Spread the love

பிரபல தமிழ்க் கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் 93 வது ஒஸ்கார் திரைப்பட விழாவுக்கு கனடாவிலிருந்து செல்லும் சிறந்த பிறநாட்டுப் படமாக, தீபா மேத்தாவின் Funny Boy தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

தீபா மேத்தாவின் Funny Boy கனடாவின் சிறந்த பிறமொழிப்படமாக ஒஸ்காருக்கு தெரிவு 1
தீபா மேத்தா

ஒஸ்கார் விழாவில் போட்டியிடத் தெரிவாகும் சிறந்த சர்வதேச படப் பிரிவில், இது இரண்டாவதாகும். 2007 ல் Water என்ற அவரது படம் ‘சிறந்த பிறமொழிப் படப்’ பிரிவில் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. ஆனாலும் அதற்கு விருது கிடைக்கவில்லை.

Telefilm Canada வின் ஆதரவுடன் வெளிவரும் இப்படம் இலங்கையர்களைப் பற்றியும், அங்கு நடந்த போர் பற்றியும், ஒருபாற்சேர்க்கையாளர் தம்மைப் பகிரங்கப்படுத்துவது பற்றியுமான ஒரு படம் என்கிறார் தீபா மேத்தா.

தமிழ்க் கனடியரான ஷியாம் செல்வதுரையின் நாவலான Funny Boy என்ற நாவலைத் தழுவி இப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 1970 – 80 களில் இலங்கையில் நடைபெற்ற தமிழ்-சிங்கள இனப்போர்க் காலத்தில் வளர்ந்த ஒரு தமிழ் ஓரினச்சேர்க்கையாள இளைஞனைச் சுற்றி இக் கதை எழுதப்பட்டிருந்தது. இப் படத்திற்கான வசனங்களை மேதாவும் செல்வதுரையும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தயாரிக்கப்பட்ட படமாகையால் பல இடங்களில் குறுக்கு வழிகளையும் மேற்கொள்ளவேண்டியிருந்தது என்கிறார் தீபா மேத்தா.

இப் படத்தின் உரையாடல் பெரும்பாலும் தமிழிலும், சில ஆங்கிலத்திலும் இருக்கின்றது. டிசம்பர் 4 அன்று CBC யின் Gem சேவை மூலம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய, அவுஸ்திரேலிய, நியூசீலந்து ரசிகர்களுக்காக டிசம்பர் 10 அன்று Netflix தளத்திலும், அதற்கு முன்னர் திரையரங்குகளிலும் வெளியிடப்படவிருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

93 வது ஒஸ்கார் அடுத்த வருடம் ஏப்ரல் 25 இல் நடக்கவிருக்கிறது.

Print Friendly, PDF & Email