திரையலசல் – பாகம் 1 பொன்னியின் செல்வன்
கனடா மூர்த்தி
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்பட அலசல் – பாகம் 1

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கான முன்னோட்ட போஸ்டரை ஜனவரி 2ந்திகதி வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு வாள். அதன் கைப்பிடியில் புலி. Tagline: ‘Beginning of a Golden Era’ – பொற்காலத்தின் தொடக்கம்!
மணிரத்தினத்தின் இயக்கத்தில், ஈழத்தமிழர் ‘லைகா’ சுபாஸ்கரனின் தயாரிப்பில் வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 800 கோடி இந்திய ரூபாய்கள்வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப் படம் ஒரு காவியமாக வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. காரணம்? எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்! தமிழர் வரலாறு குறித்த பெருமிதத்தை உருவாக்கும் வகையில் படம் இருக்கும் என்றே நம்பலாம். இலக்கியம் திரைப்படமாக ஆகும்போது ஏற்படும் பல பிரமிப்புக்களையும் விமர்சனங்களையும் நிச்சயம் மணிரத்தினத்தின் இந்த திரைப்படத்திலும் நாம் எதிர்பார்க்கலாம். (ஈழத்தமிழரின் ஒருபகுதி “படத்தை பகிஸ்கரியுங்கோ” எண்டும் ‘வழக்கம்போல’ கிளம்பக்கூடும்.)

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படித்தவர்களுக்கு அந்தக் காப்பியம் எப்படி திரைப்படமாகும் என்ற பெரும் பிரமிப்பு இருக்கும். கல்கி தந்த அனைத்துப் பாத்திரங்களையும் திரைப்படமாக உலா வர வைக்க முடியுமா? அந்த அளவிற்கு கதையில் சரித்திர நாயகர்கள் உலா வருவார்கள்.
எம்ஜியாரும், கமல்காசனும் பொன்னியின் செல்வனை எடுக்க நினைத்தபோது தாங்களே வந்தியத்தேவனாக நடிக்க திட்டமிட்டனர். பிறகு திரைக்கதையே அமைக்க முடியாமல் கைவிட்டனர். (கல்கியின் பொன்னியின் செல்வனை மாற்றமின்றி அப்படியே எடுப்பதென்றால் – அதை சாத்தியமாக்குதென்றால் – 300 மணிநேர படமாகத்தான் அது உருவாக வேண்டும்.)
இரண்டாவது சோழ சாம்ராஜ்ய காலத்து ஆரம்பப்பகுதி குறித்ததே கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’!! இப்போது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தெரிந்துகொண்டு, படத்தின் நடிகர் தேர்வையும் கவனித்துப்பார்த்தால் முழுக்கதையும் படமாக வருவதற்கு வாய்ப்பு இருக்காது.
நடிகர் விக்ரம் ஆதித்திய கரிகாலராக நடிப்பதையும், சிங்கள நடிகர் (ஷியாம் பெர்னாண்டோ) நடிப்பதையும், ஐஸ்வரியா ராய் இரண்டு பாத்திரங்களில் நந்தினியாகவும், மந்தாகினியாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம்ரவி அருண்மொழி வர்மன் (ராஜராஜசோழன்) ஆகவும், திரிஷா குந்தவி நாச்சியாராகவும் நடிப்பதை வைத்து… “கல்கியின் பொன்னியின் செல்வன் கதையின் ஒரு சிறு பகுதியே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனாக உருவாகக்கூடும்” என்று நினைக்கிறேன்.
கல்கியின் பொன்னியின் செல்வன் கற்பனையோடு கலந்து எழுதப்பட்டதென்றாலும் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக இருக்கும். ராஜராஜசோழனின் தந்தையான சுந்தர சோழனின் காலத்துச் சம்பவங்களையும், தமயனான ஆதித்திய கரிகாலன் (விக்ரம்) சம்பவங்களையும், சிங்கள மன்னனான மகிந்தாவின் கதையையும்தான் மணிரத்தினம் தனது திரைக்கதைக்காக தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு உண்டு.
மணிரத்தினம் தனது படத்தின் கதையை முதலில் சொல்லமாட்டார்… அதுக்காக விட்டுவிடலாமா.. சிங்கள நடிகர் ஷியாம் பெர்னாண்டோ மகிந்தாவாக நடிக்கத்தான் வாய்ப்பு உண்டு. சிங்கள நடிகர் ஷியாம் பெர்னாண்டோ? ரொறன்ரோவில் காட்டப்பட்ட பிரசன்ன விதானகேயின் சிங்களப் படமான “With You, Without You” படத்தில் (தமிழில் “பிறகு” என்ற தலைப்பில்) பெண் புலிப்போராளியை திருமணம் செய்தவராக நடித்தாரே அவர்தான்!
ஈழத்தில் அருள்மொழிவர்மனையும் வந்திய தேவனையும் சில ஆபத்தில் இருந்து காப்பாற்றுகின்றாள் ஊமை பெண் மந்தாகினி (ஐஸ்வரியா ராய்). சுந்தர சோழர் காதலித்து – ஆனால் மணமுடிக்காத – ஊமை பெண் மந்தாகினிக்கும் சுந்தர சோழருக்கும் பிறந்தவளே நந்தினி (அதுவும் ஐஸ்வரியா ராய்). ஈழத்தில் வாழ்கிறாள்.
கதையை படித்தவர்களுக்கு இந்தப் பகுதிகளும் நன்கு தெரிந்திருக்கும்: “மதுரையில் பாண்டிய மன்னன் வீர பாண்டியன் அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது சோழர்கள் பாண்டியருடன் மோத, வீர பாண்டியனுக்கு உதவுவதற்காக சிங்கள மன்னன் மகிந்தா இலங்கையில் இருந்து ஒரு படையை மதுரைக்கு அனுப்பி வைக்கிறான். சேவூர் என்னும் இடத்தில் பாண்டிய படையையும் மகிந்தாவின் படையையும் ஆதித்ய கரிகாலனின் (விக்ரம்) சோழர் படைகள் போரிட்டு வெற்றி கொள்கின்றன.
வீர பாண்டியன் படையிழந்து முடியிழந்து ஓடித்தப்புகிறான். பாண்டிய மன்னனுக்கு படை உதவி வழங்கிய சிங்கள மன்னன் மகிந்தாவிற்குப் பாடம் புகட்டும் நோக்கில் சுந்தர சோழர் ஒரு படையை இலங்கைக்கு அனுப்புகிறார். அங்கு எதிர் பாராத விதமாக சோழர் படை மகிந்தாவிடம் தோல்வியடைய வேண்டி வருகிறது.
இதை கேள்வியுற்ற வீர பாண்டிய மன்னன் மீண்டும் சோழர் படையுடம் மோதுகிறான். இந்தச் சண்டையின்போது ஆதித்த கரிகாலன் (விக்ரம்) கையால் வீர பாண்டியன் தலை இழந்து உயிர் துறக்கிறான்.
அதன் பின் பாண்டிய நாடு சோழர் சாம்ராஜ்யத்தில் ஐக்கியம் ஆகிறது. வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகாலன் (விக்ரம்) சோழர் சாம்ராஜ்யாத்தின் இளவரசராக ஆக பட்டம் சூட்டப்பெறுகிறார்.”
கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் இவ்வளவும்தான் – இந்த சிறு பகுதியே – என்னைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் படமாக வர வாய்ப்பு இருக்கிறது. (வந்தியத்தேவன் பகுதி கார்த்தி படமாக பாகம் 2, பாகம் 3 என்றெல்லாம் போகலாம்.)
மணிரத்தினத்தால் ஒரு சிங்கள நடிகரை தேர்ந்தெடுக்க முடிந்திருக்கிறது. ஈழத்தமிழர் எவரையும் தேர்ந்தெடுக்கும் நிலையில் கதையும் இல்லை… நாமும் இல்லை.