Arts & Entertainmentமாயமான்

திரை விமர்சனம்: இறுகப்பற்று

தமிழ் நாட்டில் சமீப காலங்களில் அசுர வளர்ச்சி கண்டுவரும் திறமைத்துவத்தின் (?) (meritocracy) பாய்ச்சலின் இன்னுமொரு அவதாரம் (manifestation) இறுகப்பற்று திரைப்படம். வருவாயில், இன்னும் வானளாவ வர்ந்துகொண்டிருக்கும் விஜய்யின் லியோ போன்ற குப்பை மேடுகளின் சிகரத்தைத் தொடக்கூடிய நிலைக்கு இவை வருவதற்கு பல வருடங்கள் பிடிக்குமெனினும் புதிய சிந்தனைகளுடன் தரமான படங்களை எந்தவித சமரசங்களுமின்றித் தயாரித்து வெளியிடும் துணிச்சல் அதிகரித்து வருவது பாராட்டத்தக்கது.

என்னவோ இந்தியா என்றால் ஐ.டி. நாயக நாயகிகள், கழுத்தில் பட்டி, இளம் துடுக்கு, அழகு, கவர்ச்சி, நகரத்தில் மாடி வாழ்க்கை, மோட்டர் பைக், செல் ஃபோன், இரவு றெஸ்டோரண்ட் வாழ்க்கை இத்தியாதிகள் இல்லாத கதைகள் இருக்க முடியாது என்பது இந்த புதிய தலைமுறையிலும் தொற்றிவிட்ட வியாதி தான். இருந்தாலும் குத்துப் பாட்டு, பரட்டைத் தலை, தோடுடை செவியர்கள், தலை கொய்தல், அசிட் உலைகளில் உடல்களை முக்குதல் போன்ற காட்டு மிராண்டிப் படங்களுடன் ஒப்பிடும்போது இவற்றை ரசிக்கலாம், பார்க்கலாம்.

இறுகப்பற்று பார்க்கும்போது நான் தமிழ்நாட்டில் நிற்பதாக உணரவில்லை. ரொறோண்டோ நகர் மையம், லண்டன் ஓக்ஸ்ஃபோர்ட் ஸ்ட்றீட், நியூ யோர்க் மடிசன் சதுக்கம் போன்று ஏதோ ஒரு நகர் மையத்தில் 20-30 களுடன் வேலை முடிந்தபின் சல்லாபமடிக்கும் உணர்வே ஏற்பட்டது. இப்படியான படங்களைப் பார்க்கும் மேலைத் தேசத்தவர் மனங்களில் தமிழ்நாடு பற்றிய உயரிய எண்ணம் ஏற்படக் காரணமாகிறது என்பது நல்லுணர்வு தரும் விடயம்.

அதற்காக தமிழ்நாட்டின் கிராமங்கள், வயல்கள், துரவுகள், மாடுகள், புழுதி, ஒப்பனையில்லாத தூய அழகு, நளினம் ஆகியன அன்னியமாகி விட்டன என்று சொல்ல வரவில்லை. முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை போன்ற நல்ல கதைகளுடன் அவை வந்தால் ஏற்புடையதே.

இறுகப் பற்று என்ற பெயரே கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் படம் முடியும்போது அதற்கான விளக்கம் கிடைத்துவிடுகிறது. கதை உளவியல் சம்பந்தப்பட்ட, இக்கால இளைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான ஒன்று, குறிப்பாகப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கு. திருமணமான இளைய தம்பதிகளுக்கிடையேயான அரசல்கள் புரசல்கள் அத்துமீறிப் போய் மண முறிவில் வந்து முடியாது காப்பாற்றுவதற்கு மித்ரா மனோகர் என்ற திருமணமான இளம் மனவியல் நிபுணர் (ஷ்ரத்தா சிறீநாத்) படும் அவலங்களைச் சுற்றியே கதை வலம் வருகிறது.

