Entertainment

திரை விமர்சனம்: ஜன கண மன..

மாயமான்

நீண்ட நாட்களாக இருந்த ஆசை ஒருவாறு ஐந்தூசன் மூலமாக நேற்று நிறைவேறி விட்டது. அதுவரைக்கும் எந்த விமர்சனங்களையும் பார்க்காது, கேட்காது, வாசிக்காது இருந்த விரதமும் வெற்றி பெற்றுவிட்டது. ஜன கண மன பார்த்துவிட்டேன்.

ஜன கண மனவை ஹோசே / ஜோசே அந்தோனி & பிரிதிவிராஜ் போன்ற மலையாளிகளைத் தவிர வேறு யாராலும் இப்படி ஒப்புவித்திருக்க முடியாது. உண்மையில் இப் படத்துக்கு ‘My Birth Was My Mistake’ என்று பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பிரிதிவி ராஜ் நல்ல நடிகராக இருந்தாலும் பல மலையாள நடிகர்களைப் போலவே அவருக்கும் கொஞ்சம் தமிழ் வெறுப்பு உண்டென்று எங்கோ பார்த்த ஞாபகம். இந்த அறுந்த முற்சாய்வோடு ஜன கண மன போஸ்டரில் அவரது படத்தைக் கண்டதும் அதை உடனடியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அது தவறென்பதை செம அறையோடு இப் படத்தின் மூலம் பிருதிவிராஜ் சொல்லிவிட்டார். நன்றி பிரிதிவிராஜ்.

கமலஹாசனின் இந்தியன் படம் போல இதுவும் ஒரு ‘பரந்த இந்திய’ (Pan India) தேசியம் பேசும் படமாக இருந்தாலும், இந்தியனைப் போல அல்லாது, வருமானத்தைக் குறிவைத்த பல் மொழிப்படம் என்ற வகையில் ஜன கண மன விதைக்கும் தேசியம் 24 கரட் தரமுள்ளதல்ல. இந்தியாவில் பல் மொழிப் படங்களை எடுப்பது இப்போது வணிக ரீதியாக ஒரு ஃபாஷனாக வந்துவிட்டது. ஒரு கல்லில் பல மாங்காய்கள் இலாபம் தானே. ஆனால் அதற்காக ‘இந்திய தேசிய’ முலாமைப் பூசுவதில் எனக்கு உடன்பாடில்லை.

சத்ய ஜித் ராயின் வங்காள மொழிப்படங்கள் உலகப் பிரசித்தி பெற்றவையானாலும் அவை பெரும்பாலும் இந்தியாவின் வறுமையை உலகில் விற்றுப் பணம் பன்ணின என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்தது. ஆனால் தீபா மேத்தாவைப் போல உலகப் பணத்தில் இந்தியாவின் ‘சகதிகளைப்’ படமெடுத்து உலகுக்கு விற்றுச் சம்பாத்தியம் பண்ணியது போல் ராய் செய்யவில்லை. ராயின் படங்களில் சமூக மாற்றங்களுக்கான தேவை எப்போதும் இழையோடிக்கொண்டிருந்தது; படாடோபங்கள் இருக்கவில்லை. ஜன கண மன வில் சமூக மாற்றங்களுக்கான குரல் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் பலமாக ஒலிக்கிறது. இந்தியாவின் சகதிகளைப் புள்ளிவிபரங்களோடு நீதிமன்றத்தில் ஆக்ரோஷமாக ஒப்புவிக்கும் பிரிதிவிராஜ், சில வேளைகளில் ஜெய் பீம் சூர்யாவை ஞாபகப் படுத்துகிறார். இவ் விடயத்தில் பிரிதிவிராஜ் பிந்தியவராகையால் சூர்யாவை விடத் திறமையாகச் செய்கிறார்.

ஊழலுக்கும், குற்றச் செயல்களுக்கும் பிறந்த பிள்ளையே இந்திய அரசியல். அந்த இந்திய அரசியலை வைத்துப் பண்ணும் எந்தப்படமும் ஒரு pan India படம் தான். தமிழ் இந்தியாவிலும், இந்தி இந்தியாவிலும் அதே சாக்கடை அரசியல் தான். எனவே இப்படியான கதையை வைத்து இந்தியாவின் எந்த மொழியில் படத்தை எடுத்திருந்தாலும் அதற்கு sub title களின் தேவையில்லாது அனைவருக்குமே புரிந்து போயிருக்கும். ஜன கண மன நான்கு தென்னிந்திய மொழிகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு) படமாக்கப்பட்டிருக்கிறது. ஜன கண மன என்பது இந்திய தேசிய கீதத்தின் ஆரம்ப வரிகள். எனவே இது ஒரு Pan India தேசிய நோக்கம் கொண்ட ஒன்று என இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

