தீர்ப்பு


சிறுகதை

குமார் புனிதவேல்

குமார் புனிதவேல்

க.பொ.த. உயர்தரம் முடித்துவிட்டு ஊர்சுற்றித் திரிந்த சுந்தரத்துக்கு திடீரென்று அந்த உத்தியோகம் கிடைத்தது. ஊரில் உழாத மாடு, எங்கே போய் உழுதால் என்ன என அம்மா கை கழுவி விட்ட கேஸ் அவன். இன்னுமொரு ஊரைச் சுற்றலாமென்ற புழுகத்துடன் கிளம்பி விட்டான்.

அதை ஒரு பெருநகரம் என்றும் கூறமுடியாது, கிராமம் என்றும் கூறமுடியாது. எறும்புக்கும் நத்தைக்கும் இடையிலுள்ள வேகத்தில் நகரும் ஒரு ஊர். அங்குள்ள அரச பள்ளியொன்றில் விஞ்ஞானம் கற்பிப்பதே அவனது வேலை. அக் கலவன் பாடசாலையில் எட்டாம் வகுப்பு மட்டும் கல்வி போதிக்கப்பட்டது.

பள்ளியிலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தில் இருந்த நகரமொந்றில் தங்குவதற்கு அறை கிடைத்திருந்தது. சுந்தரத்தின் அண்ணாவுக்குத் தெரிந்த ஒருவரது வீடு அது. சுந்தரத்தை அங்கு கொண்டுவந்து விட்டுச் செல்லும்போது “நீ படிப்பிக்கப் போகும் கிராமத்தில்தான் இலங்கையில் மிகவும் அழகான பெண்கள் இருக்கிறார்கள்” என அண்ணா பகிடியாகக் கூறிச் சென்றிருந்தார். தம்பியின் குழப்படிகளை நன்கறிந்தவர் அவர்.

திங்கட் கிழமை. முதல் முறையாக மீசையைக் கிளிப் பண்ணிக்கொண்டு அண்ணா வாங்கித் தந்த சைக்கிளில் பாடசாலை சென்று இறங்கினான் சுந்தரம். தலைமை ஆசிரியர் ஏற இறங்கப் பார்த்தார். “நீ இங்கு கல்வி கற்க வந்தாயா அல்லது கற்பிக்க வந்தாயா என்ற கேள்விகள் அவரது கண்களூடு கொட்டின. இருபது வயதில் காளை என்று சொல்லிக்கொண்டு விடலை ஒன்று வந்து நிற்கிறதே என்பதே அவரது அச்சமாக இருக்கலாம்.

சக ஆசிரியர் செல்வராசா சுந்தரத்தை அழைத்து பாடசாலையையும் காட்டி இதர ஆசிரியர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். சுந்தரம் மட்டுமே அங்கு பாண்ட்ஸ் உடுத்தியிருந்தான். மாணவர்களும் மிருகக்காட்சிச் சாலையைப் பார்த்ததுபோல் ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தார்கள். அண்ணா சொன்னது சரிதான் அழகு அங்கே கொட்டித்தான் கிடந்தது.

கோடை விடுமுறைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது பாடசாலை. மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோருமே பரீட்சைகளுக்கு ஆயத்தமாகினார்கள். முறையான ஆசிரிய பயிற்சி எதுவுமில்லாது ‘மாணவ-ஆசிரியர்’ என்ற தரத்தோடு கற்பிக்க அனுப்பப்பட்டவன் சுந்தரம். கல்வித் திணைக்களம் அவ்வப்போது நகரத்துக்கு அழைத்து நாட் பயிற்சியை வழங்கி, விஞ்ஞான பரிசோதனைக்களுக்கான உபகரணங்களைக் கொடுத்து அனுப்பிவிடும். அதுவே அவனது பயிற்சி. எப்படியோ இதர ஆசிரியர்களின் உதவியுடன் அவன் தனது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சையை ஒழுங்கு செய்தான்.

முதலாம் கட்டமாக கரும் பலகையில் எழுதப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் தமது கொப்பிகளில் பதில்களை எழுதவேண்டும். மாணவர்களுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருக்கவேண்டும். சிலர் எழுதி முடித்துவிட்டு அடுத்த கேள்வியை எதிர்பார்த்தார்கள். சிலர் இன்னும் எழுதிக்கொண்டிருந்தார்கள். பலதர விவேகத்துடனும் அங்கு மாணவர்கள் இருந்தார்கள்.பரீட்சைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததும், சகல வினாக்களுக்கும் விடையளிக்காதோர் கைகளை உயர்த்துங்கள் என உத்தரவிட்டான் சுந்தரம். சிலர் உயர்த்தினார்கள். சிலர் உயர்த்தவில்லை. சுந்தரம் வகுப்பின் நடுவே கைகளைப் பின்னால் கட்டியபடி மாணவர்களின் கொப்பிகளை உற்று அவதானித்தான். சாந்தி என்ற மாணவி மட்டும் சுந்தரத்தைப் பார்த்துப் புமுறுவல் செய்தாள். அது உரையாடலுக்கு அழைக்கும் புன்னகை அல்ல, மாறாக என்னை மன்னிப்பீர்களா என்ற வகையில் இருந்த புன்னகை. அவளது கொப்பி வெறுமையாக இருந்தது. ஆனால் அவளது கைகள் மட்டும் மேசைக்குக் கீழே இருந்தன.