அவரிடம் மனவியல் ஆலோசனை பெற வரும் இரண்டு இளம் குடும்பங்களிடையே வழக்கமான குடும்பங்களில் ஏற்படும் இயல்பான பிரச்சினைகள் மித்ராவின் அலுவலகப் படிகளை ஏறிவிடுவதும் அவற்றை அவர் தனது வீட்டிற்குக் கொண்டுபோய் தனது குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தகர்ப்பதுமெனக் கதை பல பரிமாணங்களில் விரிவடைந்தாலும் ‘அட இது நம்ம வீடுகளிலேயே நடப்பது தானே. நாங்கள் எப்படிச் சமாளித்தோம் அல்லது எப்படி உறவுகளை முறித்துக் கொண்டோம்’ என்று எம்மையே சுய பரிசோதனை செய்வதற்கும் வழி வகுக்கிறது.

நடிகர்கள்: மித்ரா (ஷ்ரத்தா சிறீநாத்) – மனோகர் (விக்ரம் பிரபு, பவித்ரா (அபர்ணதி) – ரங்கேஷ் (விதார்த்), திவ்யா (சானியா ஐயப்பன்) – அர்ஜுன் (சிறீ) மற்றும் மறைந்த மனோ பாலா.

நடிப்பு: ஷ்ரத்தா, சானியா, அபர்ணதி, விதார்த், விரம் பிரபு, சிறீ என்ற வரிசை என்னுடையது. ஷ்ரத்தாவின் எளிமையான ஆர்ப்பாட்டமில்லாத, ஒப்பனைகள் காணப்படாத இயற்கையான ஒரு professional இற்கான தோற்றம் அவரது பாத்திரத்துக்கு ஒத்துப் போகிறது. ஐ.ரீ. உடலுக்குள் தத்தளிக்கும் ஒரு வியாபாரியின் தோற்றம் விதார்த்திற்கு ஒத்துப் போகிறது. சானியாவின் தோற்றத்தில் 90% மான நேரம் சோகமான முகம். அதனால் சிரிக்கும்போது மட்டும் அவரை ரசிக்க முடிகிறது. கவலையை வெளிக்காட்டுவதில் அவர் உச்சத்ம் பெறுகிறார். அபர்ணதி சோகத்தின் மத்தியிலும் குறும்பையே அதிகம் காட்டுகிறார். பக்கத்து வீட்டுப் பெண் குப்பை கொட்ட வரும்போது பார்க்கும் கடைக்கண் பார்வையை அவரிடம் பார்க்கலாம். விக்ரம் பிரபுவிடம் அதிக பாவ வேறுபாடுகளைக் காணமுடியவில்லை. அலுவலகத்தில் ஓவர் டைம் செய்துவிட்டு வரும் களைப்பு போன்றது அவரது நடிப்பு. மனோ பாலா? ஒரு தேவையற்ற செருகல்.

இயக்கம்: எழுத்து / இயக்கம் யுவராஜ் தயாளன். கேள்விப்படவில்லை. ஆனால் மண்டைக்குள் சரக்கு இருப்பது தெரிகிறது. பாத்திரத் தேர்வு அருமை. பாட்டுகள் பின்னணியில் மட்டுமே ஒலிக்கின்றன. கருத்துள்ள வசனங்கள். தேவையற்ற, ரசிகர்களை உசுப்பேத்தும் முயற்சிகள் கிடையவே கிடையாது. இது படித்த, நடுத்தர வர்க்கத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு படம். விஜய் ரசிகர்களுக்குப் புரியாது, ஏமாற்றம் தரும்.

மேற்கத்தைய உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மனவியல் தத்துவங்களுக்கும் நம்மூர் பாட்டிகள் சொல்லும் கிராமிய ஒளடதங்களுக்குமிடையேயான ஒரு சிறு உரசலாக வந்துவிடுமோ என்று சிலர் பயப்படக்கூடும். ஒரு மனவியல் பேராசிரியரின் கற்கை நெறிக்கான template இப்படமென்ற உணர்வும் வந்து போனது.

இடைக்கிடை கதையை விட்டு விலகாத திருப்பங்கள் வருகின்றன. முடிவில் ஷ்ரத்தாவும் விக்ரம் பிரபுவும் பிரி……

ஏன் தேவையற்ற பிரச்சினை. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! Rating: 4/5