திரை விமர்சனம்: RRR
மாயமான்
இந்த வார எனது திரைப்பட அனுமதியின் (quota) மூன்று மணித்தியாலங்களை விழுங்கிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான ‘சேர்க்கஸ்’ படம் RRR பல வழிகளிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய இந்த பல்மொழிப் படத்துக்கு இரண்டு ஹீரோக்கள். ஒன்று ஜூனியர் என்.டீ.ஆர். (நமது தமிழ்ப் படங்களில் தலைக்குப் பின்னால் சக்கரம் சுத்த வாயில் சிவப்பு லிப்ஸ்டிக்கை அள்ளிப் பூசிக்கொண்டு கிருஷ்ணன் வேடத்தில் வருவாரே ஒரு சிவந்த மனிதர்? அந்த என்.டி.ராமராவின் மகன் தான் இவர்) மற்றது ராம் சரண். இருவருமே தெலுங்கர்கள். தமிழுக்காக சமுத்திரக் கனி ‘நீயும் ஓரமா இருந்திட்டுப் போ’ பாத்திரத்தில் புகுத்தப்பட்டிருக்கிறார். நான் பார்த்தது தமிழ்ப் பிரதி. ஆங்கிலத்தில் எழுத்தோட்டம் இருந்தாலும் உரையாடல்கள் பல மொழிகளிலும் மசாலாவாக இருக்கிறது. ஏனோ தானோ என்ற அலட்சிய மனோபாவத்துடன் செய்யப்பட்ட காட்சிகள் படம் முழுவதும் இருக்கின்றன. அது தமிழ்ப் பிரதியில் மட்டுமா? தெரியாது.

பாகுபலி மூலம் எங்கோ உயரத்தில் கொண்டுபோய் விட்ட ராஜமெளலி மீது இன்னும் மதிப்பு இருக்கிறது. இந்தியாவின் துருப்பிடித்த பிம்பத்தை மீண்டும் துலங்க வைக்கும் நோக்குடன் இயங்கும் இயக்குனர்களில் அவரும் ஒருவர் என நான் இன்னும் கருதுகிறேன். RRR உம் அந்த நோக்கத்துடனேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாகுபலி மூலம் சிகரத்தைத் தொட்ட அவரை இப்படம் மீண்டும் அடிவாரத்துக்குக் கொண்டுவந்துவிட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது.
இது ஒரு பிரித்தானிய காலனித்துவ காலத்துக் கதை (1920). இந்திய சுதந்திர்ப் போராட்ட காலத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் சில வேளை காந்தி தோற்றுப் போய் நேதாஜி ஆட்சி அமைத்திருக்கலாம். அந்தளவுக்கு பிரித்தானியர் மீதான வெறுப்பையும் உள்ளூர் ஆயுதப் போராட்டத்தின் மீதான ஊக்குவிப்பும் படம் முழுவதும் சிதறிக் கிடக்கிறது.
அதலபாத் என்ற ஊரில் வெள்ளைக்கார ஆளுனரின் மனைவிக்கு கையில் வர்ணங்களால் பச்சை குத்திய மல்லி என்ற சிறுமி ஒருத்தியைக் கிராமவாசிகளின் எதிர்ப்பையும் மீறி வெள்ளைப் பரிவாரங்கள் கடத்திக்கொண்டு போவதோடு ஆரம்பிக்கிறது படம். மல்லியைக் காப்பாற்றுவதாகச் சபதம் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார் ஜூனியர் என்.டி.ராமராவ். அதன் பிறகு ஆரம்பிக்கிறது கிராபிக்ஸ். சந்தனம் மெத்திய நிலமைதான், உடம்பெல்லாம் தடவப்பட்டிருக்கிறது.