சுந்தரத்துக்கு கெட்ட கோபம் வந்தது. இளமையின் துடிப்பு அதை மேலும் அதிகரித்திருந்தது. வகுப்புக்கு முன்னால் வந்து நின்று ஒரு செருமலுடன் கூறினான் “சாந்தி கேள்விகளுக்குப் பதில்கள் எதையும் எழுதவுமில்லை. அதே வேளை தனது கையை உயர்த்தவுமில்லை. இப்போது நான் ஒரு விடயம் செய்யப் போகிறேன். சாந்தி எழுந்து நின்று மன்னிப்புக் கோரினால் நான் தொடர்ந்தும் கற்பிப்பேன் அல்லது நான் வகுப்பை விட்டுப் போய்விடுவேன். சாந்தி தயார் என்றதும் வந்து என்னை அழையுங்கள்” என்று கூறிவிட்டு வகுப்பைவிட்டு வெளியேற ஆயத்தமானான் சுந்தரம்.

எல்லா மாணவர்களினது பார்வைகளும் ஏக காலத்தில் சாந்தி மீது குவிந்தன. அவள் தலையைக் குனிந்தபடியே இருந்தாள். ‘எழும்பப்பா’ எந்று அவளது தோழி மங்கை கேட்டுகொண்டாள். இருக்கையிலிருந்து எழுந்துகொள்ள சாந்தி மறுத்துவிட்டாள். ஆத்திரம் மேலிட சுந்தரம் வகுப்பைவிட்டு வெளியேறி ஆசியர் ஓய்வறையில் அமர்ந்துகொண்டான். சுந்தரத்தின் அனுபவமின்மையால் எழுந்த ஒன்றா அல்லது அவனது இளமைப் பருவத்தின் துடிப்பினால் எழுந்த ஒன்றா அல்லது வழமையாக நம்மவர்களோடு கூடவே வரும் கெளரவப் பிரச்சினையா? விடை காணுமளவுக்கு சுந்தரத்தின் கோபம் இன்னும் தணியவில்லை.

ஓய்வறையில் ரமணன் மாஸ்டரும் அஞ்சலீனா டீச்சரும் உரையாடத் துடித்துககொண்டிருந்தார்கள். அவர்கள் வகுப்பறைகளில் இருப்பதைவிட ஓய்வறையில் இரூக்கும் நேரமே அதிகம் எனச் சுந்தரம் நினைப்பதுண்டு. அஞ்சலீனா அப்பள்ளிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சிங்கள ஆசிரியை. சுந்தரத்தைவிட நான்கு அல்லது ஐந்து வயது அதிகமிருக்கலாம். ரமணனுக்கு அஞ்சலீனாவின் வயதில் மகள் ஒருவர் இருக்கலாமென்பது சுந்தரத்தின் பல சந்தேகங்களில் ஒன்று. மொழிப் பிரச்சினை இரண்டு பேரையும் பிரித்து வைத்திருந்தது.

கைக்கடிகாரத்தைப் பார்த்த ரமணன், பின்னர் சுவர்க் கடிகாரத்தையும் பார்த்து உறுதிசெய்த பின்னர் செருமலோடு கேட்டார் ‘என்ன மாஸ்டர், வகுப்பு இல்லையோ?”. சுந்தரம் நடந்ததை விபரித்தான். அஞ்சலீனாவுக்கு ஒன்றும் புரியாததால் சுந்தரத்தின் முகத்தில் அவளது கண்கள் குவிந்திருந்தன.