முறையான நீதி, சட்ட பரிபாலனத்தை அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை என்ற கருத்தைக் காரணமாகக் காட்டித் தனி மனித போராட்டங்கள் மூலம் ( vigilante justice) நீதியைப் பெற்றுத் தரப் பலர் முயன்றதற்கான கதைகள் உலகம் பூராவும் பரந்து கிடக்கின்றன. Charles Bronson நடித்த Death Wish போன்ற படங்கள் இத்தகையவை. தமிழில் நகைச்சுவை நடிகர்களைத் தவிர மற்றெல்லோரும் இப் பாத்திரங்களை எடுத்துவிட்டார்கள். அநேகமாக இவை எல்லாமே வன்முறை மூலம் ‘நீதியை’ சமூகத்துக்குப் பெற்றுக் கொடுத்தவை. ஜன கண மனவும் இதே genre தான் ஆனால் இங்கு ன்முறையைத் தவிர்த்து நீதி மன்றத்தின் மூலம் அந்த தனி மனித போராட்டத்தை நிகழ்த்தி வெற்றி பெறுகிறார் பிரிதிவிராஜ்.

பொலிஸ் அதிகாரியாகவிருந்து நீதியைப் பெற்றுக்கொடுக்க ஊழல் அரசியல்வாதிகள் தடையாக இருந்த காரணத்தால் பிரிதிவிராஜ் தன் பொலிஸ் ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு வழக்கறிஞர் ஆடைகளை அணிந்து அதே ஊழல் அரசியல்வாதிகளைப் பழிவாங்குவதே கதை. Encounter Killings எனப்படும் ‘குற்றவாளிகள்’ எனக் கருதப்படுபவர்களை நீதிமன்றத்தினால் தண்டிக்க முடியாது என்ற போர்வையில் பொலிசார் கொன்றொழிக்கும் நடைமுறை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே நடைபெறுகிறது. இந்தியாவில் மட்டும் 2002-2008 காலப்பகுதியில் 440 கொலைகளும், 2009-2013 வரை 555 கொலைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என தேசிய மனித உரிமைகள் சபையின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இப்படியான ‘என்கவுண்டர்’ படுகொலைகள் பல அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகளிடம் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு பொலிசார் செய்கின்றனர் என்பதும் இக் கதையில் ஒரு அம்சம். இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியில் அது பல பரிமாணங்களைப் பெற்று இப்போதும் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. வழக்கம் போல ஊடகப் பிரகிருதிகளையும் லஞ்ச வலையில் போட்டுக்கொண்டு இப்படியான ‘என்கவுண்டர்’ படுகொலைகளை மக்கள் ‘சாக்லட்’ கொடுத்துக் கொண்டாடும் கலாச்சாரத்துக்கு இந்தியா எப்போதும் முன்னணி நாடுதான். பிரிதிவிராஜ் இந்த் இந்தியாவைப் பிய்த்துப் போடுகிறார்.

இப் படத்தின் பிரதான plot நீதிமன்றம் தனது கடமையைச் சரியாகச் செய்தால் பல பிரச்சினைகளுக்கு அங்கேயே தீர்வு காணலாம் என்பதாகக் கொண்டாலும், பல்கலைக் கழகங்களில் அரசியல்வாதிகளினதும் மேல் சாதியினரதும் தலையீடுகளாலும், ஊழல்களாலும் வறிய குடும்பங்களிலிருந்து வருபவர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட குலங்களிலிருந்து வருபவர்கள், அல்லது வெளிர் நிறத் தோல்களைக் கொண்டிராதவர்கள் போன்றவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவது போன்ற அநியாயங்களைச் சுட்டிக் காட்டுவது இப்படத்தின் sub plot. அத்தோடு, இந்தியாவில் மட்டுமல்ல பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் பெரும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எப்படிப் பொய்யான, திரிக்கப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல்வாதிகளின் கபட எண்ணங்களை நிறைவேற்றத் துணை போகின்றன என்பதுவும் இன்னுமொரு முக்கியமான sub-sub plot. பாத்திரத் தெரிவுகள் சமகால இந்து-இஸ்லாம் சிராய்ப்புகளை வைத்துத் தனியாக ஒரு தண்டவாளத்திலும் ஓடுகிறது. அந்த வகையில் இது ஒரு உலகத்தர சமூகப் போராட்ட முனைப்பைக் காட்டும் ஒரு படமாகவும் இதைப் பார்க்கலாம். என்ன இருந்தாலும், ஜெய் பீம் பார்த்தவர்களுக்கு இது ஒரு expanded version என்பது போன்ற நினைவை வரவழைக்கவும் சாத்தியமுண்டு.

