தீபாவளி 2020

இன்று தீபாவளி

இராவணன் தமிழன், திராவிடன் அவனை அழித்த நாளைத் தமிழன் கொண்டாட்க் கூடாது என எத்தனை வேதங்கள் ஓதப்பட்டாலும் சிறு வயது முதல் பழகிய, குதூகலித்த அந்த நாட்கள் வெறும் தீபாவளியை மட்டும் நினைவுக்குக் கொண்டு வருவதல்ல. அப் பண்டிகையோடு கலந்த அந்த கூட்டு நினைவுகளையும், ஊர், உறவு, சுற்றம், மக்கள், தெரு, சிறுவர், பட்டாசு என்று பல அந்தக் கொண்டாட்டத்துடன் இணைந்து வரும் ஞாபகங்கள்.

இளைய பராயங்களில் தந்தையார் சந்தா செலுத்தி எடுக்கும் இந்திய சஞ்சிகைகளான கல்கி, கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் போன்ற பல எனது வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தவை. அதில் முக்கியமாக என்னைக் கவர்வது பெரிய அளவில் பிரசுரமாகும் கல்கி தீபாவளி மலர். இப்போதும் தீபாவளி என்றதுமே என் நினைவில் முதலில் வருவது இம் மலரில் இருக்கும் சிறுவனின் சிரிக்கும் முகமும் அவன் கைகளில் இருக்கும் சிதறும் பூவாணமும் தான். இராமனோ இராவணனோ ஒருபோதும் ஞாபகத்துக்கு வந்ததில்லை.

வெளிநாடுகளில் குழந்தைகள் மகிழும் எமக்கு அந்நியமான பல கொண்டாட்டங்களைக் கொண்டாடுவதால் குழந்தைகளோடு சேர்ந்து நாமும் மகிழ்கிறோம். அபடியான மகிழ்ச்சியைத் தந்த எமது பாரம்பரியத் தொடர்ச்சியான தீபாவளியைக் கொண்டாடுவதால் நாம் எதையும் இழந்துவிடப் போவதில்லை.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

ஆசிரியர்