திரை விமர்சனம் | சங்கத் தமிழன்

திரை விமர்சனம் | சங்கத் தமிழன்

Spread the love
திரை விமர்சனம் | சங்கத் தமிழன் 1

வழக்கமான கதை, பழக்கமான பாணி, பழக்கமான முகங்கள். ஒரு mass hero படம்.

ஒரு recycled genre. ஊர் மக்கள் கொண்டாடும் ‘கடவுளாக்கப்பட்ட’ கதை நாயகன். நீங்கள் நேற்றோ அல்லது முந்தநாளோ பார்த்த படத்தில் வந்த அதே காட்சிதானோ என்ற குழப்பமாக இருக்கக்கூடிய பத்துப் பேரை ஒரே நேரத்தில் அடித்து விழுத்திவிட்டு தூசியைத் தட்டிவிட்டு எழுந்து போகும் கதாநாயகன். கதாநாயகனைப் போல ஒரு ‘டபிள்’. பணக்கார வாலிபன், ஏழைக் குமரி காதல், பாட்டு எல்லாம் அப்படியே, எதிர்பார்த்தமாதிரியே உண்டு.

போதாவிட்டால், ஹீரோவுக்கு பில்டப் கொடுப்பதற்கு ஒரு கொமெடி சைட் கிக். கருப்பு எங்கள் நிறம் எனத் திரையிலும், தரையிலும் மார் தட்டும் அரசியல் ஹீரோக்கள் நிறைந்த தமிழ்த் திரையுலகில் கட்டாயப்படுத்தப்பட்ட, வடக்கிலிருந்து விசேடமாகத் தருவிக்கப்பட்ட ‘வெள்ளைத் தோல்’ அழகி மற்றும் கட்டுமஸ்தான, அநேகமான தருணங்களில் ஹீரோவைவிட அழகான வில்லன்கள் என்று – மனைவியை / கணவனை அருகில் வைத்துக்கொண்டு கடைக்கண்ணால் ரசிக்கவல்ல அத்தனையும் உண்டு, ஏமாற மாட்டீர்கள்.

கதை…? அதுவும் பெருமளவில் பழக்கப்பட்ட ஒன்றுதான். வில்லன், பெரும் பணக்காரன் தன் பையில் இருக்கும் பணத்தின் பசுமையைக்காக நிலத்தின் பசுமையை அழிப்பவன். சீமானின் தம்பி தங்கைகளை வம்புக்கென்று உள்ளே இழுத்துக் காசு பறிக்கவாக இருக்கலாம்.

கதை: செப்பு உலோகத் தொழிற்சாலை ஒன்றை நிறுவனமொன்று ஒரு கிராமத்தில் நிறுவுவதை அக் கிராம மக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். இதோ இருக்கிறேன் நான் என்று கிராமதவருக்கு ஆதரவாகப் பொங்கியெழுந்துவரும் ஹீரோ இறந்துபோக நிறுவனம் ஒரு உத்திக்காக ஹீரோவைப் போல் அசலாகத் தோற்றமளிக்கும் ‘டபிள்’ ஒன்றைக் கொண்டுவந்து…

பழக்கப்பட்ட விடயத்துக்குள்ளே வருகிறோமென்று தெரிந்தும் விஜே சந்தர் தன் நுணுக்கக் கையாள்தலினால் சற்று வித்தியாசமாகத் தெரிகிறார். அங்கிங்கு சோடை போகாமல் இட்டு நிரப்பும் விஜே சேதுபதியின் நடிப்பு இதர குறைகளையெல்லாம் ரசிகர் காண முடியாதபடி மறைத்திவிடுவதில்லையா? இங்கேயும் அதுதான்.

இந்த mass hero விளையாட்டெல்லாம் விஜே சேதுபதியின் laid-back persona வுடன் ஒத்துப் போவதில்லை. அது சீரியசாகப் போவதற்குமுன் மனிதர் மீட்டுக்கொள்வார். வழக்கமான mass heroes செய்கின்ற நிழலுருவ விளையாட்டெல்லாம் இங்கும் வருகிறது ஆனால் punchline களை டிலிவரி செய்யும் விதம் மூலம் அவர் ‘நான் அவர்களில்லை’ என்று நிரூபித்து விடுகிறார். அவரது வழக்கமான ‘அறிவுரை சொல்லும்’ தந்தையார் / பெரியண்ணர் role , முகநூலில் பெட்டிக்குள் டிலிவரி செய்யப்படும் புத்திமதிகள் போல், தவறாமல் வருகிறது. well done பெரியண்ணா!

முருகன் (விஜே சேதுபதி) நடிகராக வரவேண்டுமென ஆசைபடுபவர். கமலினி (ராஷி கன்னா) பணக்காரத் தொழிலதிபரின் (ரவி கிஷான்) குமரி. இருவரும் காதலிக்கிறார்கள் (சொல்லத் தேவையில்லை).

தொழிலதிபர் தேனீயில் ஒரு செப்புத் தொழிற்சாலையை நிறுவ முயற்சிக்க அக் கிராமத்தில் எதிர்ப்பு உருவாகிறது. தமிழ் அப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, தொழிற்சாலை அமைவதை நிறுத்தி விடுகிறான்.

அக் கிராமத்து அரசியல்வாதி குழந்தைவேலுவைப் (அஷுட்டோஷ் றணா) பாவித்து தமிழையும் அவனது குடும்பத்தையும் அழித்துவிடத் தொழிலதிபர் முயற்சிக்கிறார். முருகந் தோற்றத்தில் அசல் தமிழை மாதிரி இருப்பவன். கதையின் திருப்பம் இப்பொழுது உங்களுக்குப் புரிய வந்திருக்கும். தமிழைக் கொலை செய்துவிட்டு முருகனைத் தமிழாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. முயற்சி வெற்றி அளித்ததா?

சூரி இடைக்கிடை வந்து தன் நகைச்சுவை இடைவேளையை நிரப்புகிறார். முருகன் – கமலினி காதல் காட்சிகள் கொஞ்சம் வித்தியாசம். படம் வகுப்பெடுக்க முனையவில்லை. வில்லன்களால் ஹீரோவுக்கு ஆபத்து வரப்போகிறதே என்ற பயத்தை ரசிகர்கள் மனத்தில் எழுப்ப இயக்குனர், சமயங்களில், மறந்துவிடுகிறார். பாத்திரத் தெரிவும் பயப்படுத்தும் வகையில் இல்லை.

சேதுபதிக்காகப் பார்க்கலாம்.

Print Friendly, PDF & Email