Spread the love

செப்டம்பர் 10, 2019

அதிகாரத்துவ (bureaucratic) தடங்கல்கள் காரணமாக, ஐ.நா. தீர்மானங்களின் மீது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதில் சிறீலங்கா தாமதம் காட்டுகிறது என ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சிறீலங்கா மீதான மையக் குழு விசனம் தெரிவித்திருக்கிறது.

மையக்குழுவின் சார்பில் ஐக்கிய ராச்சியம் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 42 வது கூட்டத் தொடருக்கு வழங்கிய அறிக்கையில், 2015 முதல் அரசாங்கம் (சிறீலங்கா) சில முக்கிய ஸ்தாபனங்களை உருவாக்கியதன் மூலம் முன்னேற்றத்தை நோக்கிய முயற்சிகளை எடுத்திருப்பது அவதானிக்கப்பட வேண்டியது எனக் கூறியுள்ளது.

இருப்பினும், லெப்.ஜெனெரல் ஷவேந்திர சில்வாவை இராணுவத்தின் தலைவராக நியமித்ததன் மூலம், நீதியை நிலைநாட்டுதல், பொறுப்புக் கூறல், நல்லிணக்க முயற்சிகள் ஆதியவற்றில் சிறீலங்கா கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதாகக் கொடுத்த உத்தரவாதத்தை மிகவும் பாரதூரமாகப் பாதித்திருக்கிறது என மையக் குழு தன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.


ஐக்கிய ராச்சியத்தின் மனித உரிமைகளுக்கான சர்வதேச தூதுவர் றீட்டா ஃப்ரென்ச் இவ்வறிக்கையை வழங்கும்போது, சமாதானம், நல்லிணக்கம், நல்வாழ்வு என்பன சகல சமூகங்களையும் சென்றடையச் செய்வதற்காக சிறீலங்காவிற்கு தேவையான உதவிகளைச் செய்வதில் ஐக்கிய ராச்சியம் உறுதியாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கனடா, ஜேர்மனி, வட மகெடோனியா, மொண்டினீக்ரோ, ஐக்கிய ராச்சியம் ஆகிய ஐந்து நாடுகளும் இம் மையக் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

மையக்குழுவின் அறிக்கை இங்கு தரப்பட்டுள்ளது:

” சிறீலங்கா தொடர்பான சமீபத்திய தகவல்களைத் தந்ததற்காக ஆணையாளருக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை ஏப்ரல் மாதம் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக மீண்டும் எமது அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.
நல்லிணக்கம் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விடயங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காகச் சபை கொண்டுவந்த தீர்மானம் 30/1 ஐ இணை ஆதரவாளராக முன்வந்து நிறைவேற்றி இன்றுடன் நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன. ஆறு மாதங்களுக்கு முன்னரும்கூட தீர்மானம் 40/1 மூலம் சிறீலங்கா தனது வாக்குறுதிகளை மீளவும் உத்தரவாதம் செய்திருந்தது.
தேசிய நல்லுறவு, உறுதித்தன்மை, நல்வாழ்வு ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்ய சிறீலங்கா கொடுத்த வாக்குறுதிகள் இன்றியமையாதவை என்பதை மையக்குழு நம்புகிறது. இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சிறீலங்காவிற்கு தேவையான உதவிகளைச் செய்யவேண்டுமென்பதில் மையக் குழு உறுதியாகவிருக்கிறது. இம் முயற்சிகள் சாத்தியமாவதற்கு சிறிலங்காவிற்கும் அதன் மக்களுக்கும் தொடர்ந்து உதவிகள் தேவை.

2015 இலிருந்து அரசங்கத்தினால் நல்ல நோக்கங்களோடு அர்ப்பணிப்பான சிலரால் பல அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில முக்கியமான ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்டன. இருப்பினும் பல விடயங்களில் முன்னேற்றத்தின் வேகம் குறைவாகவே இருந்தது. இதற்குக் காரணம் அதிகாரத்துவ தடங்கல்கள் தான்.

சபையின் சமீபத்திய தீர்மானம் ஒன்றின் மூலம் தேசிய அமுற்படுத்தல் திட்டமொன்றின் மூலம் செயல்முறைக்கான வரையறுக்கப்பட்ட கால வரிசையை உருவாக்கும்படி ஆலோசனை கொடுக்கப்பட்டது. சிறீலங்கா இதை முன்னிலைப்படுத்தி இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

மதிப்புக்குரிய ஆணையாளரே, ஆகஸ்ட் 19 இல் நீங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெனெரல் சில்வா அவர்கள் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முனெடுப்புக்கள், நல்லிணக்க முயற்சிகள் ஆகியவற்றின் மீதான சிறீலங்காவின் வாக்குறுதிகளைத் தீவிரமாகப் பாதிக்கிறது. அரசியல் வெளியை உருவாக்குவதிலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சிறீலங்கா நம்பிக்கையை வளர்ப்பது நாட்டில் சமாதானமும் நல்வாழ்வும் தழைப்பதற்கு அவசியமானது என மையக் குழு நம்புகிறது.

தலைவர் அவர்களே, இச் சபை பல வருடங்களாக சிறீலங்கா விடயத்தில் கடுமையாக உழைத்ததன் பலனாக பல மோசமான மீறல்கள் தொடர்பில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனாலும் இப் பணி நிறைவு பெறாதுள்ளது. எமது தொடர்ந்த கரிசனை இவ்விடயத்தில் அவசியம். இந்தச் சபையும், சர்வதேச சமூகமும் சிறீலங்காவிற்குத் தொடர்ந்து ஆதரவையும் கரிசனையையும் கொடுத்து அதைச் சமாதானமும், நல்லிணக்கமும் தரவல்ல பாதையில் பயணிக்க உதவிகளைச் செய்ய வேண்டும்.

Print Friendly, PDF & Email
Related:  மங்கள சமரவீரவை குற்ற விசாரணைப் பிரிவு 5 மணித்தியாலங்களுக்கு விசாரணை!