“சாந்தி அப்படியான பிள்ளையல்ல. அவள் ஒரு வசதி படைத்த குடும்பத்துப் பிள்ளை. இந்தக் கிராமத்திலேயே அவளது தகப்பனார் இராமசாமிதான் பணக்காரர். அதற்காக அவள் ஒரு மொக்கு அல்ல. நல்ல கெட்டிக்காரி. ஏதோ நடந்திருக்க வேணும். கொஞ்சம் இருங்கோ” என்றுவிட்டு ரமணன் மாஸ்டர் சால்வையைத் தோளில் போட்டுக்கொண்டு சென்றுவிட்டார். அஞ்சலீனாவுக்கு விளங்கப்படுத்துமளவுக்கு சிங்களம் தெரியாமையால் சுந்தரம் முயற்சி எடுக்கவில்லை.சாந்தியைப் பற்றியோ அல்லது இதர மாணவ மாணவிகளைப் பற்றியோ சுந்தரம் முன் பின் அறிந்தவனல்ல. அல்லது இதர ஆசிரியர்களும் சுந்தரத்தைப்போலவே நடந்துகொண்டிருப்பார்களா என்பதும் தெரியாது. தான் செய்தது சரியா தவறா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. சாந்தி தனது பணத் திமிரினால்தான் அப்படி நடந்துகொண்டிருக்கிறாள் என்பதை இப்போது அவன் உறுதிசெய்துகொண்டான்.

சுமார் அரைமணி நேரத்தில் ரமணன் மாஸ்டர் வேகமான நடையுடன் ஓய்வறைக்கு வந்தார். அவரது அடர்த்தியான் மீசையைக் கிளப்பிக்கொண்டு புன்னகை ஒன்று வந்தது. சில கணங்கள் சுந்தரத்தின் கண்களை உற்றுப் பார்த்தார். சரி வகுப்புக்குப் போங்கள் என்றார். என்ன நடந்தது எனக் கேட்கும் தென்பைக்கூட அவரது ஆழமான பார்வை தகர்த்து விட்டிருந்தது.

கோபம் இன்னும் முற்றாக ஆறாத நிலையில் சுந்தரம் தயக்கத்துடன் வகுப்புக்குத் திரும்பினான். வகுப்பில் முற்றான நிசப்தம். வழக்கமாக மொனிட்டர்’ வேலை செய்யும் துடியாட்டமான மங்கைகூட சுந்தரத்தின் முகத்தைப் பார்க்க மறுத்தாள். எல்லார் முகங்களும் அவர்களது கொப்பிகளையே பார்த்துக்கொண்டிருந்தன.

சுந்தரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. இருமிப் பார்த்தான், செருமிப் பார்த்தான். மாணவர்கள் பார்ப்பதாகவில்லை. யன்னலினூடு பாடசாலையின் விளையாட்டுத் திடல் தெரிந்து. அதன் தெருவோர வேலியில் இருந்த படலையை நோக்கி சாந்தி சென்றுகொண்டிருந்தாள், அவளை அணைத்தபடி அவளது அம்மாவும், தலைமை ஆசிரியை வரலெட்சுமியும் சென்றுகொண்டிருந்தார்கள். சாந்தியை வெண்ணிற ஆடையொன்றால் சுற்றியிருந்தார்கள்.

ஆம், சாந்தி வயதுக்கு வந்துவிட்டாள்.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் உற்சாகத்தோடு பாடசாலைக்குப் போனான் சுந்தரம். வகுப்பு இப்போது மயான அமைதியுடன் இருந்தது. கரும்பலகையில் அவன் அதிகம் கேள்விகளை எழுதுவதில்லை. மாணவர்களை எழுந்துநிற்கும்படி அவன் கேட்பதில்லை. இருந்தும் அவனது மனதில் அமைதியில்லை. சாந்தி பாடசாலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டுவிட்டாள். சாந்தியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்ற அவனது ஆசை நிறைவேறவே இல்லை. அவசரப்பட்டு அவன் எடுத்த முடிவினால் ஒரு மாணவியின் கல்வி பாழாக்கப்பட்டுவிட்டதா? குற்றம் அவனது மனதில் குடிகொண்டது. தீர்ப்பை அவனே தனக்கு வழங்கிக்கொண்டான்.

முதல் தடவையாக அப்பள்ளிக்கூடத்திலிருந்து பல மாணவர்கள் உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்குச் தெரிவாகியமைக்காக அந்த வருட சரஸ்வதி விழாவில் தலைமை ஆசிரியரால் சுந்தரம் கெளரவிக்கப்பட்டான். கிராமத்துக்குப் பெரியவரான சாந்தியின் அப்பா சுந்தரத்துக்கு மாலை போட்டுக் கெளரவித்தார். சுந்தரம் நன்றி தெரிவித்துப் பேசினான். இதுவே தனது கடைசித் தவணை என்பது பற்றி அவன் குறிப்பிடவில்லை. ஆம் அவந் ஆசிரியத் தொழிலைத் துறப்பதாகத் தீர்மானித்துவிட்டான். தனது குற்றத்துக்காக அதுவே அவன் தனக்களித்துக்கொண்ட தீர்ப்பு.