தீர்வுக்கான உள்ளகப் பொறிமுறையை வடக்கு மக்கள் ஏற்கவில்லை – தமிழ்க் கட்சிகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைக்கு தமிழ் கட்சிகள் எதிர்ப்பு

“உண்மைக்கும் நீதிக்குமான ஆணையத்தின் அங்கத்தவர்கள் திறமையுடையவர்களாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் வடக்கு மக்கள் உள்ளகப் பொறிமுறையொன்றுக்கு உடன்படுவார்கள்” என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை மீது கருத்துத் தெரிவித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இவ்வறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்கள் தமிழ் மக்களின் உண்மையான அபிலாட்சைகளைப் பிரதிபலிக்கவில்லை எனவும் உள்ளகப் பொறிமுறை தமக்கு நீதியை ஒருபோதும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதுவே மக்களது நீண்டகால நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளனர்.

‘தி டெய்லி மோர்ணிங்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “பெரும்பாலான மக்கள் சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலமே தீர்வு சாத்தியமாகும் என நம்புகிறார்கள்” என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“இலங்கை மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைப்பதைப்போல் வடக்கு மக்கள் எவரும் கூறியிருக்கவில்லை. சில அரசாங்க ஆதரவாளர்களைப் பிடித்து அவர்கள் கூறியதாக ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. உள்ளகப் பொறிமுறை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. உள்ளகப் பொறிமுறையை ஏற்கத் தமிழ் மக்கள் தயார் என்பதாகக் காட்டுவதற்கென வேண்டுமென்றே செய்யப்பட்ட திருகுதாளம் இது. உள்ளகப் பொறிமுறையால் எமக்கு நீதிய வழங்க முடியாது. இவ்விடயத்தில் மாற்றுக்கருத்துடையோரை நீங்கள் காணமுடியாது. சர்வதேசங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் இங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரிக்கவேண்டும். இவற்றைச் செய்யக்கூடிய நம்பிக்கைக்குரியவர்களை நாம் உள்நாட்டில் காணமுடியாது” என திரு விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துக்கூறிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான திரு எம்.ஏ.சுமந்திரன் “இலங்கை மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வடக்கு மக்கள் நீண்டகாலமாகக் கூறிவரும் கருத்துடன் இணக்குவதாகத் தெரியவில்லை. உள்ளகப் பொறிமுறையால் நீதியைப் பெற்றுத்தர முடியாது என மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் எப்போதும் கூறிவந்திருக்கிறோம். எமது பிரச்சினை இரு சாராருக்கிடையேயானது. உண்மைக்கும் நீதிக்குமான ஆணையம் சுயாதீனமானதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கவேண்டுமானால் அதில் இவ்விருபிரிவுகளைச் சேர்ந்த அவரும் இருக்க முடியாது. இதை நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகிறோம். இப்படிச் செய்ய எவரும் உடன்படுவதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

பெப்ரவரி 16-18 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்த பரிந்துரையில் “உண்மைக்கும் நீதிக்குமான ஆணையத்தில் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்குரியவர்களும் இருக்கவேண்டுமெனவும் அதே வேளை அரசாங்கத்தின் தலையீடுகளின்றி பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றுவதை அனுமதிக்கவேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது. “கலந்துரையாடலில் சம்பந்தப்பட்டவர்கள் சர்வதேசப் பொறிமுறையொன்றை விரும்பியிருந்தார்கள் எனினும் திறமையுள்ளவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை, அரச தலையீடுகளின்றிப் பங்குபற்ற அனுமதித்தால் உள்ளகப் பொறிமுறையொன்றுக்கும் அவர்கள் தயார்” என மனித உரிமைகள் பரிந்துரைத்திருந்தது. அத்தோடு உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையமொன்றை உருவாக்குவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு என்றும் இவ்வாணையம் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் இயங்கவேண்டுமெனவும் அரசியல் தலையீடுகள் எதுவுமின்றித் தமக்கு முன்னாலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அனைத்து அதிகாரங்களும் இவ்வாணையத்துக்கு வழங்கப்படவேண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.