படத்தில் பிதிவிராஜ் அரவிந்த் சுவாமிநாதன் என்ற பொலிஸ் & வழக்கறிஞர் வேடங்களிலும், மமதா மோஹன்தாஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு அரசியல்வாதிகளால் கொலைசெய்யப்படும் பேராசிரியராகவும், சுராஜ் வெஞ்சிரமூடி ஏசிபி சஜ்ஜன் குமார் என்ற பொலிஸ் அதிகாரியாகவும் திவ்யா என்ற தாழ்த்தப்பட்ட குலத்திலிருந்து வரும் கரும் நிறத் தோலைக் கொண்ட பழிவாங்கப்படும் பி.எச்.டி மாணவியாக சிறி திவ்யாவும் நடித்திருக்கிறார்கள். வேறு பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தாலும் மேற்கூறிய நடிகர்கள் இயற்கையாகவும் மிகையற்ற வகையிலும் நடித்து மனங்களைக் கவர்கிறார்கள்.

தமிழ் நாட்டு விஜய் கோஷ்டி மாதிரி அடி பிடி என்று ஒன்றும் இல்லை. மாணவர் போராட்டம் அடிக்கடி #கோதாகோகமவை ஞாபகப்படுத்துகிறது. அரசியல்வாதிகளினதும் பொலிசாரினதும் வஞ்சகப் புகழ்ச்சிக்கு அடிமையாகி ஏமாறும் மாணவர்கள் திரும்பத் திரும்ப ஒரே பாடங்களைச் சொல்லித் தருகின்றனர்.

டிஜியோ ஜோசே அந்தோனி என்ற பிரபல மலையாள இயக்குனரின் கைவண்ணம் படத்தில் தொடர்ச்சியாக மின்னுகிறது. இது பிரிதிவிராஜ் தாயாரித்த படம். அவருக்குப் பொருத்தமான வேடத்தை எடுத்திருக்கிறார். அருமையான நடிப்பு. ஜெய் பீமில் சூர்யாவின் நீதிமன்ற ‘யுவர் ஆனர்’ மொழிப் பிரயோகம் சற்றே கல் றோட்டில் ஓடுகின்றது. பிரிதிவிராஜின் வாதாடல், மொழிப் பிரயோகம் புதிதாகப் போட்ட கார்ப்பட் றோட்டில் புதிய காரில் ஓடுவது போல இருக்கிறது.

படத்தில் பல வசனங்கள் மனதை நெருடுகின்றன. அதிலொன்று: வழக்கமாக மூன்று வருடங்களில் PhD பட்டத்தைப் பெற்றுக்கொண்டு பறந்துவிடும் உயர்குல மாணவர்களைபோல் அல்லாது தாழ் குலத்திலிருந்து வந்து, மிகத் திறமையாகக் கற்ற திவ்யாவுக்கு ஏழு வருடங்களாகவும் பட்டத்தைக் கொடுக்க மறுத்த பல்கலைக்கழக உயர்குல பேராசிரியர்களின் நடவடிக்கைகளினால் மனம் வெறுத்து தற்கொலை செய்ய முன்னர் திவ்யா எழுதிவைத்த கடிதத்தில் “My birth was my mistake” என எழுதியதாக ஒரு வசனம் வருகிறது. இப்படியான தற்கொலைகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் வழக்கமென வழக்கறிஞர் பிரிதிவிராஜ் நீதிமன்றத்தில் கூறுவது சமகால இந்தியாவின் அழுக்குகளை முற்றத்தில் வைத்துத் துவைப்பது போலாகும். அந்த வகையில் பிரிதிராஜும் ஜோசே அந்தோனியும் சமூகப் புரட்சியொன்றைத் தொட்டுச் சென்றிருப்பதாகவே பார்க்கிறேன். படம் சம்பந்தமான எல்லா போஸ்டர்களிலும் ஆங்கிலம் மலையாள மொழிகள் மட்டுமே இருப்பதாக ஒரு சலனம். தவறாயின் திருத்திக் கொள்வேன்.

பாருங்கள். இதன் மூலம் விஜய் படங்களின் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம்.