் தரப்பினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தாம் அதை நிறுத்திக்கொள்வதாகவும், அதற்கு மாற்றீடாக மாலைதீவிலுள்ள 12 தீவுகளில் தமது மின்னுற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக நவம்பர் 29 அன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனவும் சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

வலு மீளுற்பத்தித் திட்டத்தின்கீழ், நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய தீவுகளுக்கு மின்வழங்கும் திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை ஜனவரி 2021 இல் இலங்கை அரசு சீன நிறுவனமொன்றிற்கு வழங்கியிருந்தது. ஆனாலும் இந்தியா உடனடியாகவே இலங்கையின் இந் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

ஆசிய அபிவிருத்தித் திட்டத்தின் உதவீயில் மேற்கொள்ளப்படவிருந்த இத் திட்டத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பு இலங்கை மின்சாரசபைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இப்போது சீனா தனது திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது.