Entertainment

திரை முன்னோடி | ட்றைடென் வீ.பாலசிங்கத்தின் ‘ஒரு ராஜாளியின் கதை’


ஒரு ராஜாளியின் கதை

ஒரு ராஜாளியின் கதை
ஒரு ராஜாளியின் கதை

இது ஒரு சீன மொழிப் படம்; சீனாவில் படமாக்கப்பட்டது; சீனர் ஒருவர் தயாரிப்பாளர் ஆனால் இயக்குனர் மட்டும் ஒரு தமிழர், ரொறோண்டோவைத் தளமாகக் கொண்ட ட்றைடன் வீ. பாலசிங்கம்.

****

படத்தைப் பற்றியோ அல்லது படமாக்குதலைப் பற்றியோ அல்லது படம் காட்டுவதைப்பற்றியோ ஆலாபனை செய்வதற்கு முதல் ஒரு சம்பந்தமில்லாத கதையொன்றை முதலில் சொல்கிறேன். அதன் தலைப்பும் ‘ஒரு ராஜாளியின் கதை’ தான்.

****

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். ஒருநாள் அவருக்கு இரண்டு ராஜாளிகளை யாரோ பரிசாகக் கொடுத்திருந்தார்கள். அப்படி அழகான ராஜாளிகளை அவர் முன்னெப்போதும் கண்டிருக்கவில்லை. அவை இரண்டையும் அரசர் தனது முதன்மை ராஜாளிப் பயிற்சியாளரிடம் கொடுத்து பயிற்றுவிக்கச் சொன்னான். (சிறு விலங்குகளை வேட்டையாட ராஜாளிகளைப் பயிற்றுவிப்பது இக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு பழக்கம்).

மாதங்கள் பல கழிந்த பின்னர் ஒருநாள் அப் பயிற்சியாளன் அரசனிடம் சொன்னான், “அரசே இரண்டு ராஜாளிகளில் ஒன்று வானளாகப் பறந்து திரிகிறது. ஆனால் மற்றயது வந்த நாளிலிருந்து, இருக்கும் மரக்கிளையை விட்டு அசைவதாக இல்லை” என.

அரசர் நாட்டிலுள்ள மருத்துவர்களையும், மந்திரவாதிகளையும் அழைத்து அந்த அசையாத ராஜாளியைப் பறக்கச் செய்வதற்கு முயற்சித்தார். எதுவுமே பலனளிக்கவில்லை.

அரசருக்கு கோபம் வந்துவிட்டது. தனது சபையைக் கூட்டி, கிராமத்துக்குள் போய் ஒர் கமக்காரரை அழைத்துவருமாறு தன் காவலருக்கு உத்தரவிட்டார். அன்றே ஓர் கமக்காரரிடம் கடமை ஒப்படைக்கப்பட்டது.

மறுநாள் அரசர் தன் சாளரத்தூடு அவதானித்தார். இரண்டு ராஜாளிகளும் உயர வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தன. “இந்த அற்புதத்தைச் செய்தவனை அழைத்துவாருங்கள்” என அரசர் கட்டளையிட்டார்.

சபையில் முன்னின்ற கமக்காரனிடம் அரசர் கேட்டார் ” எப்படி நீ அந்த ராஜாளியைப் பறக்கச் செய்தாய்?”

தலையைக் குனிந்தபடி அந்த கமக்காரன் சொன்னான் ” அது மிகவும் இலகுவானது அரசே. அந்த ராஜாளி இருந்த மரக்கிளையை வெட்டி விட்டேன். அவ்வளவுதான்” என்றான்.

கப்பல் எப்படித் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்காகச் செய்யப்படவில்லையோ அதுபோலவே, ராஜாளியும் கிளையில் உட்கார்ந்திருப்பதற்காகப் படைக்கப்படவில்லை.

தெரிந்த, பரிச்சயமான, இலகுவான, வசதியான வலயத்தில் பாதுகாப்பாக வாழ்வதைவிடப் பெரியதொரு வாழ்வு அதற்கப்பாலும் இருக்கிறது. இறக்கைகளை வைத்துக்கொண்டு பறக்காமல் இருப்பது அபத்தம் என்பதே இக்கதையின் moral.

****


ட்றைடன் என்ற இளம் தலைமுறை ராஜாளி இருந்த கிளையை யார் எப்போ வெட்டினார்கள் என்று தெரியாது. அது உலகை வலம் வருவது மிகவும் மகிழ்ச்சி.

திரைக் கண்ணாடிக்குள்ளால் நான் ட்றைடெனைப் பற்றி அறிந்ததைவிட அவரது எழுத்தாற்றலால் கவரப்பட்டவன். சமூகத்தின் அற்ப விகாரங்களைவிட, கழுகுப் பார்வையால் அதன் contextual observation மூலம் அவர் முன்வைக்கும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்தது. அவரது கையில் தூரிகை இருந்தாலென்ன, புகைப்படக் கருவி இருந்தாலென்ன finished product எப்படியிருக்குமென ஊகிக்கலாம்.

****

ட்றைடென் வீ. பாலசிங்கத்தின் “ராஜாளியின் கதை” சிறு வயது முதல், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு சிறுவன் இறுதியில் தன் முயற்சியால் வளர்ந்து தன் பெறுமதியை உணர்த்துவது பற்றியது. இந்த ஆலாபனையுடன் இதை விட்டு விடுகிறேன். பண் விரிவாக்கத்திற்குப் போகவில்லை.

படத்தின் முன்னோடிகள் எப்போதும் சாளரப் பார்வைகளை மட்டுமே தருகின்றன, சோடிக்கப்பட்ட மணமகன் போல, என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.

ட்றைடன் Toaster என்றொரு குறும்படமொன்றை இயக்கியிருக்கிறார்; ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் எடுக்கப்பட்டது; பார்த்திருக்கிறேன். அதற்கு நல்ல விமர்சனம் இருந்தது. பண்படுத்தப்பட்ட நிலம் செழிப்பையே தரும் என்ற நம்பிக்கையுடன் இதையும் பார்த்தேன், ஏமாறவில்லை.

இருந்தாலும் சில கேள்விகள் முளைத்தன. ட்றைடனுடன் தொடர்பு கொண்டு இப் படம் பற்றிய சில தகவல்களையும் பெற்ற பின்னரே இதை எழுதுகிறேன். இது organic என்பதை நம்பலாம். பதில்கள் அவரது மொழியில் இங்கே; கேள்விகளை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்:

ப: நான் வேற்று மொழிகளில் படங்களை எடுப்பதை விரும்புவதற்குக் காரணம், ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை மூன்றாமவரின் கண்களூடு பார்ப்பதன் மூலம் வெவ்வேறு பின்புலங்களில் அப்பிரச்சினைகள் பார்க்கப்படுவதால் கிடைக்கும் அனுபவத்தைப் பெறுவதற்காக.

ப: இப் படத்தின் உரையாடல்கள் ஆங்கிலத்திலும், சீன மொழியிலும் எழுத்தோட (sub-titles) விடப்படும். சீனப்படங்களில் சீன மொழியில் உரையாடல்கள் எழுத்தோடவிடப்படவேண்டும் எனபது நியதி. அப்படங்களின் பார்வையாளர்கள் சீன சித்திர எழுத்துக்களைப் பார்ப்பதோடு ஒலி வடிவத்தில் கேட்டு அர்த்தங்களைப் புரிந்துகொள்வதை விரும்புகிறார்கள்.

ப: இப் படத்தில் நான் இயக்குனராக மட்டுமே பணியாற்றியுள்ளேன்.

ப: இப்படத்தின் தயாரிப்பாளர் லி ஜி வென்

ப: தற்போதைய சூழலில், இப்படம் எங்கு, எப்போ திரையரங்குகளுக்கு வருமென்று உறுதியாகக் கூற முடியாதுள்ளது. அது தயாரிப்பாளரைப் பொறுத்தது.

ப: தமிழில் உரையாடலை எழுத்தோடச் செய்யலாமா என்பதுபற்றி யோசிக்கிறேன். அது ஒரு கடினமான காரியம்.

ப: சீனாவில் படமெடுப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். முதலில் ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் கதை ஒன்றைப் படமாக்குவதாக இருந்தது. சீன அதிகாரிகளிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் ‘ராஜாளியின் கதை’க்கு அனுமதி தந்தார்கள்; தேவையான இடங்களில் அனுமதிப்பத்திரங்கள் எடுப்பதில் இருந்து ‘எக்ஸ்ட்றா’ நடிகர்களை ஒழுங்குசெய்வது வரை உதவி செய்தார்கள்.

