‘திறந்த ஒலிவாங்கி இரவு’: இளையோருக்கான மேடைப் பயிற்சி நிகழ்ச்சி
மாயமான்
‘செயல் மேடை – யாழ்ப்பாணம்’ (ActiveTheatre Jaffna) எனுமொரு மேடைப் பயிற்சி நிகழ்வு மார்ச் மாதம் 9 ஆம் திகதி, 6:30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கிறது. இதை ஒழுங்கு செய்யும் ‘யாழ் கலைஞர்கள் மன்றத்திற்கு’ இரண்டாவது நிகழ்வு. பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் இந் நிகழ்வில் மேடையில் தோன்றித் தாம் விரும்பிய விடயங்களில் எதைப்பற்றியாவது ஐந்து நிமிடங்கள் பேசலாம் / நடிக்கலாம் / பாடலாம் / இசைக்கருவிகளை ஒலிக்கலாம் / மகிழ்விக்கலாம்.
திறமைகள் இருந்தும் மேடைக் கூச்சத்தால் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியாது சங்கடப்படுபவர்களை ஊக்கப்படுத்தி வெளிக்கொணர வைப்பதற்கான முயற்சியாக இந்நிகழ்வு மேடையேற்றப்படுகிறது. பார்வையாளர்கள் கலந்து ரசிக்கத்தக்க வகையில் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக அமையும் இந்நிகழ்வில் 16 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தமது திறமைகளைக் காட்டும் 2-நிமிட காணொளிகளை இந்நிகழ்வின் அமைப்பாளர் துவாரகன் ரங்கநாதன் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதே வேளை சிறுவர்களுக்கான ‘திறந்த ஒலிவாங்கி’ ( Open Mic) என்னும் நிகழ்ச்சியொன்றும் பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ‘செயல் மேடை – யாழ்ப்பாணம்‘ (Active Theatre Jaffna) என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.
போருக்குப் பின்னான யாழ்ப்பாணத்தில் போதை வஸ்துக்கள், வன்முறைகள், சோம்பேறிகள் போன்றவை மட்டுமே செழிப்பாக உள்ளன(ர்) என்ற மாயைக்குள் தள்ளிவிடும் தொப்பி -அரைக்காற்சட்டை – தண்ணீர்ப் போத்தல் – கருப்புக்கண்ணாடி என சுற்றுலா வாலாக்கள் காட்டும் பிம்பத்திற்கு எதிராக இப்படியொரு யாழ்ப்பாணமும் இருக்கிறது என நினைவுபடுத்தும் சிலருக்கு நன்றி. (Credit: FB Post – Jekhan Aruliah, The Jaffna Club)
