Entertainment

திரை விமர்சனம் | பொன்மகள் வந்தாள்

ஜோதிகாவின் திருப்பங்களோடான த்ரில்லர்

பாலியல் வன்முறை என்றவுடன் உலகத்தில் முதல் நினைவுக்கு வந்துவிடும் நாடு இந்தியா தான். இந்திய Me Too இயக்கம், சமூக வலைத்தளங்கள், செயற்பாட்டாளர்களுக்கு இதில் முக்கிய பங்குண்டு.

அவமானப் படுத்துதல் மூலம் (shaming) உலகில் பலமாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கைகோர்த்து நின்றது ‘Me Too’ வும் சமூகவலைத் தளங்களும்.

இந்தியாவின் வறுமையை வெளியுலகுக்குக் காட்டி அதன் மானத்தை வாங்கினார் என்ற குற்றச்சாட்டு தலைசிறந்த வங்கத் திரைப்படத் தயாரிப்பளர் சத்தியஜித் ரே மீது ஒரு காலத்தில் வைக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியா பெருமைபெற வேண்டுமானால் இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்தேயாகவேண்டும். You have to get the bull by the horn என்று ஆங்கிலத்தில் சொல்வழக்கொன்று உண்டு.‘பொன் மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் தான். 2012 காலப்பகுதில் இந்தியாவை உலக அரங்கில் அவமானப்படுத்திய பாலியல் வன்முறைக் கொடுமைகள், நிர்பாயா கூட்டு வன்புணர்வு என்று பல இக்காலத்தில் அரங்கேறியிருந்தன. மக்கள், பெண்கள், பாதிக்கப்பட்டவர்கள், செயற்பாட்டாளர்கள் வீதிக்கு வந்தார்கள். சட்டங்கள் வளைக்கப்பட்டன. இருப்பினும் திரைப்படத்துறை இன்னும் வேலியிலேயே இருந்தது. ‘ஆண்மையை’ நம்பி முதலீடு செய்தவர்களுக்கு வருமானம் முக்கியமானதாகவிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களையே பழிவாங்கும் கலாச்சாரச் சகதிக்குள் வேறு வழியில் பணம்பண்ணமுடியாது எனத் தயாரிப்பாளர் நினைத்திருக்கலாம்.

‘பொன்மகள் வந்தாள்’ அதை மாற்றியிருக்கிறது. திணறிக்கொண்டு வந்த குரல்களுக்குக் களம் கொடுத்திருக்கிறது. ‘அவமானத்தில் தற்கொலை செய்யும் பாத்திரமாகக்’ கதைகளை முடித்துவிடுவதால் வலியின் கொடுமை மனித மனங்களுக்குள் ஆழமாக இறங்க அனுமதிக்கப்படுவதில்லை. பழிவாங்கலுக்கான சந்தர்ப்பம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிட்டுவதில்லை. இதுதான் இதுவரை எமக்குமுன் புனைந்து படைக்கப்பட்ட டிசைன்.

15 வருடங்களுக்கு முன்னர் ஊட்டியில் நடைபெற்ற இரட்டைக் கொலையுடன் ஆரம்பமாகிறது படம். ஜோதி என்றொரு பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்தார் என்ற குற்றத்தில் கைதாகிறார். ‘சைக்கோ ஜோதி’ என நாமமிடப்பட்ட அப் பெண் ஒரு என்கவுண்டரில் கொல்லப்படுவதுடன் வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா) இவ்வழக்கை மீள எடுக்கிறார். அவர் தொழிலை ஆரம்பித்து முதலாவதாக வாதாடும் வழக்கு இது. பாக்கியராஜ் இதில் ஜோதிகாவின் தந்தையாக நடிக்கிறார். பெட்டிசன் எழுதுவதே அவரது தொழில். அதனால் அவரது பெயரே ‘பெட்டிசன் பேதுராஜ்’.

பொன்மகள் வந்தாள் படத்தை ஜேஜே ஃப்ரெடெறிக் இயக்கியிருக்கிறார். இது அவரது முதற் படம். பாலியல் வன்முறைக் கலாச்சாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பது ‘நீதியைத் தன் கையில் எடுத்துப் பழிவாங்கியபின் சிறைக்குப் போகும் ஹீரோ’ மூலம் என்று பழகிப்போன எங்களுக்கு இது ஒரு திருப்பம். நடப்பில் இருக்கும் நீதிமன்ற நெறிமுறைகளுக்கூடாகவே நீதியைப் பெற்றுக்கொடுக்கும் கதை.ஆரம்பத்திலிருந்தே வெண்பாவுக்கு இவ்வழக்கை விசாரிக்கவேண்டுமென்பதற்கான நியாயமான காரணமொன்று இருந்தது. ஆனாலும் அதன் நகர்வில் பல திருப்பங்களையும், ஆச்சரியங்களையும் தடைகளாக வைத்து படத்தை வளர்த்திருக்கிறார் ஃப்ரெடெறிக். பழங்காலத் துப்பறியும் த்ரில்லர் போல 15 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தின்போது என்ன நடைபெற்றிருக்கலாம் என்ற ஊகத்தை எம்முன்னால் கொண்டு ஓடுகிறார் ஃபிரெடெறிக். வெண்பாவும் அவரது தந்தை பேதுராஜும் இக்கொலைகளைப் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பொலிஸ் அதிகாரிகள், தப்பிப்பிழைத்தவர் என அத்தனைபேரையும் தேடிப்பிடித்து சான்றுகளைக் கோர்த்து வழக்கை வெற்றிகரமாகச் சிருஷ்டித்த இந்த வழக்குக்கான ஸ்கிறிப்ட் சாதாரணமான கைகளால் எழுதப்பட்டிருக்க முடியாது.