என்.டி.ஆர். மீது பாயும் கிராபிக் புலிகளும் ஓநாய்களும் அவற்றோரு சண்டப் போடும் என்.டீ.ஆரும். என ஒரு பில்டப், விஜே ரசிகர்கள் மட்ட விவேகத்துக்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கிறது. என்னதான் தசைகளையும், புடைக்கும் நரம்புகளையும் காட்டினாலும் அவை நம்ம ஹீரோவினது அல்ல என்பதை அவரது முகத்தைக் காட்டியதுடன் இலகுவாகப் புரிந்துவிடுகிறது. பூந்தோட்டமொன்றில் ஜெமினி கணேசன் சிலோ மோஷனில் காதல் புரியும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்துக்கொள்வாரே அந்த முகம். தந்தையாரின் அதே கிருஷ்ண முகம். சுட்டுப் போட்டாலும் கோபமே வராது. அப்படியான முகத்தைப் பார்த்தவுடன் வில்லனே இரக்கப்பட்டு ‘நீ போய்ட்டு வா’ என்று அனுப்பிவிடும் தன்மையுடைய முகம். அவரது தசைகள் புடைக்கின்றன என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது. இருந்துமென்ன அவர் தான் ஹீரோ என ராஜமெளலி நினைத்துவிட்டார். காரணம் மார்கெட்டிங்க் ஆக இருக்கலாம்.
மற்ற ஹீரோ ராம் சரண். அவரும் ஒரு தசைக் காய் தான். ஆனால் அதில் நிஜமும் கடும் உழைப்பும் தெரிகிறது. சாடையான சிம்பு தோற்றம். பிரித்தானிய பொலிஸ்காரராக வருகிறார். ஜெய் பீம் பொலிஸ்காரரின் குண்டாந்தடிப் பிரயோகம் இருந்தாலும் அவர்கள் போல வண்டியும் தொந்தியுடனும் இல்லை. படு வில்லனாகக் காட்டப்பட வேண்டியவர் ஆரம்பத்திலேயே ஹீரோவாகக் காட்டப்படுவது தான் இயக்குனர் ராஜமெளலியின் மிகப் பெரிய வீழ்ச்சி. படம் தொடங்கி சில நிமிடங்களிலேயே ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல சஸ்பன்ஸை அவிழ்த்து விட்டு விடுகிறார். வெள்ளைக்காரர் ஒருவரிடமிருந்து வரும் ஒரு வசனத்தில் அது தெரிந்து விடுகிறது. அதைக் கண்டுபிடிப்பது உங்கள் விவேகத்தைப் பொறுத்தது.
பிரித்தானியரால் சிறைபிடிக்கப்பட்ட சிறுமி மல்லியைச் சிறை மீடகப் புறப்பட்ட ‘கொமாரம் பீமை’ (என்.டி.ஆர்.) பிடிப்பதற்கு அமர்த்தப்பட்ட பிரித்தானிய பொலிஸ் அதிகாரிதான் ராம் சரண். இருவருக்குமிடையே நட்பும், சண்டையும் இருப்பதாகக் காட்டுவதன் மூலம் இருவரது ஹீரோ நிலைகளையும் சமமாகக் கொண்டு போகிறார் இயக்குனர். அதனால் வழக்கமான வில்லன் வெறுப்பு இங்கு கொஞ்சம் பின்தள்ளப்படுகிறது. எல்லாம் காரணத்தோடுதான்.
படத்தைப் பிரமாண்டமாகக் காட்டுவது பிரித்தானிய கோட்டை கொத்தளங்கள், அவர்களது படை பரிவாரங்கள், தலையில் முண்டாசுகளுடன் பல்லாயிரக் கணக்கான ‘brown beggars’. இரண்டு ஹீரோக்களுக்கும் இரண்டு அழகான ஹீரோயின்கள். ஒன்று வெள்ளைக் காரி மற்றது வெள்ளைத் தோல் ‘brown begger’. இரண்டு ஹீரோக்களையும் தவிர மற்றயவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஒரிரண்டு பாட்டுகள், மலையாள வாடையுடன் இதமாக இருக்கின்றன.
பாலத்தின் கீழ் ஓலைப்படகொன்றில் அமிழப்போகும் சிறுவன் ஒருவனைக் காப்பற்ற இரண்டு ஹீரோக்களும் மேற்கொள்ளும் சாகசம் (coordinated adventure) நகைச்சுவையின் உச்சம். ஒருவர் (என்.டி.ஆர்.) மாட்டார் சைக்கிளிலும் மற்றவர் (ராம் சரண்) குதிரையிலும் பாய்ந்து வந்து அட்டகாசம் புரிகிறார்கள். ரெலெஸ்கோப்பினாலேயே அடையாளம் காணமுடியாத தூரத்தில் இருந்து ராம் சரண் கை சைகைகளால் ஒருங்கிணைத்த சாகசங்கள் விஜே ரசிகர்கள் மட்டத்திற்குக் கீழ்தான் இருக்கிறது. ஒரு வலிந்து புகுத்தப்பட்ட, கதிக்கு முக்கியமில்லாத காட்சி. ஆனால் இங்கு ஹீரோக்கள் காட்டும் சாகசங்களுக்காக இப் படம் இந்தியாவில் ஓஹோ என்று ஓடும் என்பதில் சந்தேகமில்லை.