படைப்பின் அனுபவத்துக்கு அப்பால், மனித வளத்தின் (man power) சக்தி என்ன, அதன் ஆற்றல் என்ன என்பதைப் பாடமாகப் படித்ததே இதில் முக்கியம்.

இரண்டு விபத்துகள்  நடந்தன  – ஒன்று:  கமெரா  முற்று முழுதாக  பாவனைக்கு  உதவாமற் போக நேர்ந்தது. வெறும் 24 மணி  நேரத்துக்குள்  தலைநகர்  பெய்ஜிங்  இல்  இருந்து  புதிய  கமரா  வரவழைக்க பட்டது.

இரண்டாவது: இயக்குனர்  விபத்து ஒன்றில்  மணிக்கட்டில்  முறிவு  ஏற்பட்டு  படப்பிடிப்பு  முடிந்த  பின்னரே வைத்திய  சாலைக்கு  செல்ல  முடிந்தது.

சீன மொழியில்  படைப்புகள்  செய்வது  வேறு  மொழிகளில்  இருந்து  மிக  வேறுபட்டது. சீனம்  பண்பாடுகளுக்கு  அப்பால்  எல்லாவற்றிலும் சங்கேதமாகவும்  குறியீட்டு  விளக்கம்  சார்ந்தும்  அதிகம் கவனமெடுக்கும்  ஒரு மொழி .  இதனால்  மேற்கத்தைய சினிமாவின்  பார்வையுடன்  அணுக  முடியாதுள்ளது.இயக்குனரைப் பற்றி
இயக்குநர் ட்றைடன் வீ.பாலசிங்கம்

அடிப்படையில்  ஒரு படத்தொகுப்பாளர்.  
விருதுகள்:  சிறந்த இளம்  இயக்குனர் சிறந்த  படத்தொகுப்பாளர் 
படைப்புகள்:  Toaster – ஆங்கிலம் ,அரபு;  Story of a falcon – சீன மொழி
பயிற்சிகள்: சினிமாட்டோகிராஃபி  –  தென்னிந்திய  சினிமாவில்  available  source  லைட்டிங்  பாணியில் தேர்ந்த குரு விஜய் ஆம்ஸ்ட்ரோங்கிடம்  முறைப்படி  கற்று  வருகிறார்.

****

அப்போ படத்தைப் பற்றி?

இந்த முன்னோடி அதிகம் துப்புகளைத் தரவில்லை.

Theme song நன்றாகவிருக்கிறது. ஆனால்… சீனத்தின் பாரம்பரிய இசை வாத்தியங்களான erhu, pipa, guzheng, dizi flute போன்றவற்றின் ஆதிக்கம் போதாது. சீனத்தின் முத்திரை வாத்தியங்களான குழல், நரம்பு வாத்தியங்கள் இல்லாமல் jazz மேலோங்குவது போல ஒரு உணர்வு. kind of fusion feeling, unless it is intentionally done.

அந்த filtered lighting கதைக்கு ஒரு சோகமான பின்னணி இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இறுதியில், ஒடுங்கியிருந்த ஆற்றலை வெளிக்கொணரும், பாத்திரத்தின் அந்த adrenaline pumping moment, வழக்கமான ஆரவாரப் பின்னணியின் இரைச்சல், கூச்சல் இல்லாமை – ஒரு வித்தியாசமான, பிடி கொடாத கதை சொல்லும் தன்மையைக் காட்டுகிறதா? தெரியாது.

மொத்தத்தில்… முழுவதையும் பார்க்க வேண்டும்.

உங்கள் விவேகத்தில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. நீங்கள் இருக்கும் கிளையை வெட்டி விடுகிறேன். பறவுங்கள், பாருங்கள். அப்போதுதான் உங்கள் ஆற்றல் உங்களுக்கே புரிய வரும். After all, அதுவே தான் இந்தப் படம்.

இதே தரத்தில் தமிழ்ப் படமொன்றை ட்றைடன் தருவாராகில் ஒப்பிடுவதற்கு இலகுவாக இருக்கும். ஆரஞ்சுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன புத்தி அப்பிள்களை அளக்க முடியாமல் அவதிப்படுகிறது. Surrender!

மாயமான்