இயல்பாகவே ஜோதிகா ஒரு தன்னம்பிக்கை நிறைந்த, வெகுளிக்குணமற்ற, தோற்றத்தைக் கொண்டவர் என்ற வகையில் வெண்பா பாத்திரத்துடன் இயல்பாகவே இணைந்துவிடுகிறார். நீதிமன்ற உரையாடல்களை சற்று செயற்கையாகவும், நிஜமற்ற தன்மையையும் காட்டுவது போலுள்ளது. வெண்பாவுக்கு எதிராக வாதாடும் ராஜரத்தினம் (பார்த்திபன்) பணத்துக்காக குற்றவாளிகளை விடுவிக்கும் தனமையுள்ளவராகக் காட்டப்படுவது நமக்குப் பலரை ஞாபகப்படுத்துகிறது. பிரதாப் போத்தன் நீதிபதியாக வருகிறார்.

நாடக மேடைகளில் உடைமாற்று இடைவேளைக்காகத் தோன்றிய நகைச்சுவைப் பாத்திரங்கள் போல் சம்பந்தமில்லாத வலிந்து புகுத்தப்பட்ட சிரிப்புத் துண்டுகள் எதுவுமில்லை எனினும் பாக்கியராஜின் இயல்பான துணுக்குகள் கதையோட்டத்தைப் பாதிக்காது இழையோடுகின்றன.

கொலை நடப்பதற்கு முன் காமெரா எங்கோ இருக்கும் கத்தியைக் ‘குளோசப்பில்’ வலிந்து காட்டும் இயக்குனர் திறமைகள் இன்னும் தமிழ் சினிமாவில் மாறவில்லை. பார்வையாளர் தரம் மாறவில்லை என அதற்கும் ஒரு வியாக்கியானம் இருக்கலாம். இங்கும் வன்புணர்வுக்கு முதல் காற்சட்டையின் பட்டியை அவிழ்ப்பதுபோல் காட்டியேயாகவேண்டுமென்று ஃபிரெடெறிக் தீர்மானித்துவிட்டார். எத்தனையோ subtle ஆன முறைகளில் விவேகமாக அவற்றை எடுத்துச் சொல்ல இன்னும் முடியாமல் இருப்பது துர்ப்பாக்கியம். குழந்தைகளின் பார்வைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதிலும் இன்னும் கற்க நிறையவிருக்கிறது.

உணர்வுகளை ஆழமாகப் பதிப்பதற்கு சில வேளைகளில் shock value அவசியமாகிறது. விசேடமாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு மெதுவாக வெள்ளித்திரைகளுக்கு நகர்த்தப்படும்போது கொஞ்சம் மிகைப்படுத்தல் தேவைப்படுகிறது என்னும் உணர்வோடு பார்த்தால் இப்படம், இப்போது அவசியமான ஒன்று. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகக் காட்டி முடிக்கும் திரைப்படக்கலாச்சாரத்திலிருந்து பொன்மகள் வந்தாள் ஒரு விலக்கு.

செயற்பாட்டாளர் மனநிலையை அப்பால் தூக்கி வைத்துவிட்டுக் கலை, திரை நுணுக்கங்கள், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு, பாத்திரப் பொருத்தம் என்ற அம்சங்களில் இப்படம் வெற்றி. சமூகத்தில் இது மாற்றங்களை ஏற்படுத்துமானால் அது இரட்டிப்பு வெற்றி.

இப்படத்தை ‘ Amazon Prime ‘ இல் பார்க்கலாம். சூர்யா இப் படத்தை Amazon Prime இற்கு விற்றுவிட்டதால் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் இனிமேல் சூர்யாவின் படங்களைத் திரையிடப்போவதில்லை என் மிரட்டியுள்ளதாம். ‘நல்லது. 5G வந்ததும் பாத்துக்கலாம் பா’ எனச் சூர்யா கொடுப்புக்குள் நகைப்பது தெரிகிறது.

Amazon Prime for 30-day Free Trial

– மாயமான்