படத்தின் தொடக்கத்தில், ‘Arrest him’ என்ற கட்டளையைச் சிரமேற்கொண்டு நரம்பு புடைக்க ராம் சரண் பல்லாயிரக் கணக்கான ‘brown beggars’ களின் தலைகள் மீது தவழ்ந்து ‘ஜெய் பீம்’ ஸ்டைலில் குண்டாந்தடியால் தமிழ் நாட்டு பொலிஸாரின் கொடூரத்துடன் மக்களைத் தாக்கி ஒரு ‘புரட்சியாளனைக்’ கைது செய்ததன் மூலம் இந்திய பொலிசாரின் அடிமைத் தனத்தின் உச்சத்தை இயக்குனர் காட்டுகிறார். ஆனால் அவரின் உண்மையான நோக்கம் ராஜ் சரணின் புஜ பல பராக்கிரமத்தை வெளிக்கொணர்வதே தான். ஒரு கல், இரண்டு மாங்காய். இரண்டிலும் அவர் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் அது நிஜத்துக்கு அப்பானது என்பதில் அவர் பயங்கர தோல்வியைச் சந்திக்கிறார். Exageration #1.
படம் முழுவதிலும் இப்படிப் பல காட்சிகள். விசேடமாக காட்டு மிருகங்களைக் கோட்டைக்குள் கொண்டுபோய் ஆயுதங்களோடு நிற்கும் பிரித்தானியரோடு மோதுவது. என்ன காமெடி. பாகுபலியிலும் இப்படியான சில காட்சிகள் இருந்தாலும் இது மோசம்.
பிரித்தானியரைத் தோற்கடிக்கும் இந்தியரின் வீராவேச வெளிப்பாடாக இந்த இரண்டு ஹீரோக்களும் இணைந்து நடனத்துடனான பாட்டொன்றைப் பாடுகிறார்கள். அந்தப் பாட்டின் தாக்கத்தால் ஒட்டுமொத்த பிர்த்தானியப் பரிவாரங்களும், ஆண்களும் பெண்களும் நடனமாடுகிறார்கள். இப்படி காலனித்துவ பிரிதானியர் மீதான பழிவாங்கல் காட்சிகள் அவ்வப்போது பா.ஜ.க. ரக ரசிகர்களை உசுப்பேத்துகிறது.
கதையை நான் சொல்ல விரும்பவில்லை. ஒருக்கால் பார்க்கலாம். மர்மம் ஒன்று இருக்கிறது. மற்றபடி இரண்டு ஹீரோக்கள் இருவேறு சபதங்களோடு புறப்படுவது கதை. ராஜமெளலி மாதிரிக் கதையை அவிழ்த்துவிட விருப்பமில்லை. பாருங்கள்.
முடிவில் இது ஒரு பா.ஜ.க. பிரச்சாரப் படம் என நீங்கள் கருத முற்பட்டால் அதற்கு ராஜமெளலியே பொறுப்பு. இராமர் முக்கியப்படுத்தப்படுகிறார். நேதாஜி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர் மீதான் பிம்பங்கள் பிரமாண்டமாக்கப்படுகின்றன. இந்தியர்களின் நெஞ்சுகளை நிமிர்த்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு படமாகில் அந் நோக்கம் நிறைவேறுகிறது. கலை, சினிமா, நுணுக்கங்கள் என்ற படைப்பு நூதனங்களுக்காக இப் படத்தைப் பார்ப்பவர்களை ராஜமெளலி ஏமாற்றி விடுகிறார். அப்படி இல்லை அவர் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என நீங்கள் கருதினால் அதற்கும் நான் உடன்படுகிறேன்.
மூன்று மணித்தியாலங்களை ஒதுக்கி வைத்து, சமையல் வேலைகளை முடித்துவிட்டு, ஒரு லீட்டர் கோப்பி அல்லது ரீயுடனோ அல்லது ஒரு சிங்கிள் மோட்டுடனோ அமர்ந்து ஆறுதலாகப் பார்க்கவேண்டிய படம்.